Friday, September 19, 2008

சந்தோஷம்


அமிலம் பொழிந்த விழிகள்
ஆனந்தக் கண்ணீரைச் சொரிகிறதே!

அளவு இல்லாதொரு சிறகு
அகிலம் எங்கும் விரிகிறதே!

மலையாய் கனத்த இதயம்
இலையாய் இன்று பறக்கிறதே!

உன்முகம் தரும் ஆறுதலில்
வலிகள் எல்லாம் மறக்கிறதே!

சந்தோஷம் வானை முட்டுதே!
முள்ளும்கூட தேனைச் சொட்டுதே!

இதயம் இருப்பது இடமா
வலமா குழப்பம் முட்டுதே!

ஐந்து நிமிட பேச்சிலே
ஆயுள் கோடி கூடுதே!

கண்கள் இரண்டும் நதியாகி
கடலை நோக்கி ஓடுதே!

கனவில் வாழ்ந்த தேவதை
நினைவில் வந்து நின்றதே!

கபடம் இல்லாத பேச்சில்
கடத்தி என்னைக் கொன்றதே!

ஐநூறு ரிக்டர் பூகம்பம்
அமைதியாய் எனக்குள் நடக்கிறது.

பேராழி தாண்டியோர் பிரளயம்
மெதுவாய் என்னைக் கடக்கிறது.

இனியொரு முறை பிறப்பேனோ?
உன்னை மறந்தும் மறப்பேனோ?

விழிகளை உனக்காய் திறப்பேனோ?
உயிரையும் உன்னிடமே துறப்பேனோ?

குப்பை காகிதம் என்னுள்
குட்டிக் கவிதைகள் எழுதினாய்.

பார்வை என்னும் ஏரால்
பாலை நிலத்தை உழுதாய்.

உரிமையாய் கேள்விகள் கேட்டாய்.
உறக்கத்திற்கு தடை போட்டாய்.

செடியாய் தனியாய் கிடந்தேன்.
தோட்டம் எனக்குள் விதைத்தாய்.

பட்ட கஷ்டங்கள் அனைத்தையும்
பட்டென குழியில் புதைத்தாய்.

இனிமேல் இதுபோல் நடக்குமோ?
இதயம் அதில்தான் கிடக்குமோ?

உதடுகல் ஹைக்கூ பேசியது.
உயிரில் தென்றல் வீசியது.

எழுதும் கைகள் இனிக்கிறது.
தாங்கும் தாள்கள் கனக்கிறது.

பகலெனக் கூடத் தெரியாமல்
விண்மீன் வானில் உதிக்குதே!

இதயம் என்னும் பந்து
தலைக்கும் காலுக்கும் குதிக்குதே!

பாதங்கள் பதிந்த இடத்தில்
வானவில் கூட்டம் முளைக்குதே!

விரல்கள் எல்லாம் நீண்டு
விண்ணை தாண்டி துளைக்குதே!

No comments: