Friday, October 24, 2008

கடன்காரி



என் இரவுகளுக்கு
மின்மினிப் பூச்சிகளை
இறக்குமதி செய்தவளே!

என் கனவிற்குத்
துணையாய் உன்
நினைவுகளை அனுப்பி
வைத்தவளே!

என் காதலை வாங்கிக்
கொண்டுத் திருப்பித்
தராமல் அடம்பிடிக்கும்
கடன்காரியே!

நான் கொடுத்த கடன்
அட்டவணையைக்
குறித்துக் கொள்.

என் பார்வைகளின்
கொஞ்சல்கள்.
உனக்காக காத்திருந்த
நிமிடங்கள்
தூங்காமல் விழித்திருந்த
இரவுகள்.
உன்னோடு தொடங்கிய
விடியல்கள்.
இடைவெளி இல்லாத
பேச்சுகள்.
தனிமையில் தவித்த
புலம்பல்கள்
நிழலோடு கொடுத்த
முத்தங்கள்.
நிஜத்தில் புரிந்த
நாணங்கள்.
உனக்காய் பூத்த
புன்னகை.

எல்லாவற்றையுமே
வட்டியும் முதலுமாய்
கொடுத்துவிடு,
என் அன்பான
கடன்காரி

மனதின் மனைவி


என் சபலங்களும்
சலனங்களும் சடலாமாக
காதலை சமர்ப்பித்தவள்
நீ தான்.

என் தேகமும்
மோகமும் தொலைந்துவிட
என்னை உன்விழிமடியில்
உறங்க வைத்தவளும்
நீ தான்.


ஒரு தாய்மையை
ஒரு சேய்மையை
எனக்காய் உருவாக்கி,
உன் பெண்மையை
உயிர் மென்மையை
அன்பின் கருவாக்கி
பார்வை ஊசிகளால்
என் ரத்தத்தில்
செலுத்தியவளும்
நீதான்.

முகம் தேய்ந்து
கிடந்த எனக்கொரு
முகவரி கொடுத்து,
என் முகபாவணைகளில்
முழு உயிரையும்
முற்றிலும் படித்து,
எனக்காக புன்னகை
பூத்து காத்திருந்தவளும்
நீதான்

சினம் கொண்டு
நான் சீறியபோதும்,
குணம் கொண்டு
என்னைக் கொஞ்சி
நின்றவளும் நீதான்.

எனக்கே எனக்காய்
ஏழுப் பிறவியும்
துணையாய் வர
இறைவன் அனுப்பிய
தூதுவளும் நீதான்

Wednesday, October 22, 2008

அழகுக்கு சொந்தக்காரி


நிழல் கொடுத்து மலர்
தாங்கி நிற்கும் மரங்கள்
எல்லாம் உன் புன்னகையை
ஏந்தி நிற்கின்றன.

அதன் பாதைகளில் நீ
நடந்து வரும் வேளைகளில்
எல்லாம் "நான் தான் அசைந்து
காற்றைக் கொடுப்பேன்" என
கிளைகள் ஒன்றோடு ஒன்று
மோதி அடித்து கொள்கின்றன.

உன் முகம் காணமுடியாமல்
பூமியில் புதைந்து விட்டதற்காக
அழுது கிடக்கின்றன,
மரத்தின் வேர்கள்.

அவை மண்ணைப் பார்த்து
உன் பாத அழகை பற்றி
நலம் விசாரிக்கின்றன.

மண் பாவம்!
உன் உச்சந்தலை அழகைப்
பற்றி வானத்திடம்
விசாரித்துக் கொண்டிருக்கிறது.

வானம் சூரியனிடம் கெஞ்சிக்
கொண்டிருக்கிறது!
"ஒரேஒரு முறை
அவளைச் சுட்டெரி.
உன்னைக் கோபமாய் அவள்
பார்க்கையில் முகத்தைக்
கொஞ்சம் பார்த்துக்
கொள்கிறேன்" என்று

நிழலுக்காக மரங்களில்
கூடுகட்டி வசித்து வரும்
பறவைகள் எல்லாம் உன்னைக்
கண்டதும் உன் நிழலில்
ஒதுங்குகின்றன.
"எத்தனை பறைவைகளைத்
தான் தாங்கும் ஒரு
பறவையின் நிழல்"

சில பறைவைகளுக்கு
ஏமாற்றம் தான்.

கூவிக் கொண்டிருந்த
குயில்கூட கூவலை நிறுத்தி
நீ பேசுவதை கூர்ந்துக்
கேட்டு ரசிக்கிறது.

காற்றுக்கு கூட
உன்மீது காதலடி.
அடிக்கடி உன்
கூந்தலை கலைத்து
விளையாடி களைப்பாகிறது.

இறைவனின் படைப்புகள்
எல்லாம் என்னைப்
பார்த்து பொறாமைப்
படுகின்றன.

உன்னை நான்
அடைந்ததற்காக

உன்னோடு


உன்னோடு பேசும்
ஒவ்வொரு நொடியும் என்
வாழ்வில் இனிக்கிறதே!

என்னோடு நடக்கும்
என் நிழல்கூட எங்கே
நீயெனக் கேட்கிறதே!

ஆகாயம் தாண்டி
பூலோகம் தோண்டி
என் காதல் செழிக்கிறதே!

நெஞ்சம் நனைக்க
மஞ்சம் கனக்க
உன்னுயிர் என்னில் வழிகிறதே!

உன்னோடு சிரித்து
உன்னோடு முறைத்து
என் மேகம் பொழிகிறதே!

Monday, October 06, 2008

அழகியல்


எதற்கடி புன்னகைக்கிறாய்?

இந்த பூமியை உன்
புன்னகையில் புதைக்கவா?

இல்லை! என்னை
உன் பூவிதழால் வதைக்கவா?

உன்னை அழகு எனக்
கூறினால் பொய் என்கிறாய்.

அழகு என்பது என்னைப்
பொறுத்தவரை.....


நீ சிரிக்கும் போது
என்னைத் தொடும்
இதமான மூச்சு,

மழலைப் போல
மணிக் கணக்கில்
நீ பேசும் பேச்சு.

உன் இடைதாண்டி
நடைபோட துடிக்கும்
கூந்தல்.

நான் உற்றுப் பார்க்கையில்
என்னை ஈர்க்க முயலும்
விழிக் காந்தம்.

நீ சிரிக்கும் போதுத்
தனியாய் தெரியும்
தெற்றுப் பல்.

நான் புலம்புகையில்
ஆறுதல் தரும்
அன்பான வார்த்தை.

தொலைபேசியில் உன்
தோழிகளிடம் உலகம்
மறந்து நீ உரையாடும்
விதம்.

உன் பெற்றோர்
மற்றும் உற்றோர்
மீது நீ கொண்டிருக்கும்
ஆழமான அக்கறை.

நாம் நடக்கும் போது
உனக்குத் தெரியாமல்
என்னைத் தொடும்
உன் துப்பட்டா.

நீ வாய்விட்டு சிரிக்கையில்
என்மீது தெறிக்கும்
ஒன்றண்டு எச்சில்
அமுதம்.

ஒரு நிமிடத்தில் நீ
காட்டும் ஓராயிரம்
முகபாவனை.

நான் கோபம் கொள்ளும்
வேளையில் "என்ன ஆச்சு?
இப்படி இருக்காதீங்க"
என நீ வாஞ்சையோடு
சொல்வது.

என் விரக்தியின் உச்சத்தில்
"free விடுங்க" என மழலையாய்
மனதை வருடும் பாங்கு.

கடுந்தணலாய் நான்
வார்த்தைகளை கொட்டும்போது
அதை புன்னகையாய்
மாற்றும் வித்தை.

எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்டு
என்னை சுகமாய் துன்புறுத்தும்
இன்ப நேரங்கள்.

மெளனம் சிலநேரம் பூத்து
"பேசுடா என" என்னை
மன்றாட வைக்கும் மந்திரம்.

என் இரவுகளில்
என் இதழ் அருகே
அமர்ந்து நீ கொஞ்சும்
கொஞ்சல்கள்.

நேரம் கொஞ்சம் கடந்தாலும்
"நேரமாச்சு போகலாமா"
என நீ கெஞ்சும்
கெஞ்சல்கள்.

இதில் எதில் இல்லையடி
நீ சொல்லும் அழகு.

உன்னைப் படிப்பதற்கு
ஒரு பாடத்திட்டம்
வைத்தால் அதற்கு
பெயர் அழகியலாகத்தான்
இருக்கும்.

என் அழகான தேவதையே

காலம் காலமாய் நாம்


நீ நிகழ்கால ஏடுகள்
நீண்ட காலமாய் செய்த
எனக்கான நிர்பந்தம்.
என் உதிரத்தில் உறவாட
படைத்தவன் கொடுத்த
பிரபஞ்சம்.

உன் நெற்றித் திலகம்
ஒட்டி இருக்கும் இடத்தைக்
கொஞ்சம் உற்றுப் பார்.
என் கைவிரல் ரேகைகள்
தென்படக் கூடும்.


பழுத்து விழும் நிலையில்
தன்னுயிரை இழுத்துக்
கொண்டு இருக்கும் கிழ
மரங்களைக் கேட்டுப் பார்.
அவை நம்மை ஏதோ
ஒரு பிறவியில்
சந்த்தித்திருக்கக் கூடும்.


காக்கையின் கத்தல்கள்,
குயிலின் கூவல்கள்,
ஆந்தையின் அகவல்கள்,
இதில் எதிலாவது நம்
முற்பிறவி மிச்சம்
இருக்கலாம்.

மார்பை அறுத்து
மதுரையை எறித்த அந்தக்
கற்புப் பைங்கிளியின்
ஒற்றை சிலம்பாய் நான்
இருந்திருக்கலாம்.
என்னைப் பிரிந்து வாடிய
இன்னொரு சிலம்பாய் நீ
இருந்திருக்கலாம்.

நான் உன்னை விட்டுப்
பிரியும் போது நீ
விட்ட சாபமே கோவலனைக்
கொன்று இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

அகநானூறு கூறும்
அழகான செய்யுள்களுள்
அடங்கி இருக்கும்
காதலில் உனதும் ஒன்றாய்
இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

ஒன்றை மற்றும்
தெரிந்துக் கொள்ளடி.
நாம் காலம் காலமாய்
காதலித்து இணையாமல்
முற்பிறவி முழுவதுற்குமாய்
ஒருவருக்குள் ஒருவராய்
வாழவே மீண்டும்
பிறந்துள்ளோம் என்பதை.

நீ என் இல்லறவியல்


உன்னோடு நடக்கையில்
உலகம் என்னையே
உற்றுப் பார்ப்பதாய்
தோன்றுதடி.

உனக்கும் எனக்கும்
உள்ள இடைவெளியில்
காற்று உட்கார்ந்து
கவிதை பேசுதடி.

சிலுவைகள் சுமந்த
மனம் இன்று சிறகுகள்
விரிக்கிறது.

உன் கூரிய விழிகள்
கூறும் வார்த்தைகளை
கவனமாய் படிக்கிறது.

வறண்டு போன
உதடுகள் உன்பெயர்
உரைக்கையில் கொஞம்
ஈரம் பெறுகிறது.

உன் விழிகளைப் பார்த்து
பேசுகையில் கள்ளம்
இல்லா மழலைகள்
கொஞ்சும் ஞாபகம்.

நீ நாணும் போது
வானிடை வளையும்
வானவில்லின் நினைவலை.

இந்த இயந்திரவியல்
மாணவனின் இதயத்தில்
பூத்த இன்பவியல்.
நீ என் இல்லறவியல்
ஆனால் இதயத்தில்
என்றுமில்லை
துன்பவியல்.

Wednesday, October 01, 2008

வானம் நீ


எனக்கு விடியல் தந்த
வானம் நீ.

உன்னில் நான் சூரியனாய்
பிரகாசிக்கா விட்டாலும்
பராவாயில்லை.

ஏதோ ஒரு மூலையில்
நட்சத்திரமாய் வாழ்ந்து
விட்டுப் போகிறேன்.

மழலையின் மாற்றுரு நீ




இந்த பூமியில் எங்கு
நீ பிறந்தாய்.
அவ்விடம் எனக்கு
தாய்நாடு.

எந்த மொழியில்
என்னோடு பேசினாய்.
அம்மொழி எனக்கு
தாய்மொழி.

எவ்விடம் உன்னை
முதன் முதலாய்
சந்த்தித்தேன்.
அவ்விடம் எனக்கு
தாஜ்மகால்.

உனது கையெழுத்தில்
எனது பெயர்.
முதல் ஓவியம்.

நீ என்னோடு பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
கவிதை.

உன் மெளனங்கள்
ஊமைக் குயிலின்
உண்மை கீதங்கள்.

உன் கோபங்கள்.
மழலை மொழியின்
மாற்று வடிவம்.

இயல்பாக பேசி,
இயல்பாக சிரித்து,
இயல்பாக பழகி,

ஏனோ இருக்க
முடிவதில்லை.
எப்போதுமே இயல்பாக.

யார் நீ




கடைவிழி காட்டினாய்.
உயிர்குழி வாட்டினாய்.

பருக்களை எல்லாம்
இதயத்தை குத்தும்
ஈட்டியாக மாற்றினாய்.

எச்சிலைக் கூட
எரியும் மனதில்
நெய்யாக ஊற்றினாய்.

தூரதேசம் நின்று
ஈரநேசம் காட்டும்
ஓரக நிலவே!

வண்ண முகத்தில்
வாடிய சாயல்
ஏனடி மலரே!

நான் தொடத்
தெரிந்த பித்தன்.
நீயோ சுடத்
தெரிந்த சூரியன்.

உன் பாதச்
சுவடுகளை அலை
வந்து தழுவும்.
உன் மேனி
மாசினை புதுமழை
வந்து கழுவும்.

இமைகளின் அசைவுகூட
இசையாக மாறும்.
புன்னகை உதடுகளில்
மதுபானம் ஊறும்.

தமிழ் கூறும்
நல்லுலகே உன்
அழகினைப் பாடும்.
கூந்தல் கலைகையில்
மயில் கூட்டம்
மகிழ்ச்சியாய் ஆடும்.

நெருஞ்சி முற்கள்
உன்னைப் பார்த்தால்
குறிஞ்சி பூவாய்
தினமும் மலரும்.

அருகில் நீ அமர்ந்து
இருந்தால் உன்
அழகை இரசித்தே
பொழுதும் புலரும்.

நீ தோழியா?
துணைவியா?

விடை தெரியாத
வினாவில் வாழ்கிறேன்.
தேவதையே யாரடி
நீ?

உனக்கென இருப்பேன்




நீ கண்கள் திறக்க
பல பண்கள் இசைப்பேன்.
ஒரு கவிதை பிறக்க
உன் அழகை ரசிப்பேன்.

உன் முடிமுதல் அடிவரை
பூ முத்தம் கொடுப்பேன்.
உன் இடைதனில் பிடிபட
நான் நித்தம் துடிப்பேன்.

நீ கொஞ்சும் போது
நான் குழந்தை ஆவேன்.
நீ கோபம் கொண்டால்
நான் கொஞ்சம் சாவேன்.

அழகு விழியில் நீர்த்துளி
வழிந்தால் அமிலம் பொழியாதோ!
அன்பின் மிகுதியால் நாம்
அழுதால் ஆனந்தம் வழியாதோ!

என் இதழ்கள் அழைந்தால்
அது உன்பெயர் தானடி.
உன் இதயம் இசைய
இந்த தயக்கம் ஏனடி?

உன் மடிமீது சாய்ந்து
ஒரு மழலையாக தூங்குவேன்.
உன் இதழ்களின் ஈரம்பட
விரல் நகமாக ஏங்குவேன்.

மழைக் கூந்தல் மலர்களை
என் மனதோடு தாங்குவேன்.
மரணம் என்றாலும் உன்
நினைவோடு உயிர் நீங்குவேன்.