Friday, May 30, 2008

உதிர்ந்த காதல்

இலக்கணம் தேடி
உனக்காக இயற்றிய
கவிதைகள்
அழுகையில் நனைந்து
அழுகி போனது.

நான் உறங்கினால்
உறங்கி விடுமா
உன் நினைவுகளும்
நம் காதலும்.

நீ
பேசி போன
பார்வைகள்,
வீசி போன
புன்னகை
அனைத்தும் சேமித்து
நரகத்திற்கு
அஞ்சல் அனுப்ப
துடிக்கிறது
மனம்.

இப்போதெல்லாம்
சாத்தான்கள் கூட
அழகாய் தான்
இருக்கின்றன!
பெண் வடிவில்.

குழந்தை போலவே
சிணுங்குவாயே!
அந்த சிணுங்கலில்
தான் சிக்கி
சிதைந்தடி
காதல்.

என் தாய் அழைத்து
போகாத கோவிலுக்கு
கூட நீ
குணமாக வேண்டி
சென்றேனே.
நீ பிழைத்து
கொண்டாய்
பாவம்
காதல் தான்
செத்து விட்டது.

உன் நிழலில்
இளைப்பாரிய
குற்றத்திற்கா
இன்று நிஜத்தால்
சுடுகிறாய்?

கோபிக்க கூட
தெரியாதாவன்
நான்?
என்னை போய் பிரிவால்
சபிக்க எப்படி
மனம் வந்தது
உனக்கு?

தாய்மையின்
சேய்மையை
தந்த நீதான்
இன்று சாவின்
தனலையும்
மூட்டுகிறாய்.

மலரென எண்ணி
முகர்ந்து பார்க்கையில்
முட்களை நீட்டுகிறாய்.

ஒரே ஒரு
முறை நானாய்
இருந்து பாரடி.
என் காதலின்
வலி உனக்கு
புரியும்

Tuesday, May 27, 2008

ஏக்கம்

நீ கடித்து
துப்பும்
நகமாகவே
பிறந்து இருக்கலாம்.

உன் எச்சில்
படும்
பாக்கியமாவது
கிடைத்து இருக்கும்

இலக்கணம்

வானவில் துண்டு
துண்டாய் உடைந்ததை
முதன் முதலாய்
பார்த்தேன்.
உன் வளையல்கள்
உடையும் போது.

தங்க கொலுஸுகள்
உன் பாதததோடு
என்ன பேசி
கொண்டு வருகின்றன?

காலை தழுவும்
பாக்கியம்
கழுத்தை தழுவ
கிடைக்கவில்லை
என புலம்புகிறதோ?

காற்றை கூட
ஏனடி தண்ிக்கிறாய்?

புல்லாங்குழல் என
நினைத்து
உன் நாசி
துளையில் நுழைந்து
ஏமாந்து போகின்றது.

நீ இலக்கணம்
மீறிய இலக்கியம்.
உன்னை முழுவதும்
படித்தால் ஏறி டும்
தலை கணம்

வலிக்க விடு

நீ பரிசாக
கொடுத்த பார்வைகள்.
அவை தான் என்
உயிரை மூடும் போர்வைகள்.

உன் நிழலில்
இளைப்பாற,
என் நிழல் ஏங்கும்.

உன் நினைவுகளை
ஏந்தி கொண்டு
தான் விழிகள்
இறுதியாய் தூங்கும்.

உன் காலடி தடத்தில்
ஆயிரம் கவிதைகள்
பிறக்குமடி.

உன் கண்களின் இடத்தில்
மனம் கவலைகள்
துறக்குமடி.

ஏடுகள் உன் பெயரை
ஏந்தி கொள்ள
தவம் கிடக்கும்.

இருந்தாலும் அதை
என் உள்ளங்கையில்
எழுத தான்
எனக்கு பிடிக்கும்.

வலிகள் கூட
இனிக்கிறது.
நீ தரும் போது.

சில காலம்
இப்படியே வலிக்க
விடு.

அப்போது தான்
உன் வருடலின் சுகம்
எனக்கு புரியும்

நீ

என் நிழலை
கூட சிரிக்க
வைத்தவள் நீ.

என் மரங்களை
எல்லாம் பூக்க
செய்தவள் நீ.

பட்ட மரமாய்
இருந்தவனை
பசுமை வனமாய்
மாற்றியவளும்
நீயே தான்.

என் இரவுகளை
எல்லாம்
வானவில்லாக்கி
நட்சத்திரங்களை
பகலில்வாழ
வைத்து போகிறாய்.

நீ என்பது
எல்லாமே அழகாகிறது.

உன் பேச்சு.
உன் புன்னகை.
உன் நடை.
உன் குறும்பு.
உன் அன்பு.

இப்படி எல்லாமே
அழகாக தெரிகிறது.

இப்போது
உன்னை நேசிக்கும்
நானும் அழகு
ஆகிறேன்.

காதலின் காதலி

நீ ஒருநாள்
தீபம் ஏற்ற
கோவிலுக்கு
வந்தாய்.
விளக்குகள் துள்ளி
குதித்தன
வெண்ணிலாவை கண்டு
விட்டோம் என..

வானம் மண்ணை
கண்டு பொறாமை
படுகிறது.
உன்னையும் உன்
நிழலையும்
தாங்கும் வாய்ப்பு
மறுக்க
பட்டதற்காக.

தமிழில் எதை
வேண்டுமானாலும் படி!
கவிதைகளை தவிர.
ஏனெனில் கவிதையே
கவிதையை படிப்பதை
யாரும் அனுமதிப்பது
இல்லை.

என் மார்பில்
ஒருநாள் சாய்ந்து
பேசி கொண்டே
இருந்தாய்.
"கனக்கவில்லையா என்று
அக்கறையோடு கேட்டாய்“
நானோ
"நீ எழுந்து
விடாதே!
கனத்து விடும்
என்றேன்“

நீயோ வாசலில்
கோலம் போடுகிறாய்.
கோலங்களோ உன்
கைப்பட்ட இறுமாப்பில்
வானை பார்த்து
சிரிக்கின்றன.
வானமோ வயிற்றெரிச்சலில்
மழையை விட்டு
கோலத்தை
கலைக்கிறது.

மழை பெய்யும்
போது குடையை
விரித்து விடாதே.
அது பூமிக்கு
வருவதே உன்னை
தொட்டு போகும்
ஆசையில் தான்

விலகி போகிறேன்

விழிகளை பார்த்தால்
பேசி விடுவோமோ என்று
விலகி போகிறேன்.

உன் விழிகள்
காணும் வேளையில்
மௌனமாய் சாகிறேன்.

அருகில் நீ
இருந்தும் நான்
எங்கோ பார்க்கிறேன்.

நீ கடந்து
செல்லும் வேளையில்
கண்ணில் வியர்க்கிறேன்.

நீ பேசாமல்
இருப்பது எனக்கு
நல்லது!

இருந்தும் நீ
பேச வேண்டும்
என்ற ஆவல்
எனக்கு உள்ளது.

தொடு வானமாய்
இருந்தவன்
இன்று தொலை வானம்
ஆகிறேன்.

நிழலாக கிடந்தவன்
இன்று நெடுந்தூரம்
போகிறேன்.

பிரிவுகள் உறவினை
வளர்த்து விடுமோ
தெரியவில்லை.

உன்னை பிரிந்து
என்னால் உயிர்
வாழ இயலுமோ
ஒன்றும் புரியவில்லை.

நீ நடந்து
சென்ற பாதையை
வெறித்த படி
பார்க்கும் என்
கண்கள்.

உன் சின்ன
பாதங்களின்
தடங்களை தேடி
இன்றும் நான்….

நானும் உன் கொலுசும்

எனக்கும்
உன் காலின்
கொலுசுக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை.

இரண்டு பேருமே
உன் காலை
தான் சுற்றுகிறோம்

தடுமாறும் தமிழ்

கல் தோன்றி
மண் தோன்றா
காலம் முதல்
வல்லினம் ஆக இருந்து
வந்த “க ச ட த ப ற”

உன் இதழ்
வழி வருகையில்
மெல்லினம் ஆகி
நிற்கிறது.

தமிழே அவளை
கண்டு உனக்கும்
தடுமாற்றமா?

துணையாக நீ
வர கடவுளை
வேண்டி விரதம்
இருக்கும் நாள்களில்
பசிக்கு கூட
ருசி இருப்பது
புரிந்தது.

நீ வானவில்லில்
சேராத எட்டாம்
நிறம்.

நீ வந்து
சேராவிடில்
நானோ பட்ட
மரம்.

உண்மையில் நானோ
சிறகு ஒடிந்த
ஒரு பட்டாம்
பூசி.

என்னை சிறையில்
அடைத்து
ஏனடி கண்ணா
மூச்சி.?

தேநீரும் தேவதையும்

அலுவலகத்தில்
தேநீர் இடைவேளை.

என் தேவதை
அவள் தோழியோடு
தேநீர் அருந்த
வருகிறாள்.

அவள் கரம்
பிடிக்க காத்து
கிடக்கின்றன.
தேநீர் கோப்பைகள்.

எல்லா கோப்பைகளையும்
ஏமாற்றி விட்டு
ஒரு கோப்பைக்கு
மட்டும் உயிர்
கொடுக்கிறாள்
என் தேவதை.
அவள் பிஞ்சு
விரல் தொட்டு.

அவள் உதடு
பதித்து உரியும்
போது எல்லாம்
தீர்ந்து போவது
தேநீர் மட்டும்
அல்ல.
என் உயிரும் தான்.


அவள் அதரம்
தொட முடியாத
சோகத்தில்,
தேவதையின் தோழி
கரத்தில் இருந்து
தற்கொலை செய்து
கொள்கிறது.
இன்னொரு கோப்பை.

இதை புரிந்து
கொள்ள முடியாமல்
"கை தவறி
விழுந்து விட்டது"
என்கிறார்கள்.

அவளோ கோப்பைக்குள்
இருக்கும் தேனீரை
பருக,
கோப்பையோ அவள்
எச்சிலை அமுதமென
எண்ணி பருகுகின்றது.

என்ன முரண்பாடு?

மலருள் இருக்கும்
தேனை பட்டாம்
பூச்சி பருகுவது
இயல்பு.

ஆனால் இங்கு
பூவே அல்லவா
தேனை பருகுகிறது?

இன்னொரு பிறவி
இருந்தால் எப்படியாவது
கோப்பையாய் பிறந்து
விட வேண்டும்.
என் தேவதையின்
இதழ் ஈரம்
பட.

அதற்குள் முடிந்து
விட்டதா?
தேவதையின் தேநீர்
திருவிழா.

காத்து இருக்கிறேன்.
தேவதையின் இன்னொரு
திரு விழாவிற்காக.

மழை

இங்கு மழை
பொழிகிறது.

உன்னோடு வானவில்
ரசித்த மழை
நாட்கள் மனதில்
நனைந்து கொண்டு
தான் இருக்கின்றன.

மழையில் நனைவது
எனக்கு பிடிக்கும்
என தெரிந்து
குடை தராமல்
சென்று விடுவாய்
நீ.

கோபம் கொண்டு
நான் ஏன் குடை
தரவில்லை என
கேட்கும் போது
விடு கதையாய்
சிரிப்பாய்.

என் கோபம்
கூட உன்
புன்னகையில்
குழந்தை ஆகும்.

கல்லூரியின் இறுதி
நாளன்று வானில்
மட்டுமா மழை
பொழிந்தது?

நம் இருவரின்
கண்களிலும் தான்.

இன்றும் மழை
பொழிகிறது.

நீ இல்லை.
நானும் இல்லை.
ஆனால் நம்
நட்பின் நினைவுகள்
மட்டும் நனைந்து
கொண்டே இருக்கின்றன.

காதல் பைபிள்

கேளுங்கள் தரப்படும்.
கேட்டேன்.
அவள் தந்ததோ
மறக்க முடியாத
சோகத்தை.

தட்டுங்கள் திறக்கப்படும்.
தட்டினேன்.
திறக்கப்பட்டதோ
கல்லறை கதவுகள்.

தேடுங்கள் கண்டடைவீர்கள்.
தேடினேன்.
கண்டதோ
சிதைந்த என்
வாழ்வை

எப்படி புரியும்?

கிடைத்ததை பெற்று
கொள்ள வாழ்க்கை
ஒன்றும் பிச்சை
இல்லை.

அன்பே எனக்கு
கிடைக்காமல்
போய் விடாதே.

அட்சய பாத்திரம்
பிச்சை எடுத்தால்
அகிலம் தாங்காது.

உன் காதலை
நீயே தந்து
விடு.

உன் இமை
விடியளுக்கு
காத்து இருந்து
அஸ்தமனம் ஆனவன்
நானடி.

உனக்காக உயிரையே
தருவேன் என
தெரிந்தும் தயக்கம்
ஏனடி?

உனக்கே புரியாவிட்டால்
உலகுக்கு எப்படி
புரியும்?

நீதான் என்
உலகம் என்று.

என்ன ஆகும்?

பாதையில் பதிந்த
உன் பாத சுவடுகளை
கண்டு நிலவு
தேவதை திகைக்கிறாள்.

“நினைவு இன்றி
நித்திரையில் ஏற்கனவே
இங்கு வந்து
விட்டோமோ”
என்று.

உன் பாதம்
கண்டதற்கே
இப்படி என்றால்,
பாவம்!
உன் முகம்
கண்டால் என்ன
ஆகும்?

எனக்கென எதுவுமே இல்லையடி

எனக்கும் இந்த
உலகத்திற்கும் ஆன
உறவு உன்னை
பார்த்த பின்பு
தான் தொடங்கியது.

முதன் முதலாய்
பூவின் வாசம்
நுகர வைத்தாய்.

முட்களை கூட
ரசிக்க வைத்தாய்.

இதயம் போலதான்
உன் நினைவுகளும்.

நான் கவனிக்கா
விட்டாலும்.
எனக்குள் துடித்து
கொண்டே இருக்கிறது.

உன் நினைவு
என்னும் போதி
மரத்தின் கீழ்
தான் நான்
ஞானம் பெற்றேன்.

எனக்கென தனி
உலகம் கொடுத்தது
நீ தான்.


புழுவும்
புழுதியும்
படிந்து கிடக்கிறது
உன்னை தாலாட்டிய
என் கவிதை
புத்தகம்.

காற்றில் அதன்
காகிதங்கள் திறக்கும்
போதெல்லாம் உன்
வியர்வையின் வாசம்
என்னை குளிப்பாட்டுகிறது.

அஞ்சன வண்ண
கூந்தலும்,
இருவிழி என்னும்
காந்தமும்,

என் மூளைக்குள்
வேள்வி நடத்தி
போகின்றன.

எனக்கென எதுவுமே
இல்லையடி.

நீ விட்டு
போன நினைவுகளையும்.
பட்டு போன
என் பருவத்தையும்
தவிர

எனக்கென எதுவுமே
இல்லையடி.

தேவதை

மழை காலத்தில்
வெளியில் வந்து
விடாதே.
மழை துளி
மண்ணை விட்டு
விட்டு உன்
மடியில் விழும்.

கோவிலுக்கு மறந்தும்
சென்று விடாதே
தெய்வத்தை விட்டு
விட்டு கூட்டம்
உன்னை தொழும்.

மீன் என எண்ணி
கொக்குகள் உன்
கண்களை கொததி
தின்ன நேரலாம்.
கொக்குகளை கண்டால்
கண்ணை மூடி கொள்.

உதிரம் தோய்ந்த
உன் அதரம்
கண்டு செவ்வானம்
வெட்கப்படும்.
மாலை வேளையில்
சிரித்து விடாதே.

இயற்கையை பழித்திட
பிறந்தவள் நீயா?
என் இதயத்தில்
வாழும் நீ
தேவதையின் சேயா?

மணல் மேடூகள்

முதன் முதலாய்
என் தாயின்
கரம் பிடித்து
நானும்,
உன் தந்தையின்
தோளில் சாய்ந்த படி
நீயும் பள்ளி
சேர்க்கையில் அறிமுகம்
ஆனோம்.

ஒற்றை பின்னலும்,
தெற்று பல்லுமாய்,
சிரித்து விட்டு
போகும் உன் கண்கள்
இன்னும் இதயத்தில்.

முதல் முதலில்
அ எழுத
ஆசிரியை சொல்லி
கொடுக்க,
நீயோ அம்மா
என அழுத படி
கிடக்க,

அமைதியாய் உன்
அருகில் வந்து
நீட்டினேன் சில
ஆரஞ்சு மிட்டாய்களை.
நீயோ வாஞ்சையோடு
வாங்கி கொண்டாய்.

முதன் முதலாய்
நமக்குள் துளிர்க்க
ஆரம்பித்து இருந்தது
ஸ்னேகித செடி.


முதல் நாளில்
அழுகை மூஞ்சியாய்
தெரிந்த நீ,
பிறகு வாயாடி
ஆகி போனாய்.


தினமும் நீ
எனக்காக எடுத்து
வந்த நெல்லிக்காய்,
மாம்பிஞ்சுகள்,
கடலை மிட்டாய்.

இன்று நினைத்தாலும்
பசி ஆறிவிடுகிறது.

என் பிறந்த
நாள் அன்று நான்
அணிந்து வந்த
சட்டையை தொட்டு
பார்த்து ”நல்லா இருக்குடா”
என்றாய்.

அதில் இருந்து
எல்லா விடுமுறையிலும்
அதையே அணிய
ஆரம்பித்தேன்.

”என் ப்ரெண்ட்
தான் பா ஃபர்ஸ்ட் ரங்க்”

என நீ வீட்டில்
பெருமை அடித்து
கொள்வாயே.

இப்போது என்
வெற்றியை உணர
கூட யாருமில்லை.

ஊமைக்கு கூட
உன்னோடு பேச
பிடிக்கும்.

நீ வானுலகில்
இருந்து நட்பினை
சுமந்து வந்த
தேவதை.

உன் மனம்
உணருமோ!
நான் இன்று
நட்பில்லாமல்
சாவதை!


நம் ஐந்தாம்
வகுப்பின் முடிவில்
பள்ளிக்கு அருகில்
இருந்த மணல்
மேட்டில் அமர்ந்து
கொண்டு இருந்தாய்!
”நான் நகரத்தில்
வேற பள்ளி
கூடத்தில் சேருகிறேன்”
என நான் சொன்ன
போது நனைந்து
இருந்தன நம்
நான்கு கண்கள்.

இறுதியாய் உன்னை
கண்டது அப்போது
தான்.

காலத்தில் ஓட்டத்தில்
உன்னை தொலைத்து
விட்டேன்.

இப்போதும் ஊருக்கு
செல்லும் போதெல்லாம்
உன் கண்ணீரால்
நனைத்த அந்த
மணல் மேடூகளை
நான் நானைக்க
மறப்பதில்லை

என் கண்ணீரால்.....