Monday, October 06, 2008

காலம் காலமாய் நாம்


நீ நிகழ்கால ஏடுகள்
நீண்ட காலமாய் செய்த
எனக்கான நிர்பந்தம்.
என் உதிரத்தில் உறவாட
படைத்தவன் கொடுத்த
பிரபஞ்சம்.

உன் நெற்றித் திலகம்
ஒட்டி இருக்கும் இடத்தைக்
கொஞ்சம் உற்றுப் பார்.
என் கைவிரல் ரேகைகள்
தென்படக் கூடும்.


பழுத்து விழும் நிலையில்
தன்னுயிரை இழுத்துக்
கொண்டு இருக்கும் கிழ
மரங்களைக் கேட்டுப் பார்.
அவை நம்மை ஏதோ
ஒரு பிறவியில்
சந்த்தித்திருக்கக் கூடும்.


காக்கையின் கத்தல்கள்,
குயிலின் கூவல்கள்,
ஆந்தையின் அகவல்கள்,
இதில் எதிலாவது நம்
முற்பிறவி மிச்சம்
இருக்கலாம்.

மார்பை அறுத்து
மதுரையை எறித்த அந்தக்
கற்புப் பைங்கிளியின்
ஒற்றை சிலம்பாய் நான்
இருந்திருக்கலாம்.
என்னைப் பிரிந்து வாடிய
இன்னொரு சிலம்பாய் நீ
இருந்திருக்கலாம்.

நான் உன்னை விட்டுப்
பிரியும் போது நீ
விட்ட சாபமே கோவலனைக்
கொன்று இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

அகநானூறு கூறும்
அழகான செய்யுள்களுள்
அடங்கி இருக்கும்
காதலில் உனதும் ஒன்றாய்
இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

ஒன்றை மற்றும்
தெரிந்துக் கொள்ளடி.
நாம் காலம் காலமாய்
காதலித்து இணையாமல்
முற்பிறவி முழுவதுற்குமாய்
ஒருவருக்குள் ஒருவராய்
வாழவே மீண்டும்
பிறந்துள்ளோம் என்பதை.

No comments: