Monday, September 29, 2008

எனதுயிரே


எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ பிறந்தாய்.
விழிதுயிலாமல் விலகி
நிற்க வழித்துணையாய் நீயிருந்தாய்.


உனதுருவில் உன் தருவில்
நெஞ்சம் இளைப்பாற நான்
உயிர் பிழைத்தேன்.

யாருமற்ற வீதிகளில் அழகாய்
நிற்கும் கோலம் போலவே
நானும் வீற்றிருந்தேன்.

கோலம் தன்னை தனக்குள்
கரைக்கும் மழைத்துளியாய்
நீயும் என்மேல் விழுந்தாய்.

கொடும் தணல் தன்னை
தனக்குள் பூட்டிவாழும்
பூமியைப்போல்,
சிரிப்பையும் அழுகையையும்
எனக்குள் சேர்த்து வைத்தேன்.

இரத்த நாளங்கள் இரசித்திட
திசுக்கள் எல்லாம் தித்திக்க
உதிரத்தில் உருண்டு நின்றாய்.
உயிரை திருடிச் சென்றாய்.

உன் அதரம் அசையும்
ஓசைதனில் இசைகள் கேட்டேன்.
உன் பாதங்கள் போகும்
பாதையில் திசைகள் பார்த்தேன்.

பிரபஞ்சத்தின் இடுக்குகளில் வசித்து
வந்தவன் உன்னால் தான்,
பிரபஞ்சத்தையே இடுக்காகப்
பார்க்கிறேன்.

அருகில் நீயிருந்து வார்த்தை
வராத சமயங்களில் உதடுகள்
வியர்க்கிறேன்.

உள்ளங்கை ரேகைகளில்
வரிகளாக படர்வது நீதான்.
இருளிலும் என்னை
நிழலாய் தொடர்வதும் நீதான்.

நிகழ்காலம் அது இப்படியே
நீண்டுவிடக் கூடாதா?
என் வருங்காலம் முழுதும்
உன்னோடு வாராதா?

No comments: