Monday, November 30, 2009

ஈழம்


எந்த வீட்டில் ஒப்பாரி
கேட்குமோ என பயத்திலே
விடியும் விடியல்கள்.

"குண்டடி பட்டு செத்துக்
கிடக்கிறார்கள்" என்றதும்,
நம் பிள்ளையாய்
இருக்கக் கூடாது என
வேண்டிக் கொண்டே
தாய்களின் ஓடல்கள்.

ரத்தம் பார்த்து,
கண்ணீர் வார்த்து,
அகதியாய் அலைந்து
அநாதைகளாய் கிடந்து,

ஏன் எங்களுக்கு
மட்டும் இந்த சாபக்கேடு?

நீங்களா வன்முறைக்கு
எதிரானவர்கள்?

தொப்புள் கொடி அறும்முன்
சவக்குழி காண்பதும்,
சமையும் மாதர்கள்
சமைக்கப் படுவதும்,
மழலைகள் எல்லாம்
மண்ணில் மக்குவதும்

உங்கள் அமைதி
எங்களுக்குக் அளித்த
அன்பளிப்புகள்.

இது தொடர்ந்தால்,

ஒருநாள் எங்கள்
கரம் ஓங்கும்.
உங்கள் சிரங்கள்
உடலை நீங்கும்.

தோற்பதற்கே வாழ்க்கை
என்றால் என்றோ
இறந்திருப்போம்.

மடிவதற்கா மடியில்
மகவுகளை பெற்றெடுத்தோம்.
உங்கள் மரணம்தனை
மட்டுமே விடியலாய்
தத்தெடுப்போம்.

போதும்.

எங்களை வருத்துவதை
நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களைக் கொஞ்சம்
திருத்திக் கொள்ளுங்கள்.

ஈழத்தில் சிவப்புக்
கறைகள் மறைந்து,
வெள்ளைப் பூக்கள்
மலரட்டும்.
நாளைய தலைமுறையாவது
மரண பயமின்றி
மண்ணில் வளரட்டும்

No comments: