Monday, December 07, 2009

கலியுக காதலிகள்

வண்டுகள் தானே மலர்
விட்டு மலர் தாவும்!
இங்கு ஏனோ மலர்களே
வண்டு விட்டு
வண்டு தாவுகிறது.

நிலா வெளிச்சம்


அழுகையோடு சாப்பிட
மறுக்கும் நேரத்தில்,
நிலாநிலா ஓடிவா எனப்பாடும்
அம்மாவின் கை உணவோடு
வாயுள்ளே நுழையும்
நிலா வெளிச்சம்.

கல்வி உலா சென்று,
இரவில் வீடு திரும்புகையில்,
அப்பாவோடு உடன் வரும்
நிலா வெளிச்சம்.

கையில் மின்மினியை
ஒளித்து வைத்து,
தங்கைக்கு விளையாட்டு
காட்டும் நேரத்தில்,
தங்கையோடு சேர்ந்து
சிரிக்கும் நிலா வெளிச்சம்.

விடுமுறை நாள்களில்,
கண்ணாமூச்சி ஆடும்
தருணங்களில் மேகத்தின்
உள்ளே ஒளிந்து கொள்ளும்
நிலா வெளிச்சம்.

எல்லோருக்கும் ஏதோவொரு
தருணத்தில் நினைவுகளின்
புதையலாய் அமைந்து
விடுகிறது,
நிலா வெளிச்சம்

Monday, November 30, 2009

காதலின் சுவடுகள்

“சாமியை கும்பிட்டு போடா” என கூறிய தாயை ஏளனமாக பார்த்து கொண்டே பூஜை அறைக்கு சென்றான் மோகன்.

“நேரம் ஆச்சு. ரெடியா” அவன் அப்பா சங்கரின் குரலை கேட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம் பா”
என்றான்.

”முதல் நாள் காலேஜ் போற! சீக்கிரம் கிளம்புடா” என்றார் சங்கர்.

அவர் கண்களில் பெருமிதம். இருக்காதா பின்னே?

இத்தனை வருடங்களில் வயலில் இரவு பகல் பாராமல் உழைத்து தான் மகனை பொறியியல் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டார். மோகனும் படிப்பில் மிகவும் கேட்டி. நுழைவு தேர்வு பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால், தானே தேர்வுக்கு தயார் செய்தான். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்ணும் பெற்றான். அவன் மதிப்பெண்ணுக்கு இலவசமாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது.

இதுவரை வந்தாயிற்று. எப்படியும் கல்லூரியும் நன்றாக முடித்து விட வேண்டும் என்பதில் வெறி அவனுக்கு.

”அம்மா!நான் வரேன்” என்று விடை கொடுத்து விட்டு கிளம்பினான்.

செருப்பு இல்லாமல் நடந்து வரும் தந்தையை கண்டு மௌனமாக
தன்னை நொந்து கொண்டே நடந்து வந்தான். அவனை கல்லூரியில் சேர்த்து ஆயிற்று.

”அப்பா. நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்” என ஆறுதல் கூறிவிட்டு தந்தையை வழி அனுப்பி வைத்தான்.

அவனை சுற்றி அழகாய் பல பெண்கள். ஆண்களின் வாசம் மட்டுமே அறிந்த அவனுக்கு இது புதியதாய் தோன்றியது.

ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனுக்குள் அணிவகுத்தன. ஆசை,எதிர்பார்ப்பு,உற்சாகம் எல்லாம் ஒரு கலவையாகி ஒருவித உணர்வை அவன் அனுபவித்து இருந்தான்.

முதல் வகுப்பு. அனைவரும் அவரவரை அறிமுகம் செய்து கொள்ள தொடங்கினர். இப்போது மோகனின் தருணம்!

”ஐ ஆம் மோகன். மை ஃபாதர் இஸ் அ ஃபார்மர்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஒருசிலர் அவனை கேலியாக பார்த்தனர். அதை பற்றி எல்லாம் அவன் கவலை பட்டதாய் தெரியவில்லை.

மணிகள் நாட்கள் ஆங்கின. நாட்கள் மாதங்கள் ஆங்கின. மோகனுக்கு
பல நண்பர்கள் முளைத்து இருந்தார்கள்.

அதில் காவியாவும் ஒருவள். அவன் படிப்பு,யாரிடமும் பேசாத அவன் தன்மை, அவனுக்கு தெரிந்தததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் பண்பு என எல்லாவற்றிலுமே அவன் அவளை கவர்ந்து இருந்தான்.

முதலில் அவன் அவளிடம் பிடி கொடுத்து பேசவில்லை. பிறகு மெல்ல மெல்ல இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

”மோகன். நாளைக்கு என் பர்த்‌டே பார்ட்டி இருக்கு, மறக்காம வந்துடு” அன்பு கட்டளை இட்டு போனாள் காவ்யா.

”சரி. வரேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஹாஸ்டல் வார்டன் திட்டுவார்” என சொல்லிவிட்டு கிளம்பினான் மோகன்.

அவள் வீட்டுக்கு சின்ன பரிசு பொருள் ஒன்றை எடுத்து கொண்டு கிளம்பினான்.

முதன் முதலாய் அவள் வீட்டுக்கு செல்கிறான். அவளின் வீடு அவனுக்கு கொஞ்சம் பிரமிப்பையும் கொஞ்சம் பயத்தையும் கூட்டியது. அவளிடம் பரிசை கொடுத்து விட்டு வேகமாக திரும்பி விட்டான்

காலம் அவர்களை இறுதி ஆண்டிற்குள் நிறுத்தி இருந்தது. கல்லூரியே இவர்களை காதலர்க்ளாய் இணைத்து பேசி இருந்தது.

”மோகன். நாம் என் எதிர் காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் திருமணம் செஞ்சுக்க கூடாது?”
என இயல்பாக கேட்ட காவ்யாவை ஆவலோடு பார்த்தான் மோகன்.

”என்ன காவ்யா சொல்றே. நீ தொடுவானம். உன்னை என்னால் ரசிக்க முடியும். ஆனால் உரிமை கொண்டாட முடியாது”  என  சமாதான படுத்த முயன்றான்.

அவளோ தீர்க்கமாக சொன்னாள்.” நல்லா யோசி. நாம ஒண்ணும் இப்போ மெரேஜ் பண்ண போறது இல்லை. இன்னும் 3 டு 4 இயர்ஸ் இருக்கு. 

நீயும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடுவே.
உன்னை என்கிட்டே இருந்து எதுவும் வித்தியாச படுத்தாது” நடை முறையை எடுத்து கூறினாள். அவனும் சரியேன ஒத்து கொண்டான்

நாட்கள் உருண்டு ஓடின. கடமையோடு அவன் காதலும் வளர்ந்து வந்தது.
அவன் கல்லூரி முடித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.

”அம்மா. இன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்தியை நம்ம வீட்டுக்கு கூட்டி வரட்டுமா” என கேட்டுவிட்டு தாயின் பதிலுக்கு காத்து இருந்தான்.

”ஏண்டா. இதை என்கிட்ட கேட்கிறே. கூட்டிட்டு வர வேண்டியது தானே” என்றாள் அவன் அம்மா.

அன்று புதியதாய் வர போகும் விருந்தாளிக்காக அவன் அப்பா,அம்மா,தங்கை என  குடும்பமே காத்து இருந்தது. அவள் காரில் அவனுடன் வந்து இறங்கினாள்.

அவர்கள் வீட்டை பார்த்த உடனே முகம் சுழித்தாள். இதை அவர்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை, அவனையும் சேர்த்து. கலைந்த கேசம், அழுக்கு வேட்டி என அவன் தந்தை  ஒரு விவசாயியை வார்த்து எடுத்து இருந்தார். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் வெறுப்பை உமிழ்ந்தன. மோகன் நிகழ்வது அறியாமல் திகைத்தான்.
அவள் அவனை தனியே அழைத்தாள்
”மோகன். உங்க வீடும், உங்க வீட்டில இருக்கறவங்களும் இப்படி இருப்பாங்கணு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் நான் நேசித்தது உங்களை மட்டும் தான். நம்ம மெரேஜ் முடிஞ்ச்தும் நாம தனியா போயிடலாம். மாசா மாசம் ஒரு தொகையை உங்க வீட்டுக்கு கொடுத்தூடுங்க. இவங்க கூட என்னால வாழ முடியாது” என குமிறினாள் காவியா.

கை கழுவ வந்த சங்கர் நிலமையை ஓரளவுக்கு உணர்ந்த்து கொண்டார். தன் மகன் என்ன சொல்ல போகிறான் என வியப்போடு நின்று இருந்தார்.


”இங்கே பார் காவியா. உன்னை எனக்கு ஏழு வருஷமா தான் தெரியும். ஆனா என் குடும்பத்தை 24 வருஷமா தெரியும். என்னை எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வாச்சார்னு தெரியுமா. நான் இஞ்சினியரிங் படிக்கறதுக்காக என் தங்கை +2 வோடு படிப்பை நிறுத்திக்கிட்டா. என் அம்மா தான் தாலியை அடக்கு வச்சு தான் என் ஃபைனல் இயர் எக்ஸ்யாம் பீஸ் கட்டுநாங்க. இன்னைக்கு நான் நல்ல நிலமையில் இருக்கேன் என்பதற்காக நான் அவங்களை கை விட முடியாது. உனக்கு என்னை மாதிரி, என் என்னை விட நல்லா நிறைய மாப்பிள்ளை கிடைப்பாங்க. ஆனா என் அப்பா அம்மாவிற்கு என்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க மாட்டாங்க. நீ என்னை மறந்துடு. நானும் மறந்துடறேன்” என கண் கலங்கியவாறே கூறி முடித்தான்.

இப்போது சங்கரின் கண்களும் நனைந்து இருந்தன.

காவியா ஓடி வந்து மோகனை இறுக்கி கட்டி கொண்டாள்.
”என்னை மன்னிச்சுடுங்க. இது நான் உங்களுக்கு வச்ச சிறு பரீட்சை தான் .நீங்க விண் பன்னீட்டீங்க மோகன். உங்களை கணவானாய் அடைய நான் கொடுத்து வச்சு இருக்கணும். எப்போதுமே மாறாம இருக்கற உங்க பாசம் போலதான் உங்க காதலும் என்னைக்கும் மாறாது” என கூறிக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

ஒரு நொடியில் எல்லாம் முடிந்து விட்டதாய் எண்ணிய மோகன் அவளை நிமிர்த்தி ”அழாதேடி. எல்லா ஜென்மத்த்திலும் நான் தான் உன் புருஷன்”என சொல்லி மெல்லிய முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.

அவன் குடும்பமே ஆனந்த களிப்பில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் நிற்பதை பார்த்த காவ்யா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.

அவர்களின் காதலின் சுவடுகள் மெதுவாய் எல்லோர் இதயத்திலும் பதிய தொடங்கி இருந்தன

இளைஞனே


சூரியன் வானில்
எரியும் போது,
மெழுகு வர்த்தியின்
உதவியை நாடுபவனே!

உலகமே உனக்காக
இருக்க,
நீயோ வட்டத்திற்குள்
வாழ்கிறாய்.

சோகத்தால் போசுங்கியவனே
சொர்க்கம் நமக்காக.

நம்பிக்கை என்னும்
அணுவில் தான்
வெற்றியின் சக்தி
புதைந்துள்ளது.

துவண்டு அழுதது
போதும்!
தோண்டி எடுக்க
துணி.

இறந்து பிறப்பதை
விட,
பிறந்து இறப்பது
மேல்.
அதனால் நண்பனே!
கனவினை கருவில்
கலைக்காதே!
அவை வளரட்டும்.
ஒன்றாவது உருபெரும்.

தோல்வி மூட்டைகளை
சுமந்து
நம்பிக்கை முதுகு
குனிந்தவனே

வியர்வை அரும்புகள்
வெற்றி பூக்கக்கள்
ஆகும் காலம்
வெகுதொலைவில் இல்லை.

நடக்க நடக்க
தான் புதரில்
பாதை தோன்றும்.
நீ தோற்க
தோற்க்கதான்,
வெற்றியின் வழி
தென்படும்.

தளராதே!
நம்பிக்கையோடு எழு.

உன்னால் முடியும்


உன்னால் எல்லாம்
முடியும்.
உன்னால் மட்டுமே
உலகம் விடியும்.
தீயவை அனைத்தும்
மடியும்.

ஓடு ஓடு உலகின்
விட்டத்தின் இறுதி
புள்ளி வரை ஓடு.

தடைகளை இடி.
வெற்றியை பிடி.

வாழ்வில் நோக்கத்தை
தேடு.
என்றும் ஆக்கதையே
நாடு.

உலகை உயர்த்த
வந்த உத்தமர்ககளுள்
நீயும் ஒருவன்.
உண்மையை மறந்து
விடாதே.

உனக்குள் இருக்கும்
உன்னை உயிர்ப்பித்து
கொண்டு வா.

அற்ப பதர்களோடு
ஒப்பிட்டு உன்னை
நீயே தாழ்த்தி
கொள்ளாதே.

எரிகின்ற ஞாயிறின்
தழல் நீ.
விரிகின்ற வானின்
நிழல் நீ.

உன் திறமைகள்
நீ அறிவாய்.
உலகம் அறிய
உயிர்த்தெழுவாய்.

நீ தொடுவதற்கு
தான் வெற்றி
சிகரங்கள் தவம்
கிடக்கின்றன.
விழுந்தாலும்
வீறு கொண்டு
வா.

நீ வரும் நாள்
வெகுதூரத்தில் இல்லை.

ஈழம்


எந்த வீட்டில் ஒப்பாரி
கேட்குமோ என பயத்திலே
விடியும் விடியல்கள்.

"குண்டடி பட்டு செத்துக்
கிடக்கிறார்கள்" என்றதும்,
நம் பிள்ளையாய்
இருக்கக் கூடாது என
வேண்டிக் கொண்டே
தாய்களின் ஓடல்கள்.

ரத்தம் பார்த்து,
கண்ணீர் வார்த்து,
அகதியாய் அலைந்து
அநாதைகளாய் கிடந்து,

ஏன் எங்களுக்கு
மட்டும் இந்த சாபக்கேடு?

நீங்களா வன்முறைக்கு
எதிரானவர்கள்?

தொப்புள் கொடி அறும்முன்
சவக்குழி காண்பதும்,
சமையும் மாதர்கள்
சமைக்கப் படுவதும்,
மழலைகள் எல்லாம்
மண்ணில் மக்குவதும்

உங்கள் அமைதி
எங்களுக்குக் அளித்த
அன்பளிப்புகள்.

இது தொடர்ந்தால்,

ஒருநாள் எங்கள்
கரம் ஓங்கும்.
உங்கள் சிரங்கள்
உடலை நீங்கும்.

தோற்பதற்கே வாழ்க்கை
என்றால் என்றோ
இறந்திருப்போம்.

மடிவதற்கா மடியில்
மகவுகளை பெற்றெடுத்தோம்.
உங்கள் மரணம்தனை
மட்டுமே விடியலாய்
தத்தெடுப்போம்.

போதும்.

எங்களை வருத்துவதை
நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களைக் கொஞ்சம்
திருத்திக் கொள்ளுங்கள்.

ஈழத்தில் சிவப்புக்
கறைகள் மறைந்து,
வெள்ளைப் பூக்கள்
மலரட்டும்.
நாளைய தலைமுறையாவது
மரண பயமின்றி
மண்ணில் வளரட்டும்

நிர்வாணக் கனவுகள்


கருக்குவளையில் இருந்து
வீசப்பட்ட சிசுவாய்
எனது கனவுகள் ஆடைகள்
ஏதுமின்றி அம்மணமாய்!

ஒவ்வொரு முறை
துகில் தரிக்க முற்படுகையிலும்
துச்சாதன்களின் கரங்களாய்
உரித்தெடுக்கின்றன சமூகத்தின்
சாக்கடை மிருகங்கள்.

ஊடங்களின் வழியே
உற்றுநோக்கும் விழிகளில்
இருந்து தப்பிக்க கரங்களை
வைத்து நிர்வாணத்தை மறைக்கிறேன்.
கைகளை விலக்கி விட்டு
விரசத்தோடு பார்க்கின்றன்
ஜாதி புழுக்கள்.

பாலினம் கண்டறிய பச்சையாய்
என் உறுப்புகளை பார்வையால்
உருக்குலைக்கின்றன மனிதம்
மரணித்த மாக்களின்
காமக் கண்கள்.

நிர்வாணம் மட்டுமே நிரந்தரமாய்
நிர்பந்திக்கப் படுகையில்
எந்த உடையை அணிவிப்பேன்
என் கனவுகளுக்கு?

Friday, November 06, 2009

பரம்பரைத் தொழில்


நேரு பிரதமராக இருக்கும்போது,
என் தாத்தா செருப்புத்
தைத்த்துக் கொண்டிருந்தார்.
இந்திரா பிரதமராக இருக்கும்போது
என் அப்பா செருப்புத்
தைத்துக் கொண்டிருந்தார்.
ராஜீவ் பிரதமராக இருக்கும்போது
நான் செருப்புத் தைத்துக்
கொண்டிருந்தேன்.

இறுதிவரைத் தொடர்ந்துக்
கொண்டே இருக்கிறது.
அவர்கள் பிரதமராவதும்,
நாங்கள் செருப்புத் தைப்பதும்.

யூகங்கள்


பேருந்து நிறுத்தத்தில்
தலைநிறைய மல்லிகை.
உதட்டில் சாயம்.
ஒரு கைப்பையோடு
அழகான பாவை.

"காதலனுக்காக காத்திருக்காளோ!
அதுமாதிரி பெண்ணாக இருக்குமோ!
அலுவலகம் முடிந்து திரும்புகிறாளோ!
ஒருவேளை ஓடிப்போகப் போறாளோ!"

என யூகங்கள் கட்டுப்பாடின்றி
ஓடிக் கொண்டே இருந்தன.

யூகங்கள் ஆணுக்கனாவை.
அவைப் பெண்களை
மட்டுமே தின்னுகின்றன.
ஆண்களை அவை
தீண்டுவதில்லை.

வறுமையின் தீர்மானங்கள்



"ஷேஷாத்ரி வித்யாலாவில் சேர்க்கலாம்"
"இல்லை ஜெய்கோபால் கரோடியாதான்"
"எஸ்பிஓஏ நல்லா இருக்குமே"
"வித்யாமந்திர்தான் ரொம்ப பேமஸ்"

இரண்டு வயது குழந்தைக்கான
பள்ளித் தேர்ந்தெடுத்தலில்
குடும்பமே இறங்கியிருந்தது.

வழக்கம் போல வீடு
துடைக்கத் தொடங்கினான்.
பள்ளிக்கூடமே பார்க்காத
வேலைக்கார சிறுவன்.

யார் காரணம்


அங்கிங்கெனாத படி
எங்கும் நிறைந்திருக்கின்றன
கழுமரங்கள் என்
சிரத்தினை எதிர்பார்த்து!

காதல் காதல் என
கதறி வறண்ட தொண்டையில்
கடைசியாய் தாகத்திற்காக
நிரப்பப் படுகின்றன
என் இரத்தத் துளிகளும்
கண்ணீர் மழையும்.

ஜாதிகள் ஊன்றிய
நச்சு விதையில் எனது
காதலும் நசுங்குகிறது.
உண்மை மனம் இறக்க
இயலாமல் தீயிலும்
நோயிலும் பொசுங்குகிறது.

நேசித்த இதயம்
என்னை இழக்க தயாராய்.
அவளுக்காக அனைத்தையும்
இழந்த நான் அவளையே
இழந்துவிட்டு என்ன செய்ய?

Thursday, December 04, 2008

நீ வரும் நாளுக்காக



உன் அருகாமையில் என்
கர்வம்தனை புதைத்துவிடு.

என்னை அணைத்தே துண்டு
துண்டாய் சிதைத்துவிடு.

என்னை முழுதுமாய் குழைத்து
கண்மையாய் கரைத்துவிடு.

விரலினால் தீண்டி என்
விரதங்கள் தீர்த்துவிடு.

உன் கொலுசாய் என்
இதயத்தையே துடிக்கவிடு.

கரங்களில் என் முகமேந்தி
காலமெல்லாம் வெடிக்கவிடு.

மடிந்து நான் விழுகையில்
மடிதனை தந்துவிடு.

நான் வீடுதிரும்பும் பொழுதுகளில்
வாசலுக்கு வந்துவிடு.

உயிரெல்லாம் உயிர்த்து இருக்கும்
உன்னத தோழியே!
பிரிவில் செல்லமாய் கொன்று
பிரியுது ஆவியே!

எப்போதடி வரப் போகிறாய்?

அணுஅணுவாய் என்னுள்
ஆராய்ச்சிகள் செய்ய.
அன்பால் ஆயுளெல்லாம்
அகத்தை கொய்ய.

Tuesday, December 02, 2008

தேடல்


உனக்கான என் தேடலில்
முதன்முதலாய் தொலைந்தவன்
இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடு என்னையும்.

காலம் மறைத்து வைத்த
உன்னைக் கண்கள் கண்டறிந்த
சமயம் உன்னிடத்தில் காதல்
இருக்கவில்லை.

யுகங்களாய் சேமித்தக் காதல்
நொடிப் பொழுதில் கரைவது
தெரிந்ததால் நான் உண்மை
மறைக்கவில்லை.

தொடமுடியா தூரத்தில் தெரியும்
மாலைப் பரிதியின் மயக்கும்
பிம்பம் ரசிக்கும் நீ உன்
அருகாமையில் என் நேசத்தை
உணராமல் போவது இன்றும்
எனக்கு வியப்பே!

கட்டிப் போடுவதற்கு காதல்
உன் வீட்டு நாய்க்குட்டி அல்ல.
வெட்டி விடுவதற்கு காதல்
களைச் செடியும் அல்ல.

உன் மௌனம் தாண்டி
ஒருநாள் காதல் வெளிவரும்.

காத்திருக்கிறேன் கண்மணி.

காடு


காரிருள் குடைந்த
காடுகளின் காதுகளின்
ஊதும் புல்லாங்குழல்
வண்டுகளின் துளைகள்.

கதிரவனைக் கூட
அனுமதிக்காத காடுகள்
எப்படியோ காற்றை மட்டும்
அனுமதிக்கின்றன!

அச்சமா துணிச்சலா
தெரியாமல் கூவுகின்றன.
குயில் குஞ்சுகள்.

அச்சம்தான் என
உறுதிப் படுத்தி
பிளிறுகின்றன களிறுகள்.

படபடப்பில் துடிப்பதை
கொஞ்சம் நிறுத்தி
வைக்கின்றன மெல்லின
மாக்களின் இதயங்கள்.

திடீர் நிசப்தம்.
மொட்டுகள் அவிழும்
ஓசையைத் தவிர எதுவும்
காதிற்கு எட்டுவதில்லை.

காடுகள்கூட கவிதைகள்
தான் கண்விடுத்து
கருத்தால் காண்கையில்.

அம்மா


கருவறை என்னும்
இருட்டறையில் நான்
கண்ணயர்ந்த போது
உயிரினை ஒளியாய்
உள்ளே ஊற்றிய
தெய்வம் நீ.

நான் மண்ணில்
பிரசவித்த போது,
உன் வலியையும்
வசீகரமாய் மாற்றி
புன்னகைத்தாய்.

நீ என்னைக் காற்றில்
தூக்கி எறியும்
போதெல்லாம்
பயமின்றி சிரிப்பேனே!

ஏனம்மா? வீசி எறிந்த
கரங்கள் உனதென்பதால்.

நான் நடைபழகும்
நாள்களில் விழும்
வேளைகளில் தரையாக
தாயே நீதான் தாங்கிக்
கொண்டாய்.

மண்ணெடுத்து உண்கையில்
நீ பார்க்கும் போது,
அடிப்பாயோ என்று விழி
மூடும் நேரங்களில்
மார்போடு அள்ளி
அணைத்து கொஞ்சுவாயே.
நீ எண்ணங்களுக்கு
அப்பாற்பட்டவள் தான்.

நான் மொழியின்றி
பிதற்றும் பருவங்களில்,
"அம்மா சொல்லுடா"
எனக் கெஞ்சுவாயே
இப்போதும் சொல்லத்
துடிக்கிறேனம்மா.

விரதங்களால் என்னுயிர்
வளர்த்தாய்.
வாழ்க்கையையே எனக்காக
அர்ப்பணித்தாய்.

இன்னொரு பிறவியிலாவது
உன் தாயாய் நான்
பிறந்து உன்கடன் தீர்க்க
ஓர் வரம் வேண்டும்.

நீ நூறாண்டுகள் வாழ,
உன் மடியில் நான்
ஒரு மழலையாகி
என்றும் தூங்க
இறைவனை வேண்டுகிறேன்.

வேய்குழல்


என்னை என்ன
செய்தாய் வேய்குழலே,
உன் நாதத்திலே வரும்
கீதத்திலே நெஞ்சம்
மோட்சம் பெறுகிறதே.

இதழ் ஓரம் நீ ஈரப்
படுத்தி இசைக்கின்ற
கானங்கள் என் செவியிருக்கும்.

இதயத்தை நீ வருத்தி
பிறக்கின்ற இசை எல்லாம்
என்னுயிர் குடிக்கும்.

வண்டுகள் துளைப்பதைத்
தாங்கிக் கொண்ட நீ
என் முச்சுக் காற்றை
சுமப்பதையா வலி என்கிறாய்.

ஆயிரம் கண்கள்
கொண்டு என்னை நீ
காண்கையில் என் விழிகள்
காதல் வயப்படும்.

கவிதை வாசித்த உன்
கண்கள் கண்ணீர் வடிக்கையில்
உன்னை சுமந்த மனம்
ஏனோ பயப்படும்.

விரலிடை உன்னைப்
பதுக்கி உதட்டினில் சூடேற்றி,
ஒரு முறையேனும் என்
சுவாசத்தை இசையாக்க
அனுமதி தா.

காமத்தைக் கடந்து
கரங்களில் உருள்வாயோ,
இரேகைகள் அழிய
தேகங்கள் தொலைப்பாயோ,

நான் என்னும் கர்வம்
அழியும் படி சிறுசிறு
நாணங்கள் புரிகின்றாய்.

தான் என்னும் நிலை
கடந்து ஊடுருவுகையில்
நீயே தெரிகின்றாய்.

என்னை என்ன
செய்தாய் வேய்குழலே?
என்னிடத்தில் நானில்லை.

என்ன செய்வாய்


இருட்டிலும் என்னை
நிழலாய் தொடர்கின்றது
உனது நினைவுகள்.

இமைக்குள் பதுக்கி
வைத்தாலும் வழிகிறாய்
என் கண்ணீராய்.

கூட்டத்தை வெறுக்கிறேன்.
தனிமையில் இருக்கிறேன்.
சிறு காகிதம்
கண்டாலும் கவிதைகள்
கிறுக்குகிறேன்.

ஏனடி இந்த
மாற்றம்?
புரியாமல்
கிடக்கிறேன்.
என் நிலை
நான் மறந்து
எங்கேயோ நடக்கிறேன்.


பூக்களையே
ரசிக்க தெரியாதவன்.
இன்று புழுக்களை
கூட ரசிக்கிறேன்.
உன் நினைவுகள்
உடன் இருப்பதால்
மண்ணை கூட
அமுதென புசிக்கிறேன்.

என்னை என்ன
செய்ய போகிறாய்?
வாழ்வது ஆனாலும்
சாவது ஆனாலும்
உன் அருகாமையில்
அது நிகழட்டும்

நீ இருப்பதால்


தடுமாறும்
நேரங்களில்
தடமாக
நீ இருந்தாய்.

காய பட்டு
நிற்கையில் உன்
நட்பே எனக்கு
மருந்தாய்.

நான் பேசினாலும்
ஏசினாலும் ஏசு
போலவே பொறுமை
காத்தாய்.

உன் வெற்றிகளை
எல்லாம் என்
வெற்றியாகவே
பெருமை பூததேன்.

அகராதியில்
நட்பென்னும் வார்த்தைக்கு
பொருளாய் உன்
பெயரை பொறிக்கலாம்.

நீ உடன்
இருந்தால் இதயத்தை
அன்பால் நிறைக்கலாம்.


உனக்காக நான்
செலவழித்த
கண்ணீரை நீ
அறிவாய்.

ஒவ்வொரு விடியலிலும்
உன்முகத்தில் நான்
விழித்த நேரங்கள்
பெரிதாய்.

நோய்வாய் பட்டு
நீ விழுந்தாய்.
நோன்புகள் பல
நான் இருந்தேன்.

தாயாய் சேயாய்
நீ வரவே
தவங்கள் பல
நான் புரிந்தேன்.

தவறு ஏதும்
புரியாமல் உன்னோடு
பேசாமல் நான்
கிடந்தேன்.

எதிரே உன்னை
கண்டாலும் வேறு
திசையில் நான்
நடந்தேன்.


அன்று

கண்ணீர் துடைக்க
நீ இருந்தாய்.

உன் வருகைக்கு
பின் அழுவதற்கு
காரணமும் அழிந்து
போனது.

நீ இருக்கும்
காரணத்தால் சோகமும்
சந்தோஷம் ஆனது.

நமக்கு பிரிவு
மரணத்தில் மட்டுமே.

மரித்த கவிதை


குழந்தையை எடுத்து
கொஞ்சும் போது
அதன் இதழ்
ஓரம் தெறிக்கும்
எச்சிலாய்
என்னை ஒவ்வொரு
முறையும்
ஈரப்படூத்துகிறது
உன் நினைவுகளும்.

செவிடாய் கிடக்கும்
என் செவிகளில்
புல்லாங்குழல்
வாசித்து ஓடுகிறாய்.
இசையா இரைச்சலா
என புரியாமல்
நானோ உன்னை
தேடுகிறேன்.

நீ இலக்கண
கிருமி.
உன்னை கண்டால்
கவிதை நோய்
எனக்கு தோற்றிடும்.
மருந்தாய் எதை
தருவாய்?
சாவையா?
வாழ்வையா?

உன்
நெற்றி போட்டு,
ஒற்றை சடை,
கற்றை கூந்தல்,
தெற்று பல்
இவற்றிற்கு எல்லாம்
தமிழில் இலக்கணம்
இல்லை என்று
தலை கணத்தில்
திரியாதே!

தமிழ் உன்னால்
போதை ஏறி
கிடக்கிறது.
கொஞ்சம் பாதை
மாறி நடக்கிறது.
நான் என்ன செய்ய?

ஒட்டு மொத்த
அன்பையும் உனக்காக
தேக்கி வைத்து
இருக்கிறேன்.
கொஞ்சமாவது அதில்
மூழ்கி விட்டு
போ.
என் அன்பெனும்
கங்கை நதி
புனிதம் அடையட்டும்.

நீ என்னை
பிரியும் போதே
கவிதைகளும்
மரித்து விட்டன.

இதோ இங்கே
கூடி கிடப்பது
எழுத்து பிணங்கள்
மட்டுமே.

Monday, December 01, 2008

பேராசை


வாழ்க்கை தரும்
என நினைத்த
உன் முகம்
தான் இன்று
வலியையும்
தருகிறது.


நீ உடன்
இல்லை என
உணரும் போது
என் நிழலுக்கும்
வலிக்கிறது.

வரமாய் மனைவி
வாய்க்க வேண்டும்
என சிலர்
நினைப்பது இயல்பு.

ஆனால்
வரமே மனைவியாய்
வர வேண்டும்
என நான்
நினைப்பது
கொஞ்சம் பேராசை
தான்.

இருந்தாலும்
அதை
நிறைவேற்றி விடு.

Wednesday, November 26, 2008

அன்பே


விழியசைவில் ஒரு
விளம்பரமா?
அதை வாங்கிட
என்னுயிர் வருமா?

உன் விரல்நுனியில்
புது சுயம்வரமா?
என்னை மணந்திட
தேவதை வரம்தருமா?

தூரத்தில் நின்றுப் பார்த்து
தூரல்கள் தெறிக்கிறாய்.
அருகில் வந்து நின்று
அடைமழை பொழிகிறாய்.

உன் நிழல் தீண்டும்
வேளையில் என்
விரதங்கள் தீருதடி.

என் தனிமையில்
உன் நினைவுகள்
கவிதைகள் கூறுதடி.

யாரும் நடக்காத
ஒற்றையடிப் பாதை
எனக்குள் ஓர் ஊர்வலம்
நடத்திப் போகிறாய்.

நிழலும் பிரிகின்ற
வேளையில் நீயே
உயிராகிப் போகிறாய்.

அடுத்தப் பிறவியில்
நம்பிக்கை இல்லை.

பெண்ணே,

இருந்து விடு
என்னுடன்.
இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை.

கவிதை வரவில்லையடி


கவிதை வரவில்லையடி.

உன்னை காணும் போதும், நீ
நாணும் போதும் உயிரோடு
ஒட்டிக் கொண்டநேசம்
இருந்தும் கவிதை வரவில்லையடி.

வானத்தை வெறித்துப் பார்க்கையில்
நீரலைகளின் வெற்றிடத்தை நிரப்புகையில்
தோன்றிய தேவதையுன் முகம்
உடனிருந்தும் கவிதை வரவில்லையடி.

முழுநிலா என்னை முறைக்க,
காகிதங்கள் காற்றில் துடிக்க,
பேனாமுனை கரம் பிடித்தும்
பேரழகே கவிதை வரவில்லையடி.

ஆயிரம் பாவணைகள் உன்
அழகு முகம் தோற்றுவிக்க,
நான் தோற்று நிற்கும்
தருணமும் கவிதை வரவில்லையடி.

கவிதையே கவிதையை
என்ன செய்தாய்?
கவிதை வரவில்லையடி.