Monday, October 06, 2008

அழகியல்


எதற்கடி புன்னகைக்கிறாய்?

இந்த பூமியை உன்
புன்னகையில் புதைக்கவா?

இல்லை! என்னை
உன் பூவிதழால் வதைக்கவா?

உன்னை அழகு எனக்
கூறினால் பொய் என்கிறாய்.

அழகு என்பது என்னைப்
பொறுத்தவரை.....


நீ சிரிக்கும் போது
என்னைத் தொடும்
இதமான மூச்சு,

மழலைப் போல
மணிக் கணக்கில்
நீ பேசும் பேச்சு.

உன் இடைதாண்டி
நடைபோட துடிக்கும்
கூந்தல்.

நான் உற்றுப் பார்க்கையில்
என்னை ஈர்க்க முயலும்
விழிக் காந்தம்.

நீ சிரிக்கும் போதுத்
தனியாய் தெரியும்
தெற்றுப் பல்.

நான் புலம்புகையில்
ஆறுதல் தரும்
அன்பான வார்த்தை.

தொலைபேசியில் உன்
தோழிகளிடம் உலகம்
மறந்து நீ உரையாடும்
விதம்.

உன் பெற்றோர்
மற்றும் உற்றோர்
மீது நீ கொண்டிருக்கும்
ஆழமான அக்கறை.

நாம் நடக்கும் போது
உனக்குத் தெரியாமல்
என்னைத் தொடும்
உன் துப்பட்டா.

நீ வாய்விட்டு சிரிக்கையில்
என்மீது தெறிக்கும்
ஒன்றண்டு எச்சில்
அமுதம்.

ஒரு நிமிடத்தில் நீ
காட்டும் ஓராயிரம்
முகபாவனை.

நான் கோபம் கொள்ளும்
வேளையில் "என்ன ஆச்சு?
இப்படி இருக்காதீங்க"
என நீ வாஞ்சையோடு
சொல்வது.

என் விரக்தியின் உச்சத்தில்
"free விடுங்க" என மழலையாய்
மனதை வருடும் பாங்கு.

கடுந்தணலாய் நான்
வார்த்தைகளை கொட்டும்போது
அதை புன்னகையாய்
மாற்றும் வித்தை.

எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்டு
என்னை சுகமாய் துன்புறுத்தும்
இன்ப நேரங்கள்.

மெளனம் சிலநேரம் பூத்து
"பேசுடா என" என்னை
மன்றாட வைக்கும் மந்திரம்.

என் இரவுகளில்
என் இதழ் அருகே
அமர்ந்து நீ கொஞ்சும்
கொஞ்சல்கள்.

நேரம் கொஞ்சம் கடந்தாலும்
"நேரமாச்சு போகலாமா"
என நீ கெஞ்சும்
கெஞ்சல்கள்.

இதில் எதில் இல்லையடி
நீ சொல்லும் அழகு.

உன்னைப் படிப்பதற்கு
ஒரு பாடத்திட்டம்
வைத்தால் அதற்கு
பெயர் அழகியலாகத்தான்
இருக்கும்.

என் அழகான தேவதையே

No comments: