Wednesday, October 01, 2008

யார் நீ




கடைவிழி காட்டினாய்.
உயிர்குழி வாட்டினாய்.

பருக்களை எல்லாம்
இதயத்தை குத்தும்
ஈட்டியாக மாற்றினாய்.

எச்சிலைக் கூட
எரியும் மனதில்
நெய்யாக ஊற்றினாய்.

தூரதேசம் நின்று
ஈரநேசம் காட்டும்
ஓரக நிலவே!

வண்ண முகத்தில்
வாடிய சாயல்
ஏனடி மலரே!

நான் தொடத்
தெரிந்த பித்தன்.
நீயோ சுடத்
தெரிந்த சூரியன்.

உன் பாதச்
சுவடுகளை அலை
வந்து தழுவும்.
உன் மேனி
மாசினை புதுமழை
வந்து கழுவும்.

இமைகளின் அசைவுகூட
இசையாக மாறும்.
புன்னகை உதடுகளில்
மதுபானம் ஊறும்.

தமிழ் கூறும்
நல்லுலகே உன்
அழகினைப் பாடும்.
கூந்தல் கலைகையில்
மயில் கூட்டம்
மகிழ்ச்சியாய் ஆடும்.

நெருஞ்சி முற்கள்
உன்னைப் பார்த்தால்
குறிஞ்சி பூவாய்
தினமும் மலரும்.

அருகில் நீ அமர்ந்து
இருந்தால் உன்
அழகை இரசித்தே
பொழுதும் புலரும்.

நீ தோழியா?
துணைவியா?

விடை தெரியாத
வினாவில் வாழ்கிறேன்.
தேவதையே யாரடி
நீ?

No comments: