Thursday, December 04, 2008

நீ வரும் நாளுக்காக



உன் அருகாமையில் என்
கர்வம்தனை புதைத்துவிடு.

என்னை அணைத்தே துண்டு
துண்டாய் சிதைத்துவிடு.

என்னை முழுதுமாய் குழைத்து
கண்மையாய் கரைத்துவிடு.

விரலினால் தீண்டி என்
விரதங்கள் தீர்த்துவிடு.

உன் கொலுசாய் என்
இதயத்தையே துடிக்கவிடு.

கரங்களில் என் முகமேந்தி
காலமெல்லாம் வெடிக்கவிடு.

மடிந்து நான் விழுகையில்
மடிதனை தந்துவிடு.

நான் வீடுதிரும்பும் பொழுதுகளில்
வாசலுக்கு வந்துவிடு.

உயிரெல்லாம் உயிர்த்து இருக்கும்
உன்னத தோழியே!
பிரிவில் செல்லமாய் கொன்று
பிரியுது ஆவியே!

எப்போதடி வரப் போகிறாய்?

அணுஅணுவாய் என்னுள்
ஆராய்ச்சிகள் செய்ய.
அன்பால் ஆயுளெல்லாம்
அகத்தை கொய்ய.

Tuesday, December 02, 2008

தேடல்


உனக்கான என் தேடலில்
முதன்முதலாய் தொலைந்தவன்
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடு என்னையும்.

காலம் மறைத்து வைத்த
உன்னைக் கண்கள் கண்டறிந்த
சமயம் உன்னிடத்தில் காதல்
இருக்கவில்லை.

யுகங்களாய் சேமித்தக் காதல்
நொடிப் பொழுதில் கரைவது
தெரிந்ததால் நான் உண்மை
மறைக்கவில்லை.

தொடமுடியா தூரத்தில் தெரியும்
மாலைப் பரிதியின் மயக்கும்
பிம்பம் ரசிக்கும் நீ உன்
அருகாமையில் என் நேசத்தை
உணராமல் போவது இன்றும்
எனக்கு வியப்பே!

கட்டிப் போடுவதற்கு காதல்
உன் வீட்டு நாய்க்குட்டி அல்ல.
வெட்டி விடுவதற்கு காதல்
களைச் செடியும் அல்ல.

உன் மௌனம் தாண்டி
ஒருநாள் காதல் வெளிவரும்.

காத்திருக்கிறேன் கண்மணி.

காடு


காரிருள் குடைந்த
காடுகளின் காதுகளின்
ஊதும் புல்லாங்குழல்
வண்டுகளின் துளைகள்.

கதிரவனைக் கூட
அனுமதிக்காத காடுகள்
எப்படியோ காற்றை மட்டும்
அனுமதிக்கின்றன!

அச்சமா துணிச்சலா
தெரியாமல் கூவுகின்றன.
குயில் குஞ்சுகள்.

அச்சம்தான் என
உறுதிப் படுத்தி
பிளிறுகின்றன களிறுகள்.

படபடப்பில் துடிப்பதை
கொஞ்சம் நிறுத்தி
வைக்கின்றன மெல்லின
மாக்களின் இதயங்கள்.

திடீர் நிசப்தம்.
மொட்டுகள் அவிழும்
ஓசையைத் தவிர எதுவும்
காதிற்கு எட்டுவதில்லை.

காடுகள்கூட கவிதைகள்
தான் கண்விடுத்து
கருத்தால் காண்கையில்.

அம்மா


கருவறை என்னும்
இருட்டறையில் நான்
கண்ணயர்ந்த போது
உயிரினை ஒளியாய்
உள்ளே ஊற்றிய
தெய்வம் நீ.

நான் மண்ணில்
பிரசவித்த போது,
உன் வலியையும்
வசீகரமாய் மாற்றி
புன்னகைத்தாய்.

நீ என்னைக் காற்றில்
தூக்கி எறியும்
போதெல்லாம்
பயமின்றி சிரிப்பேனே!

ஏனம்மா? வீசி எறிந்த
கரங்கள் உனதென்பதால்.

நான் நடைபழகும்
நாள்களில் விழும்
வேளைகளில் தரையாக
தாயே நீதான் தாங்கிக்
கொண்டாய்.

மண்ணெடுத்து உண்கையில்
நீ பார்க்கும் போது,
அடிப்பாயோ என்று விழி
மூடும் நேரங்களில்
மார்போடு அள்ளி
அணைத்து கொஞ்சுவாயே.
நீ எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டவள் தான்.

நான் மொழியின்றி
பிதற்றும் பருவங்களில்,
"அம்மா சொல்லுடா"
எனக் கெஞ்சுவாயே
இப்போதும் சொல்லத்
துடிக்கிறேனம்மா.

விரதங்களால் என்னுயிர்
வளர்த்தாய்.
வாழ்க்கையையே எனக்காக
அர்ப்பணித்தாய்.

இன்னொரு பிறவியிலாவது
உன் தாயாய் நான்
பிறந்து உன்கடன் தீர்க்க
ஓர் வரம் வேண்டும்.

நீ நூறாண்டுகள் வாழ,
உன் மடியில் நான்
ஒரு மழலையாகி
என்றும் தூங்க
இறைவனை வேண்டுகிறேன்.

வேய்குழல்


என்னை என்ன
செய்தாய் வேய்குழலே,
உன் நாதத்திலே வரும்
கீதத்திலே நெஞ்சம்
மோட்சம் பெறுகிறதே.

இதழ் ஓரம் நீ ஈரப்
படுத்தி இசைக்கின்ற
கானங்கள் என் செவியிருக்கும்.

இதயத்தை நீ வருத்தி
பிறக்கின்ற இசை எல்லாம்
என்னுயிர் குடிக்கும்.

வண்டுகள் துளைப்பதைத்
தாங்கிக் கொண்ட நீ
என் முச்சுக் காற்றை
சுமப்பதையா வலி என்கிறாய்.

ஆயிரம் கண்கள்
கொண்டு என்னை நீ
காண்கையில் என் விழிகள்
காதல் வயப்படும்.

கவிதை வாசித்த உன்
கண்கள் கண்ணீர் வடிக்கையில்
உன்னை சுமந்த மனம்
ஏனோ பயப்படும்.

விரலிடை உன்னைப்
பதுக்கி உதட்டினில் சூடேற்றி,
ஒரு முறையேனும் என்
சுவாசத்தை இசையாக்க
அனுமதி தா.

காமத்தைக் கடந்து
கரங்களில் உருள்வாயோ,
இரேகைகள் அழிய
தேகங்கள் தொலைப்பாயோ,

நான் என்னும் கர்வம்
அழியும் படி சிறுசிறு
நாணங்கள் புரிகின்றாய்.

தான் என்னும் நிலை
கடந்து ஊடுருவுகையில்
நீயே தெரிகின்றாய்.

என்னை என்ன
செய்தாய் வேய்குழலே?
என்னிடத்தில் நானில்லை.

என்ன செய்வாய்


இருட்டிலும் என்னை
நிழலாய் தொடர்கின்றது
உனது நினைவுகள்.

இமைக்குள் பதுக்கி
வைத்தாலும் வழிகிறாய்
என் கண்ணீராய்.

கூட்டத்தை வெறுக்கிறேன்.
தனிமையில் இருக்கிறேன்.
சிறு காகிதம்
கண்டாலும் கவிதைகள்
கிறுக்குகிறேன்.

ஏனடி இந்த
மாற்றம்?
புரியாமல்
கிடக்கிறேன்.
என் நிலை
நான் மறந்து
எங்கேயோ நடக்கிறேன்.


பூக்களையே
ரசிக்க தெரியாதவன்.
இன்று புழுக்களை
கூட ரசிக்கிறேன்.
உன் நினைவுகள்
உடன் இருப்பதால்
மண்ணை கூட
அமுதென புசிக்கிறேன்.

என்னை என்ன
செய்ய போகிறாய்?
வாழ்வது ஆனாலும்
சாவது ஆனாலும்
உன் அருகாமையில்
அது நிகழட்டும்

நீ இருப்பதால்


தடுமாறும்
நேரங்களில்
தடமாக
நீ இருந்தாய்.

காய பட்டு
நிற்கையில் உன்
நட்பே எனக்கு
மருந்தாய்.

நான் பேசினாலும்
ஏசினாலும் ஏசு
போலவே பொறுமை
காத்தாய்.

உன் வெற்றிகளை
எல்லாம் என்
வெற்றியாகவே
பெருமை பூததேன்.

அகராதியில்
நட்பென்னும் வார்த்தைக்கு
பொருளாய் உன்
பெயரை பொறிக்கலாம்.

நீ உடன்
இருந்தால் இதயத்தை
அன்பால் நிறைக்கலாம்.


உனக்காக நான்
செலவழித்த
கண்ணீரை நீ
அறிவாய்.

ஒவ்வொரு விடியலிலும்
உன்முகத்தில் நான்
விழித்த நேரங்கள்
பெரிதாய்.

நோய்வாய் பட்டு
நீ விழுந்தாய்.
நோன்புகள் பல
நான் இருந்தேன்.

தாயாய் சேயாய்
நீ வரவே
தவங்கள் பல
நான் புரிந்தேன்.

தவறு ஏதும்
புரியாமல் உன்னோடு
பேசாமல் நான்
கிடந்தேன்.

எதிரே உன்னை
கண்டாலும் வேறு
திசையில் நான்
நடந்தேன்.


அன்று

கண்ணீர் துடைக்க
நீ இருந்தாய்.

உன் வருகைக்கு
பின் அழுவதற்கு
காரணமும் அழிந்து
போனது.

நீ இருக்கும்
காரணத்தால் சோகமும்
சந்தோஷம் ஆனது.

நமக்கு பிரிவு
மரணத்தில் மட்டுமே.

மரித்த கவிதை


குழந்தையை எடுத்து
கொஞ்சும் போது
அதன் இதழ்
ஓரம் தெறிக்கும்
எச்சிலாய்
என்னை ஒவ்வொரு
முறையும்
ஈரப்படூத்துகிறது
உன் நினைவுகளும்.

செவிடாய் கிடக்கும்
என் செவிகளில்
புல்லாங்குழல்
வாசித்து ஓடுகிறாய்.
இசையா இரைச்சலா
என புரியாமல்
நானோ உன்னை
தேடுகிறேன்.

நீ இலக்கண
கிருமி.
உன்னை கண்டால்
கவிதை நோய்
எனக்கு தோற்றிடும்.
மருந்தாய் எதை
தருவாய்?
சாவையா?
வாழ்வையா?

உன்
நெற்றி போட்டு,
ஒற்றை சடை,
கற்றை கூந்தல்,
தெற்று பல்
இவற்றிற்கு எல்லாம்
தமிழில் இலக்கணம்
இல்லை என்று
தலை கணத்தில்
திரியாதே!

தமிழ் உன்னால்
போதை ஏறி
கிடக்கிறது.
கொஞ்சம் பாதை
மாறி நடக்கிறது.
நான் என்ன செய்ய?

ஒட்டு மொத்த
அன்பையும் உனக்காக
தேக்கி வைத்து
இருக்கிறேன்.
கொஞ்சமாவது அதில்
மூழ்கி விட்டு
போ.
என் அன்பெனும்
கங்கை நதி
புனிதம் அடையட்டும்.

நீ என்னை
பிரியும் போதே
கவிதைகளும்
மரித்து விட்டன.

இதோ இங்கே
கூடி கிடப்பது
எழுத்து பிணங்கள்
மட்டுமே.

Monday, December 01, 2008

பேராசை


வாழ்க்கை தரும்
என நினைத்த
உன் முகம்
தான் இன்று
வலியையும்
தருகிறது.


நீ உடன்
இல்லை என
உணரும் போது
என் நிழலுக்கும்
வலிக்கிறது.

வரமாய் மனைவி
வாய்க்க வேண்டும்
என சிலர்
நினைப்பது இயல்பு.

ஆனால்
வரமே மனைவியாய்
வர வேண்டும்
என நான்
நினைப்பது
கொஞ்சம் பேராசை
தான்.

இருந்தாலும்
அதை
நிறைவேற்றி விடு.