Tuesday, December 02, 2008

வேய்குழல்


என்னை என்ன
செய்தாய் வேய்குழலே,
உன் நாதத்திலே வரும்
கீதத்திலே நெஞ்சம்
மோட்சம் பெறுகிறதே.

இதழ் ஓரம் நீ ஈரப்
படுத்தி இசைக்கின்ற
கானங்கள் என் செவியிருக்கும்.

இதயத்தை நீ வருத்தி
பிறக்கின்ற இசை எல்லாம்
என்னுயிர் குடிக்கும்.

வண்டுகள் துளைப்பதைத்
தாங்கிக் கொண்ட நீ
என் முச்சுக் காற்றை
சுமப்பதையா வலி என்கிறாய்.

ஆயிரம் கண்கள்
கொண்டு என்னை நீ
காண்கையில் என் விழிகள்
காதல் வயப்படும்.

கவிதை வாசித்த உன்
கண்கள் கண்ணீர் வடிக்கையில்
உன்னை சுமந்த மனம்
ஏனோ பயப்படும்.

விரலிடை உன்னைப்
பதுக்கி உதட்டினில் சூடேற்றி,
ஒரு முறையேனும் என்
சுவாசத்தை இசையாக்க
அனுமதி தா.

காமத்தைக் கடந்து
கரங்களில் உருள்வாயோ,
இரேகைகள் அழிய
தேகங்கள் தொலைப்பாயோ,

நான் என்னும் கர்வம்
அழியும் படி சிறுசிறு
நாணங்கள் புரிகின்றாய்.

தான் என்னும் நிலை
கடந்து ஊடுருவுகையில்
நீயே தெரிகின்றாய்.

என்னை என்ன
செய்தாய் வேய்குழலே?
என்னிடத்தில் நானில்லை.

No comments: