Tuesday, September 30, 2008

முத்தத்தமிழ்




அன்றொரு நாள்
அழகைச் சந்த்திதேன்.
அன்று முதல்
தேவதையைத் தினமும்
சிந்தித்தேன்.

காற்றில் ஓர்வாசம் வந்தால்
கண்கள் கம்பன்
கவிமகளைத் தேடும்.

கொடியில் இலை அசைந்தால்
குறள் இடையோ என
ஐயம் மூளும்.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கவிதை
அவளுக்காக எழுதினேன்.

தந்துவிட தைரியம்
இன்றி எனக்குள்
நானே புழுங்கினேன்.

அவள் புத்தனின் எதிரி.
ஆசையைத் தூண்டுவாள்.
கூந்தல் மலர்களை உதறி
பூமியைத் தோண்டுவாள்.

சதையில் செய்த
சிற்பம் அவள்.
இதழ்கள் பேசும்
சித்திரம் அவள்.

அவள்

பேசினால் இயல்.
நடந்தால் இசை.
பார்த்தால் நாடகம்.
மொத்தத்தில் அவள்
முத்தமிழ்.
எனக்காக பிறந்த
முத்தத்தமிழ்.

மன்னிப்பாயா


உன்னை காயப்படுத்தும்
எந்த செயலும் என்னை
இருமடங்கு வருத்தும்.

நாள்கள் சிலகடந்தாலும்
என் நெஞ்சையது
மெதுவாய் உறுத்தும்.

உன் தோழிகள்
என் சோதரிகள்.
இதயத்திற்குத் தெரியும்.
நரம்பில்லாத நாவிற்குத்
தெரிவதில்லை.
சிலசமயம் எல்லை
மீறுகின்றன.
தனிமையில் புலம்பித்
தொல்லைத் தருகின்றன.

மன்னிப்புக் கேட்டால்
மனம் ஆறிவிடுமா?
நீபடும் துயரைத்தான்
கூறிவிடுமா?


என் உயிராய்
உயிர்த்து இருக்கும்
தேவதையே!

நீ புண்படும் வேளைகளில்
உதிர்கிறேன்.
உன் கூந்தல்
பூக்களைப் போல்.

உன் நினைவுகளே
என்னை படலாமாய்
சூழும்போது உன்
நிழற்படம் எதற்கம்மா
எனக்கு?

உன் புன்னகையை
என்றும் வேண்டுகிறேன்.
அது கடவுள் எனக்காக
அனுப்பி வைத்த
கவின்மிகு ஓவியம்.

எல்லாம் மறந்து
கொஞ்சம் சிரி.
நான் உலகத்தையே
மறந்து சிலநொடி
உயிர் வாழ்கிறேன்.

தமிழ்த் தோழி




வல்லினங்களில் வளைந்து,
மெல்லினத்தில் மெலிந்து,
இடையினத்தில் இளைத்தேன்.
முத்தமிழில் திளைத்தேன்.
எழுத்தோடு எழுவேன்.
பிழையோடு விழுவேன்.
வெண்பாவில் வேகுவேன்.
கலிப்பாவில் சாகுவேன்.
சீரோடு சிதைவேன்.
அணியோடு வதைவேன்.
எதுகை மோனையாக
ஒத்துப் போனோம்.
மெய் மட்டும்
இங்கு கிடக்கும்.
உயிர் மட்டும்
எழுந்து நடக்கும்.
உயிர் மெய்யைச்
சேர இயலாதோ!
காதல் ஆய்தம்
ஒருகணம் துயிலாதோ!
உன் உருவம்
கண்டால் உருவகம்.
உள்ளம் கொண்டால்
உவமைத் தொகை.
செய்கைகள் யாவும்
வினைத் தொகை.
சேட்டைகள் செய்தால்
பண்புத் தொகை.

தமிழே!

நம் உறவு என்ன வகை?
உன் காதலே எனக்குப் பகை.

மின்னல் தேவதை




அழகென்ற சொல்லின் அகராதிப் பொருளே!
மேகங்கள் நகுகின்ற கூந்தல் இருளே!
வெண்முத்து பற்கள்தான் பவளக் கற்களோ!
ஐயம் கணும் கண்ணுக்கு மூளும்.

பார்வையே கூறிடும் பார்வையே போரிடும்.
கண்களின் கூர்மையில் உடையும் வாளும்.
எட்டாத கற்பனை கிட்டாத கவிதை
உந்தன் படைப்பு உயிரின் துடிப்பு.

உன் பாதம் பட்டதும் பாலையும்
பூத்தது அழகாய் சிறு மெழுகாய்.
காற்றில் ஆடும் சுருண்ட கேசம்.
மீன்கள் கூடும் ஆற்றின் தேசம்.

இடைத் தொடும் சடைப் பின்னல்.
என்னை எடை இடும் சாதனம்.
இரத்தப் பருக்கள் சின்ன வடுக்கள்
சிந்தும் அழகின் சீரிய நூதனம்.

வளையல் சுமக்கும் இளைய கரங்கள்
என்முகம் புதைக்கும் இன்ப தலையணை.
உள்ளங் கையில் ஒளிந்த ரேகை,
கள்ளன் நான் நடக்கும் பதை.

நீண்டு சிறுத்த கவின் விரல்.
தீண்டிக் கொஞ்சும் தனித் துவம்.
என்னைக் கிள்ளுகின்ற நனி நகம்.
இன்பம் அள்ளும் கள் குடம்.

தோலில் ஊன்றும் ரோமக் கூட்டம்.
தென்றல் வீசும் கவரித் தோட்டம்.
காலைத் தழுவும் வெள்ளிக் கொலுசு
கதறிப் பேசும் எந்தன் மனசு.

காதில் எட்டிப் பார்க்கும் தோடு.
குட்டி நட்சத்திரம் கட்டிய வீடு.
தேவதை சுவாசிக்கும் நாசித் துளைகள்,
இசை உமிழும் குழல் துளை.

வளைந்து நெளிந்த விழிப் புருவம்
கருப்பு வண்ண வானவில் உருவம்.
மொத்தத்தில் நீயொரு இலக்கணம்.
பித்தத்தில் ஏறிடும் தலைக்கணம்.

உன் கன்னக் காகிதத்தில்
முத்தக் கவிதைகள் இயற்றவா?
உன் உதட்டு சாயத்தை
ஒரு விரலால் துவட்டவா?

மின்னலே உன்னைக் கண்டதும்
ஒழிந்தது வாழ்வின் இன்னலே.
ஆழமாய் நேசிக்கிறேன் உன்னை.
யொசிக்குமா உந்தன் பெண்மை.

கண்ணீர்




துயரத்தில் உயிர் துப்பும்
காலத்தின் கரையாத கரிப்பு.

அன்பின் மிகுதியில் கண்கள்
பேசும் திரவக் கவிதை.

குற்றத்தில் குறுகிப் போகும்
குருதியின் நிறமற்ற நீர்.

இயலாமையில் இதயங்கள் வீசும்
ஆற்றாமையின் அடிமைத் தூது.

துரோகத்தில் துய்த்து போன
விழிகளின் வியர்வைத் துளி.

நெடுநாளைய மெளனம் நிரப்பும்
வார்த்தையின் உப்பு வலி.

களிப்பில் இமைகள் தள்ளி
விடும் இன்பத்தின் ஊற்று.

இதில் நீ எதற்காக
அழுகிறாய்?


என்னுயிரே!

நீ அழும்போதெல்லாம்
என் கரங்களும் கண்களும்
காத்து இருக்கும்.

முடிந்தால் உன்
கண்ணீரைத் துடைக்க,
இல்லையேல் உன்னோடு
சேர்ந்து அழ.

முள் நீத்த ரோஜா




அழகு என்பது ஆணானால்
உன் அடிமையாக இருக்கும்.
பழகிப் பிரியும் வேளையில்
நெஞ்சம் கடுமையாக வலிக்கும்.

எரிமலையின் பனிப் பூவாய்
உன்னை நான் கண்டேன்.
இருள் விடிந்தும் தீராக்
காதல் என்னுள் கொண்டேன்.

சிவனுக்கு அந்த செங்கமலக்
கண்ணாள் பார்வதி துணை.
இவனுக்கு இடர் நீத்த
நங்கை நீயே துணை.

கவிதை விதைகளை
என்னுள் துவினாய்.

காதல் ஊற்றி
வளர்த்த செடி,

காலம்தான் அழிக்குமோ!
தமிழாக செழிக்குமோ!

உணர்ந்திட எனக்கு
உயிர் இல்லை.
உரைத்திடு முள்
நீத்த ரோஜாவே.

எங்கே இருந்தாய்



காதலே என்
காதலே கருங்
கேசத்தால் என்னைக்
கொன்றதேன்?
தனிமையில் என்னை
விட்டு தூரம் நீ
சென்றதேன்?

உறங்கும் வரை
உந்தன் சிந்தனை
உறங்கிய பின்பும்
உளறும் எந்தனை,
கண்ணீரில் தள்ளிவிட்டு
கடுமமில கொல்லியிட்டு
காணாதேசம் சென்று
தந்தனை தண்டனை.

என் மூச்சுக் காற்றில்
உன் முகம் கண்டேன்.
உன்னைக் கண்ட பின்பே
உணவு உண்டேன்.

இத்தனை நாள் எங்கு
இருந்தாய்?
தனிமையில் நானோ
இறந்தேன்.

புன்னகை சுமந்த
உதடுகள் எங்கே?
பூக்கள் சுமந்த
கூந்தல் எங்கே?
என்னைப் பார்த்த
பார்வை எங்கே?
என்னை ஈர்த்த
பாவை எங்கே?

தேடியே நான்
தேய்ந்து போனேன்.
வாடியே நான்
மாய்ந்து போனேன்.

வேண்டுமே உன்மடி
என்றுமே!

நீ நகம் கடிக்கையில்
நனைந்து போனதே என்னுயிர்.
நீ முகம் காண்கையில்
மறந்துப் போனதே என்பெயர்.

என் கவிதைத் தோட்டம்
கண்ணீர் சிந்தி அழுதது.
என் கட்டுடல் அது
செந்நீர் சிந்தி விழுந்தது.

கானல் தேசம் என்தேகம்.
மழையாக நீவிழக் கூடாதா?
காந்தம் உமிழும் பார்வைகள்
என்கண்கள் கண்டு நாணுமா?

மறுபிறவி இருந்தால்
துறவியாவேன்.
என்னைத் துறந்து
போவேன்.
உன்னுள் இறந்து
போவேன்.

பாதங்கள் என் கரங்கள்
தாங்குமா?
மெல்லிடை அதில் என்னுயிர்
நீங்குமா?

நீ பேசிய பேச்சு.
எண்ணி விடுகிறேன்.
வெப்ப மூச்சு.
உன் நினைவுகளோடு
என் காலம் செல்லும்.
உன் நினைவையன்றி
எது என்பெயரைச்
சொல்லும்?

Monday, September 29, 2008

உதிரும் கூந்தல் பூ





நடைபாதை வீதியில்
நடக்கும் போது
நங்கை கூந்தல்
நறுமண மலர்
புல்லின் மடியில்
பூத்துக் கிடந்தால்
நெஞ்சில் ஆனந்தம்.

பூவை எடுத்து
பூவையிடம் நீட்டி
உனதாவென வினவ,
ஆமென்று சொல்லி
அவள் குழலிடை
பதுக்கி புன்னகை
புரிந்தால் ஆனந்தம்.

இல்லையென பொய்யை
இயல்பாய் உரைத்து
என்னிடமே பூவைத்
தந்து விட்டால்
ஞாபகமாய் எனக்குள்
எப்போதும் இருக்கும்
நசுங்கிய பூ நாளெல்லாம்
ஆனந்தம்.

அலையும் கரையும்




நீலக் கடலின்
நித்திய அலைகளின்
சத்தம் கேட்டே
நித்தம் திரும்பும்
விரும்பிய அலைகள்.

வாய்வரை வந்த
வார்த்தை உதட்டோடு
ஒளிந்ததால் ஊமையாகி
நிற்கும் அலைகள்.
சொல்ல முடியாமல்
மெல்லமாய் திரும்பும்.

காதல் மொழி
கேட்பதற்கே காதை
வைத்திருக்கும் கரைகள்
அலைகளின் பிரிவால்
அழுது நிற்கும்.

பரிசாய் அலைகள்
தந்த ஈரத்தை
மட்டும் இதயத்துள்
தாங்கி காத்திருக்கும்
கரைகள்.

காதலை சொல்லி
விடுவோம் என்ற
நம்பிக்கையில் அலையும்,
கேட்டுவிடுவோம் என்ற
நம்பிக்கையில் கரையும்......

காதல் முடிவதில்லை.

கோவிலுக்கு உன்னோடு





கடவுளிடம் சொல்லி இருந்தேன்.
உன்னோடு வருவேன் என.

கடவுளும் காத்திருந்தான்.
கண்மணி உன்னோடு என்னைக்
காணும் நொடிக்காக.

உன் உதடுகள் வர மாட்டேன்
என உரைத்த நேரத்தில்
என் உயிருக்குப் புரிந்து
விட்டது நீ வருவாயென.

பிறவிக் குருடன் பார்வைப்
பெற்றதைப் போல உன்னை
வியந்துப் பார்த்தேன்.
சிலைகள் எல்லாம் கோவிலுக்குச்
சென்றால் யாருக்குத்தான்
வியப்பு வராது?

தாய்க் கோழியின் சிறகில்
தஞ்சம்புகும் கோழிக்குஞ்சாய்,
உன் அருகாமையில் இடம்
பிடித்து நின்றன கால்கள்.
இல்லை அடம் பிடித்து
நின்றன கால்கள்.

உன் இருக்கை அருகே
ஓரிடம் காலியாக,
யாரோ ஒருவர் அமர்வதாக
எனக்கு சைகை காட்டினாய்.

உன் மனதில் அமர்ந்துவிட்ட
எனக்கு உன் அருகில்
எதற்கடி இருக்கை?

கோவிலை அடைந்தோம்.
என் கடவுள் புன்னகைத்தான்.
தவங்கள் நிறைவேறும் போது
பக்தனுக்கும் கடவுளுக்கும்
இடைவெளிகள் இருப்பதில்லை.
நானும் புன்னகைத்தேன்

உன்னை என்னிடம் சேர்த்தபிறகு
இனிமேல் அவன் நேரில்
வரமாட்டான் என்பது எனக்குத்
தெரியும்.

உன்னை விட வேறெந்த
வரத்தையும் எனக்கு அவனால்
கொடுத்துவிட முடியாது
என்பது அவனுக்கும் புரியும்.

இனிமேல் அவன் வருவதற்கு
காரணங்கள் இருக்கப் போவதில்லை.
நம் திருமணத்தைத் தவிர.

"ஏதாவது வேண்டி கொள்ளுங்கள்"
எனச் சொல்கிறாய்.

நீ அருகில் இருக்கையில்
என் வேண்டுதல் என்னவாக
இருக்கும் என்பது உனக்குத்
தெரியாதா என்ன?

அங்கும் இங்கும் அசையும்
உன் கருவிழிகள் காண்கையில்
அறிவியல் கற்பித்த தனிஊசலின்
தத்துவம் நினைவிற்கு வரும்.

முற்றுப் புள்ளிகள் இல்லாமல்
நீ பேசிக் கொண்டே இருந்தாய்.
தமிழ் மூச்சிரைத்துத் நின்றது.

தசைகளைக் கிழித்து உதிரத்தில்
தோயும் ஊசிமுனைகளாக
"போகலாமா" என்றாய்.

யுகநேரம் உன்னோடு
பேசினால்கூட கிளம்பிவர
விரும்பாத மனம் வார்த்தைகளால்
சொன்னது.

"பத்து நிமிடம்"

நிமிடங்கள் கரைந்தன.
நாம் பிரியும் நேரம்.
கடவுளுக்கும் களிப்பில்லை.

இந்த தற்காலிக பிரிவுகள்
நம்மைத் தகர்த்துவிடாது
என்பது சிவனுக்குத் தெரியும்.
வாடிய அவ்ன் முகம்
மலரத் தொடங்குகிறது.

என் இதழ்களும் பூக்கத்
தொடங்குகின்றன.
என்னையும் அறியாமல்
கரங்கள் கூப்பி.

எனதுயிரே


எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ பிறந்தாய்.
விழிதுயிலாமல் விலகி
நிற்க வழித்துணையாய் நீயிருந்தாய்.


உனதுருவில் உன் தருவில்
நெஞ்சம் இளைப்பாற நான்
உயிர் பிழைத்தேன்.

யாருமற்ற வீதிகளில் அழகாய்
நிற்கும் கோலம் போலவே
நானும் வீற்றிருந்தேன்.

கோலம் தன்னை தனக்குள்
கரைக்கும் மழைத்துளியாய்
நீயும் என்மேல் விழுந்தாய்.

கொடும் தணல் தன்னை
தனக்குள் பூட்டிவாழும்
பூமியைப்போல்,
சிரிப்பையும் அழுகையையும்
எனக்குள் சேர்த்து வைத்தேன்.

இரத்த நாளங்கள் இரசித்திட
திசுக்கள் எல்லாம் தித்திக்க
உதிரத்தில் உருண்டு நின்றாய்.
உயிரை திருடிச் சென்றாய்.

உன் அதரம் அசையும்
ஓசைதனில் இசைகள் கேட்டேன்.
உன் பாதங்கள் போகும்
பாதையில் திசைகள் பார்த்தேன்.

பிரபஞ்சத்தின் இடுக்குகளில் வசித்து
வந்தவன் உன்னால் தான்,
பிரபஞ்சத்தையே இடுக்காகப்
பார்க்கிறேன்.

அருகில் நீயிருந்து வார்த்தை
வராத சமயங்களில் உதடுகள்
வியர்க்கிறேன்.

உள்ளங்கை ரேகைகளில்
வரிகளாக படர்வது நீதான்.
இருளிலும் என்னை
நிழலாய் தொடர்வதும் நீதான்.

நிகழ்காலம் அது இப்படியே
நீண்டுவிடக் கூடாதா?
என் வருங்காலம் முழுதும்
உன்னோடு வாராதா?

Thursday, September 25, 2008

பாரதி கண்ணம்மா


எங்கேயோ கேட்ட குரல்
இங்கே வந்து ஒலிப்பதென்ன?
நெஞ்சில் விழுந்த விதை
இன்று விழுதாய் முளைப்பதென்ன?

தீதில்லா ஒரு காதல்
தீர்ந்து போகக் கூடுமோ?
மேகம் இருக்க நிலவை
மின்னல் வந்து மூடுமோ?

யாரடி நீ கண்ணம்மா?
பாரதியின் கவி பெண்ணம்மா

ஓரப்பார்வையில் உயிர்
என்னை அழைப்பதேனோ!
ஈரப் போர்வையாய் இதயம்
நனைந்து உயிர் பிழைப்பதேனோ!

இரண்டடி குறள் இனிமைதானடி
ஓரடி நீயடி மற்றடி நானடி.
பிரித்திட யாரடி பாவையே கூறடி.

மனம் ஒன்றியபின் மானிடர்
என்ன செய்யக் கூடும்.

நீ


எனக்கென இறைவனால்
இயற்றப்பட்டு கண்முன்
பூத்தக் கவிதை நீ.

முள்களை மட்டுமே
தந்தவர்களுக்கு மத்தியில்
முதன்முதலாய் பூக்களைக்
கொடுத்ததும் நீதான்.

தழும்புகளில் எல்லாம்
மயிலிறகாய்த் தடவிக்
கொடுத்தவள் நீதான்.

வலிகளால் நான்
வதையும்போது வருடி
விட்டவளும் நீதான்.

உன் புன்னகைப்
பூக்களை நுகர்ந்த பின்தான்
நானும் மனிதனானேன்.

உன்மேல் அன்பைப்
பொழியும் போதுதான்
நானும் புனிதனானேன்.

நான் தொலைத்த
வசந்த காலங்களின்
ஒட்டுமொத்த சேமிப்பு நீ.

நேற்றுவரை நான்
காத்துவந்த மெளனங்களின்
சாவி நீ.

உனக்குள் தொடங்கி
உனக்குள் முடங்கி
உனக்குள் முடிந்து
விடுமென்றால் வாழ்வு
அர்த்தம் பெறும்.

உன் சிறுவிழிகளில்
சிதைந்து,
உன் குறுநகையில்
புதைந்து,
உன் அருகாமையில்
என் ஆயுள்
முடிய வேண்டும்.

உன் நிழலினில்
என் நாட்கள்
நீள வேண்டும்.

என் அருகில் நீ
இருந்து நானழுதால்
கண்ணீரும் தித்திக்கும்.
உன் மடியில்
நிகழ்வதானால் என்
மரணம் கூட
மகிழ்ச்சிதான்.


என்றும் உனக்காக,
உதயகுமார்

அழகின் அழகே


உன் சுட்டுவிரல் தொட்டுவிட
சூரியக் கதிர்கள் துடிக்கும்.
உன் பட்டுஇதழ் பட்டுவிட
பருவ மலர்கள் வெடிக்கும்.

புல்லின் தாகம் தீர்க்கும்
பனித்துளி உன் பருவோ?
அழகின் மோகம் கூட்டும்
பால்நிலா உன் உருவோ?

அழகே ஏய் அழகே
அடக்கி வைத்த அழகே!
மின்னல் கூட்டம் சேர்த்து
மின்மினிப் பூச்சிகள் செய்வேன்.
உன் கூந்தலில் அதைச்சூடி
உயிரில் வெளிச்சம் காண்பேன்.

உன் வியர்வைத் துடைக்க
வானக் கைக்குட்டை தருவேன்.
உன் வளையல் நிறங்கண்டு
வானவில் நாணிப் போனதே!

நீ கிறுக்கி எறிந்த
காகிதம் கவிதை நூலகமானது.
நீ பிதற்றிய வார்த்தைகள்
தத்துவமாக உலவி வரும்.

இலக்கணம் அறியா இளைஞனை
இலக்கியம் எழுதத் தூண்டாதே!
தலைக்கணம் அறியாத் தமிழனை
தன்னலம் கொள்ளச் செய்யாதே!

அஹிம்சை காரியே உயிர்
கொல்லல் பாவம் தெரியாதா?
இம்சை செய்யும் விழிக்கு
விடுதலை என்பது புரியாதா?

Wednesday, September 24, 2008

என் காதல்


கட்டி அணைப்பதற்கும்,
திட்டி தீர்ப்பதற்குமே,
என் காதல் பாதி
தீர்ந்து விடுகிறது.

மிச்சம் இருக்கும்
காதல் ஊடலுக்கும்
தேடலுக்கும் உதிர்ந்து
விடுகிறது.

நத்தை சுமக்கும் கூடுபோல்
எப்போதும் காதலைத் தூக்கிச்
சுமக்கிறேன்.
பாரமென முன்பு
எண்ணியது இப்போது
பழகி விடுகிறது.

முதல்முறை பார்த்து
குரைக்கும் நாய்,
பிறகு வரும் சந்திப்புகளில்
வாலை குழைத்து
கொஞ்சுவதுபோல் தான்
என் காதலும்
என்னை கொஞ்சுகிறது.

எனக்கான காதலை
நீயும்,
உனக்கான காதலை
நானும்,
தத்து எடுத்துக்
கொள்ளும் வேளைகளில்
யாருடையது எனத்
தெரியாமல் குழம்பிப்
போகிறது என் காதல்.


விரிசல்களையும்
விரசங்களையும்
தாண்டி அது வேர்விடுகிறது.
பார்வைகளும்
தவிப்புகளும் நீராய்
அமைந்து அதை வள்ர்த்து
விடுகின்றன.

அறுவெறுப்பான பொருள்களிலும்
அழகைத் தேடி ஆராதிக்கிறது
என் காதல்.

உன்னை புண்படுத்தி
விட்டுத் தனியாக
அமர்ந்து அழும் வேளைகளில்
கேலியாய் என்னைப் பார்த்து
சிரிக்கிறது என் காதல்.

காரணம் இன்றி
சிலநேரம் காத்திருக்கும்
பொழுதுகளில் கோபமாய்
முறைக்கிறது என் காதல்.

ஒவ்வொரு முறை
நான் தொலைவதும்,
என்னைக் கண்டுபிடித்து
தருவதுமாய் எனக்கும்
என் காதலுக்கும்
இடையேயான கண்ணாமூச்சி
களைகட்டுகிறது.

நள்ளிரவுகூடத் தெரியாமல்
உன் ஞாபகத்தில்
காலத்தோடு கரையும்
நாள்களில் நமக்கான
நிகழ்வுகளை எடுத்துத்
தருகிறது என் காதல்.

அயர்ந்து தூங்கும்
அதிகாலைகளில் துயிலாமல்
விழித்து இருந்து என்னை
எழுப்புகிறது என் காதல்.

உனக்காக கவிதை
எழுதும் களிப்பான
தருணங்களில் கதவருகே
அமர்ந்து வார்த்தைகளுக்கு
வழிகாட்டுகிறது என் காதல்.

என் காதலே நான்
உன்னை என்ன செய்ய?
நீ தான் என்னை
ஏதேதோ செய்து
கொண்டிருக்கிறாய்.

என் காதலே உன்னையும்
நான் காதலிக்கிறேன்.

Tuesday, September 23, 2008

நீ நான் நாம்


விடியல் பூத்த வானமே,
உன்னில் விடியாமல்
மறைந்திருக்கும் விண்மீன்
நான்.

என் பகலினில்
பதுங்கி இருந்து
இரவுகளில் நடமாடும்
இயந்திரவியல் பூ நீ.

எனக்கான கடிகாரத்தில்
ஓடாமல் காத்திருக்கும்
காலத்தின் கடிவாளம் நீ.

உனக்கான நாள்குறிப்பில்
உருளாமல் உனக்காக
உட்கார்ந்து இருக்கும்
நேரத்தின் நீர்த்திவலை நான்.

நிழலாய் போகும் வாழ்வில்
நிஜமாய் நிற்கும்
நினைவு நீ.

நிஜமெனத் தோன்றும்
நிழலில் கரையும்
கனவு நான்.

Monday, September 22, 2008

அலைகளுக்கும் உன்மேல் கரிசனம்


கடற்கரை மணலில்
உன் பெயரை எழுதி
வைத்தேன்.

அலைதொட மறுத்தது.
அழகான கவிதை
அழிந்துவிடக் கூடாதென்று.

புன்னகை




உன் புன்னகை

கடவுளின் கடைசி
ஆசை.

எனக்கோ முதல்
கவிதை.

நினைவுகள்




நீ வந்து விழுந்த
இந்த நெஞ்சம்
உன்னைத் தூக்கிக்
கொண்டு எங்கும் ஓடும்.

நீ இல்லை எனத்
தெரிந்தும் கண்கள்
உன்னை எங்கும் தேடும்.


நிலவொளியில் ததும்பும்
இரவுகளில் உன் நினைவுகள்
இதமாய் தாலாட்டும்.
வெப்ப நிலங்களில்
வேகும் கணங்களில்
ஞாபங்கள் நீராட்டும்.

இரவுப் பொழுது,
நிலவு வெளிச்சம்.
ஒற்றையடிப் பாதை,
வயல்வெளி காற்று.
மண்வாசனை

இவற்றோடு அசைபோட்டுக்
கொண்டிருக்கிறேன்.
உன் நினைவுகளை.

ஒளிதேவதை




இருட்டாய் கிடக்கிறது
நான் வசிக்கும் அறை.

முதன்முதலாய் சாளரம்
திறந்து வைக்கிறாய்.

வெளிச்சக் கீற்றுகள்
இருட்டை விழுங்கி
தன்முகத்தை அறைக்குத்
தந்துவிடுகின்றன.

எனக்குள் கிடந்த
இருளை உன் புன்னகை
மென்று தின்றதைப் போல்.

காலைத் தென்றல் இதமாய்
இதயத்தை வருடி விடுகிறது.
நாசித் துளைகள் இந்த
நாளில் நன்றியைப் பெறுகின்றன.

"இத்தனை நாளாய் இதை
எல்லாம் இழந்து வாழ்ந்து
இருந்திருக்கிறேனே!
நீ முன்பே வந்து
இருக்கலாம்." என்றேன்.

சிரித்துக் கொண்டே
சலனமின்றிச் சொன்னாய்.

"ஒளியின் இனிமை
இருள் கொடுத்ததுதான்"

மெதுவாக உணர்கிறேன்.
உன் துணையின் பெருமையும்
என் தனிமைகள் தந்தவைதான்.

எனக்கான அடையாளம்




நிற்காமல் போகும்
காலத்தின் சுழற்சியில்
நான் காணாமல்
போனாலும் என்னை
அடையாளம் காட்டும்
உன் ஞாபங்கள்.

நீ கவிதை எனக்கு



"உனக்காக சமீபத்தில்
எழுதிய கவிதை ஒன்றை
சொல்லட்டுமா" என்றேன்.

"ம் ம்" என்றாய்.

"மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.

எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க, பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன"

என்றேன்.

"எல்லாம் பொய்" என்றாய்.

"எல்லா கவிதையும் பொய்யைதான்
தாங்கி நிற்கும்.
மெய்யை தாங்கி இருக்கும்
ஒரே கவிதை நீதான்"

என எனக்குள் நினைத்துக்
கொண்டேன்.

"உன் நேசமும் பொய்தானா?"
என வினவுவது போல்
ஓர் பார்வையை ஏவிவிட்டு
நின்றாய்.

உன் விழிகள்
வினவிக் கொண்டே
இருந்தன.
விடை சொல்ல முடியாத
சில வினாக்களுள் உன்
விழிகளும் ஒன்று.

பதிலாக பார்வையையே
நானும் தருகிறேன்.

இதயத்தில் நான் தேக்கி
வைத்த நேசம் இன்று
இமைகளின் அடியில்
உனக்காக உறைந்து
கிடக்கிறது.

புரிந்து கொள்வாயா?
இந்த ஈரம் உன்
நேசத்தின் களிப்பில்
முளைத்தது என்று!

காத்திருந்தேன்



வாழ்விலேயே முதன்முதலாய்
காத்திருந்தேன்.

என்னையும் ஓருயிர்
காத்திருக்கச் சொன்னதை
கண்கள் நம்பவில்லை.
காலமும் தான்.

உணவு விடுதியின்
முகப்பில் உனக்காக
காத்திருந்தேன்.

சில பார்வைகளும்
பல பாதங்களும் என்னைக்
கடந்துச் செல்ல,
அவை எல்லாம் நீயில்லை
என உள்மனம் சொல்ல,
உன் விழிகளை எதிர்பார்த்து
காத்திருந்தேன்.

கண நேரம் காத்திருந்ததே
காலம்கோடி கடந்ததாய்
தோன்றியது.

ஒவ்வொரு நொடியும்
ஓடாமல் தேங்கி கிடந்தது.

இமைகள் ஆயிரம் முறை
இடித்துக் கொண்டது.

சில நிமிடங்களில்
எத்தனை தேடல்,
எத்தனை தவிப்பு,
எல்லாமே இனித்தது.

இப்போது எல்லாத் திசைகளும்
உன்னையே பிரதிபலித்தன.

புன்னகைத்துக் கொண்டே
என்முன் நின்றாய்.

உயிருக்குத் தெரியும்.
உண்மையாய் அது நீதானென்று.

ஏனெனில் எந்தக்
கற்பனையாலும்
பிரமையாலும் உன்
புன்னகையைப் போன்றதோர்
அழகான பிரதிபலிப்பை
ஏற்படுத்திவிட முடியாது.

உன் நிழல் என்
நிழலை நெருங்கும்
அந்த கணத்தோடு
என் காத்திருத்தலும்
முடிகிறது.

Friday, September 19, 2008

நீ வேண்டும்


அன்பே மடியோடு
தாங்கி கொள்ளவும்,
மார்போடு ஏந்திக்
கொள்ளவும்
நீ இருக்கும்போது
மரணம் கூட
என்னிடமிருந்து
மரணித்துவிடும்

சந்தோஷம்


அமிலம் பொழிந்த விழிகள்
ஆனந்தக் கண்ணீரைச் சொரிகிறதே!

அளவு இல்லாதொரு சிறகு
அகிலம் எங்கும் விரிகிறதே!

மலையாய் கனத்த இதயம்
இலையாய் இன்று பறக்கிறதே!

உன்முகம் தரும் ஆறுதலில்
வலிகள் எல்லாம் மறக்கிறதே!

சந்தோஷம் வானை முட்டுதே!
முள்ளும்கூட தேனைச் சொட்டுதே!

இதயம் இருப்பது இடமா
வலமா குழப்பம் முட்டுதே!

ஐந்து நிமிட பேச்சிலே
ஆயுள் கோடி கூடுதே!

கண்கள் இரண்டும் நதியாகி
கடலை நோக்கி ஓடுதே!

கனவில் வாழ்ந்த தேவதை
நினைவில் வந்து நின்றதே!

கபடம் இல்லாத பேச்சில்
கடத்தி என்னைக் கொன்றதே!

ஐநூறு ரிக்டர் பூகம்பம்
அமைதியாய் எனக்குள் நடக்கிறது.

பேராழி தாண்டியோர் பிரளயம்
மெதுவாய் என்னைக் கடக்கிறது.

இனியொரு முறை பிறப்பேனோ?
உன்னை மறந்தும் மறப்பேனோ?

விழிகளை உனக்காய் திறப்பேனோ?
உயிரையும் உன்னிடமே துறப்பேனோ?

குப்பை காகிதம் என்னுள்
குட்டிக் கவிதைகள் எழுதினாய்.

பார்வை என்னும் ஏரால்
பாலை நிலத்தை உழுதாய்.

உரிமையாய் கேள்விகள் கேட்டாய்.
உறக்கத்திற்கு தடை போட்டாய்.

செடியாய் தனியாய் கிடந்தேன்.
தோட்டம் எனக்குள் விதைத்தாய்.

பட்ட கஷ்டங்கள் அனைத்தையும்
பட்டென குழியில் புதைத்தாய்.

இனிமேல் இதுபோல் நடக்குமோ?
இதயம் அதில்தான் கிடக்குமோ?

உதடுகல் ஹைக்கூ பேசியது.
உயிரில் தென்றல் வீசியது.

எழுதும் கைகள் இனிக்கிறது.
தாங்கும் தாள்கள் கனக்கிறது.

பகலெனக் கூடத் தெரியாமல்
விண்மீன் வானில் உதிக்குதே!

இதயம் என்னும் பந்து
தலைக்கும் காலுக்கும் குதிக்குதே!

பாதங்கள் பதிந்த இடத்தில்
வானவில் கூட்டம் முளைக்குதே!

விரல்கள் எல்லாம் நீண்டு
விண்ணை தாண்டி துளைக்குதே!

Thursday, September 18, 2008

நீயும் நானும்




உன் அருகில் இருக்கையில்
இதயம் தூரம் ஆனதடி.
நான் தொலைவில் துடிக்கையில்
அது அருகே வந்ததடி.

உன்முகம் கண்ட நாள்களில்
அகம் மட்டும் தனியாய் மகிழும்.
உன்னகம் கண்ட இந்நாளில்
என்நகம் சுகமாய் தவழும்.

தூரத்தில் நீ இருந்தாலோ
தொலைபேசி உன்னை அழைக்கும்.
அருகில் நீ வந்தாலோ
வார்த்தைகளும் வர மறுக்கும்.

மங்கை மொழி மழலையடி.
காலமெல்லாம் கேட்கும்
வரம் கிடைக்காதா?

நங்கை விழி நாகமடி.
நாளெல்லாம் உயிரை குடிக்காதா?

மண்ணில் என்னைப் புதைத்தால்
மாறிவருவேன் உன் உருவில்.
உன் மனதில் என்னை
புதைத்தால் மீண்டும் வரக்கூடுமோ.

நான் சிறகுதிர்ந்த பறவை.
நீயொ சிரிக்கின்ற வானம்.

உன்னில் பறக்க முடியாதோ.
உன்மனமும் ஒருநாள் விடியாதோ.

Wednesday, September 17, 2008

போகாதே


நீ போகிறேன் என்றாய்.
உயிர் "போகாதே" என்றது.
உதடுகள் "போ" என்றது.

உயிரும் உதடும் முரண்பட்டு
நின்றது அதுதான் முதல்முறை.

என் இருவிழிகளும்
உன் கருவிழிகளை நோக்க,
கனத்த இதயமோ
கண்ணீரை உனக்காக வார்க்க,
நீ விலகி சென்றாய்.

நீ நடந்த பாதைகளை
பார்வைகள் பின்தொடர,
புள்ளியாக மறைகிறாய்.

நானோ பூமியிலிருந்தே
மறைகிறேன்.

Monday, September 15, 2008

உலகம்


உன்

கற்றை கூந்தலின்
ஒற்றை குழல்
சுற்றி திரிந்தது,
மேகங்கள் பிறந்தன.

நெற்றி வியர்வை
பூமியை முத்தமிட்டது.
பனித்துளி படர்ந்தது.

இமைகளை திறந்தாய்.
கதிரவன் உதித்தான்.
இமைகளை மூடினாய்.
இரவுகள் முளைத்தன.

கொலுசுகள் அசைந்தன.
இடிகள் கொட்டின.
பார்வைகள் தொட்டன.
மின்னல் வெட்டியது.

வாயை திறந்தாய்.
பூக்கள் மலர்ந்தன.
இதழ்கள் அசைந்தன.
பறவைகள் பறந்தன.
கண்ணீர் விட்டாய்.
பரவைகள் விரிந்தன.

கடிந்து பேசினாய்.
புயல் வீசியது.
என்னுடன் நடந்தாய்.
தென்றல் பேசியது.

நீ சிரித்தாய்
அலைகள் மோதின.
உன் வளையல் கண்டதும்
வானவில் மிதந்தது.

உன் கழுத்து
என்புறம் திரும்பியது.
சங்குகள் தோன்றின.
உன் பாதம்
மண்ணை தொட்டது.
சோலைகள் குவிந்தன.

நீ என்னை விட்டுப்
பிரிந்து சென்றாய்.
பாலைகள் ஊன்றின.
உன் கூந்தல் பூக்கள்
வாடி நின்றன.
பஞ்சம் உண்டானது.


உலகம் தோன்றியதை
பலவிதிகள் கூறினாலும்,
என் உலகம் தோன்றியது
என்னவோ உன்னால் மட்டுமே.

போய் தூங்கு


போய் தூங்கு.

"ஏற்கனவே ஒரு நிலா
இங்கு விழித்து இருக்கும் போது
இங்கு நமக்கென்ன வேலை"
என நினைத்து கொண்டு
வான்நிலா சென்றுவிடப் போகிறது.

நீ

தனிமையில் வெறுமையாய் கழிந்த
தருணங்களை நீதான் நிரப்பி தந்தாய்.
இரும்பாய் கனத்த இதயத்துள்
ஈரத்தை கசிய வைத்ததும் நீதான்.

மனதிற்குள் தேங்கி நிற்கும்
வலிகளுக்கு வடிகாலாய் வந்து
இன்று நீயும் ஒரு
வலியாய் சேர்கிறாய்.

அன்பை பொழிந்து நின்ற எனக்குள்
அம்பை எய்துவிட்டு அகலுகிறாய்.
சிலகாலம் உன்னால் சிரித்து கிடந்த
நான் மீண்டும் என் பழைய
உலகத்திற்கே செல்கின்றேன்.

மரணம் என்பது
உடலை உயிர்
பிரிவது தான்
இதுநாள் வரை
நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று
அது நீ என்னை விட்டு
பிரிவது என
புரிந்து கொண்டேன்.

மரணித்து மீண்டும்
பிணமாய் வாழ்கிறேன்.

இரவுகளில் தலையணை
நனைக்கும் கண்ணீர்.
போலியாய் புன்னகை
சுமக்கும் உதடு.
எனக்குள் நானே கூறிக்
கொள்ளும் ஆறுதல்.
மனிதர்களிடமிருந்து விலகி
மெளனமாய் செல்வது.

எனவென் நரகவாழ்க்கை
நீள்கிறது.

கண்ணீருக்கு காவலாய் என்
கவிதைகளை வைத்துவிட்டு
கண்மூடி கதறி அழுகிறேன்.
நீ துளிகளாய் சிதறி விழுகிறாய்.

என் கவலைகள் எல்லாம்
கண்ணீரின் வழியே மெதுவாய் கரைகிறது.
நெஞ்சுக்குள் நெருப்பை விட்டு
யாரோ நெருடுவது போலொரு உணர்வு.

வலிக்கிறது. வலிதாங்க இயலாமல்
வாய் எதையோ முணுமுணுக்கிறது.
உற்று கேட்கும் போதுதான் புரிகிறது.
அது உன் பெயரென.

வலிகளை எல்லாம் வார்த்தைகளாய்
மாற்ற முடியுமெனில் தாங்கி
கொள்ள பக்கங்கள் போதாது.

நேற்றுவரை தொடுவானமாய் இருந்த
நீயின்று தொலைதூரம் ஆகிறாய்.
நானோ தொலைந்து பொகிறேன்

எல்லாமென தோன்றிய நீ
யாரோவாகி போகிறாய்.


திருவிழவில் தாயைப்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தை தனியாக நின்று
அழுது கொண்டிருப்பதை
போல அழுதுகொண்டு
இருக்கிறேன்.


தனிமையும் வலிகளும்
தொடரும்.
நீ மீண்டும் வந்து
என்னை மீட்கும்வரை.

மெளனம்



கடைசியாய் நீயும் நானும்
சந்தித்து பிரியும் வேளையில்
பேசிய மொழி.

கலங்கரை விளக்கு



வழிகாட்டும் கலங்கரை விளக்குகூட
நீ விழிகாட்டியதால் கலங்கி
களங்கமறை விளக்காக மாறிவிடுகிறது

மலர் கண்காட்சி


மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.

எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க,
பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன.

நகம்


மரணம் அடையும் நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருக்கும் ஒரே
பொருள் உன் நகமாகதான்
இருக்கும்!

அழுகை


நான் அழுவதற்கான காரணங்களை
முதல் முதலாய் சொல்லி
கொடுத்தது நீ தான்.

உன்னைபோல் எதுவும் ஆழமாய்
என்னை பாதிப்பதில்லை.
ஆழமாய் எனக்குள் கிடக்கும்
எதற்கும் உன் பெயர்தான்.

தனிமையில் கிடந்து வாடும்
நேரங்களில் எல்லாம் துணையாகிப்
போகின்றன உனக்காக நான்
சிந்தும் கண்ணீர் துளிகள்.

உனக்கு தெரியாமல்
அறையை தாளிட்டு கொண்டு
அலறி கதறும் என்
அழுகையை நீ அறிவதற்கான
வாய்ப்புகள் அறவே இல்லை.

கண்ணீரின் சாரைகளில்
உன் கனவுகளின் சாரல்கள்
லேசாய் என்னை நனைக்க
மறுப்பதில்லை.

நள்ளிரவில் கூட நடை
போடுகிறது என் பேனாமுனை
காகிதங்களை கவிதைகளாய்
மாற்றிவிட.

ஆனால் விழிகள் மட்டும்
என்னை விட்டு நீ பிரிந்த
அந்த வினாடிகளை அழுகையாய்
மொழி பெயர்க்கின்றன.

உனக்காக அழுவதால் அழுகையும்
கூட அழகாய் தெரிகிறது.

தேவதை

ஒவ்வொரு முறை நீ
இமைக்கும் போதும் எனது
இரவு பகல் முளைக்கிறது.

மயிலிறகு சேகரிக்கும் சிறுவனாய்
உன் புன்னகையை சேமிக்கிறேன்.
"குட்டி போடுமா?" உன் புன்னகை.

பாடதிட்டம் மாறி வந்த
வினாத்தாளை பார்க்கும்
மாணவனாய் எப்போதுமே
உன்னை வியந்து பார்க்கிறேன்
எல்லா முறையும்.

ஆயுள் கைதியைப் போல்
சிக்கிக் கொள்கிறேன்.
நீ சிரிக்கும்போது தெரியும்
தெற்றுப் பல்லில்.

ஆனால் விடுதலை
மட்டும் செய்துவிடாதே.

நீ என்னோடு நடக்கையில்
நாள்கள்கூட திருநாளாகும்.
உன் கரத்தில் தரும்போது
பழையசாதம்கூட விருந்தாகும்.

தேவதையையும் சரி
தெய்வத்தையும் சரி
நேரில் கண்டதில்லை.
உன்னை காணும்
முன்புவரை.

Saturday, September 06, 2008

போய் தூங்கு

போய் தூங்கு.

"ஏற்கனவே ஒரு நிலா
இங்கு விழித்து இருக்கும் போது
நமக்கென்ன வேலை"
என நினைத்து கொண்டு
வான்நிலா சென்றுவிடப் போகிறது.

என்ன செய்ய?

நீ ஊருக்கு போகிறாய்.

நீ செல்லும் ஊரோ
நீ வருகிறாய் என களிப்பில்
துள்ளி குதிக்கிறது.

நீ விட்டு செல்லும் ஊரோ
நீ பொகிறாய் என கதறி
அழுகிறது.

Friday, September 05, 2008

கள்ளி

உதடுகளை என்னோடு
பேசவிட்டு விட்டு
கண்களால் என்னை
களவாட முயற்சி
செய்கிறாயே!

இது நியாயமா?

காத்திருக்கிறேன்

கண்ணபிரான்
கால்படும்வரை
கல்லாக காத்திருந்த
அகலிகை போலதான்
நானும் காத்திருக்கிறேன்.

அனைத்து உணர்வுகளையும்
உன்னோடு பகிர்ந்து
கொள்ள.

நீர்வழி பயணம்

தரைவழியும் வான்வழியும்
பயணித்து விட்டேன்
நீர்வழியே தான்
பயணிக்கவில்லை என்று
உன்னிடம் கூறியதற்கா
என்னை கண்ணீரில்
மிதக்க வைக்கிறாய்!

காதல் ஊனம்

கண்ணில்லாதவர்கள் குருடாம்.
காதில்லாவதர்கள் செவிடாம்.
காலில்லாதவர்கள் நொண்டியாம்.
வாயில்லாதவர்கள் ஊமையாம்.

உன்னிடம் அனைத்தையுமே
இழந்து விட்டு நிற்கிறேனே!

நான் யார்?

இரசணை

எதை எதையோ ரசித்து
நீ என்னோடு பேசிக்
கொண்டிருக்க,
நான் உன்னையே
அமைதியாய் பார்த்து
கொண்டிருப்பேன்.

"சே! உனக்கு ரசணையே
இல்லைடா" என்பாய்.

நான் உன்னை ரசித்து
கொண்டிருப்பது
தெரியாமாலேயே!

புரியாமை

நீ பார்க்கும் அந்த
பார்வைக்கு
வர சொல்கிறாயா
போகச் சொல்கிறயா
எனப் புரியாமலேயே
பாதி நேரம் விலகி
நின்றே நேரத்தை
கழித்து விடுகிறேன்.

அழகு

காலை பரிதி
பசும் பொழில்
எழில் நிலா
அந்தி வானம்
குயிலின் கானம்
மழை வானவில்
மழலை பேச்சு

இதை எல்லாம்
அழகு என்கிறார்களே!

உன்னை என்ன
சொல்வார்கள்?

காதலில் மரணம்

மரணம் என்பது
உடலை உயிர்
பிரிவது தான்
இதுநாள் வரை
நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று
அது நீ என்னை விட்டு
பிரிவது என
புரிந்து கொண்டேன்.

Monday, September 01, 2008

நீயும் நானும்


உனக்கும் எனக்குமான
இந்த நீண்ட பயணத்தில்
நெருங்கியே நடக்கின்றன,
நமக்கான பிரிவுகள்.

நான் வசிக்கும்
பருவத்தில் என்னை பார்த்து
பசுமையாய் சிரிக்கின்றன
இலையுதிர் காலங்கள்.

ஆண்டுகள் தோறும்
அடைகாத்து வரும்
நீர்நிலையின் நிசப்தத்தை
கலைத்து போகும்
கல்லை போலதான்
உன் புன்னகையும்
என்னை குலைத்து
போகின்றன.

வடுக்களில் வழியும் இரத்தத்தில்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

புதியதாய் ஏற்படும் எந்த
காயமும் உன்னை தேடுகையில்
நீ தந்ததைபோல்
பெரிதாய் வலிப்பதில்லை.

இறைவனிடம் இதுவரை
எதையும் கேட்டதில்லை.
முதல் முறையாக
கேட்க போகிறேன்.

உன்னை என்னிடம் தரச்சொல்லி.
உன்னை எனக்காக வரச்சொல்லி.

இது நிறைவேறினால்,
நான் ஆத்திகன்.
நீ எனக்கு கடவுளாவாய்.
நிறைவேறாவிடில்,
நான் நாத்திகன்.
எனக்கு நானே கடவுளாவேன்.

நீ கேட்பதை மறுப்பதும்
நீ மறுத்ததை கேட்பதும்
என்னால் இயலாத ஒன்று.

எனக்கான
இறந்தகாலம் உன் கனவுகளோடு.
நிகழ்காலம் உன் நினைவுகளோடு.

எதிர்காலத்தை மட்டும்
மிச்சம் வைத்திருக்கிறேன்.
உன் நிஜத்தோடு வாழ.
வருவாயா?

நாம் ஒன்றாக பயணித்த
அந்த பேருந்து பயணத்தை
நினைவு படுத்துகின்றன.
எனது எல்லா பயணங்களும்.


இறுதிவரை புரிவதேயில்லை.

நீ இருப்பதற்கான
காரணமும்.
உன்னை இழப்பதற்கான
காரணமும்.

நம்பிக்கை

இது

உறக்கமா மரணமா
உறுதியாய் தெரியவில்லை.

உறக்கமாய் இருந்தால்
இன்னும் கொஞ்ச
நேரத்தில் விழித்து
கொள்வேன்.

மரணமாய் இருந்தால்
ஏதோஒரு உருவில்
பிறந்து வருவேன்.

எதுவாய் இருந்தாலும்
நான் மீண்டும்
வருவது நிச்சயம்.