Monday, September 29, 2008

கோவிலுக்கு உன்னோடு





கடவுளிடம் சொல்லி இருந்தேன்.
உன்னோடு வருவேன் என.

கடவுளும் காத்திருந்தான்.
கண்மணி உன்னோடு என்னைக்
காணும் நொடிக்காக.

உன் உதடுகள் வர மாட்டேன்
என உரைத்த நேரத்தில்
என் உயிருக்குப் புரிந்து
விட்டது நீ வருவாயென.

பிறவிக் குருடன் பார்வைப்
பெற்றதைப் போல உன்னை
வியந்துப் பார்த்தேன்.
சிலைகள் எல்லாம் கோவிலுக்குச்
சென்றால் யாருக்குத்தான்
வியப்பு வராது?

தாய்க் கோழியின் சிறகில்
தஞ்சம்புகும் கோழிக்குஞ்சாய்,
உன் அருகாமையில் இடம்
பிடித்து நின்றன கால்கள்.
இல்லை அடம் பிடித்து
நின்றன கால்கள்.

உன் இருக்கை அருகே
ஓரிடம் காலியாக,
யாரோ ஒருவர் அமர்வதாக
எனக்கு சைகை காட்டினாய்.

உன் மனதில் அமர்ந்துவிட்ட
எனக்கு உன் அருகில்
எதற்கடி இருக்கை?

கோவிலை அடைந்தோம்.
என் கடவுள் புன்னகைத்தான்.
தவங்கள் நிறைவேறும் போது
பக்தனுக்கும் கடவுளுக்கும்
இடைவெளிகள் இருப்பதில்லை.
நானும் புன்னகைத்தேன்

உன்னை என்னிடம் சேர்த்தபிறகு
இனிமேல் அவன் நேரில்
வரமாட்டான் என்பது எனக்குத்
தெரியும்.

உன்னை விட வேறெந்த
வரத்தையும் எனக்கு அவனால்
கொடுத்துவிட முடியாது
என்பது அவனுக்கும் புரியும்.

இனிமேல் அவன் வருவதற்கு
காரணங்கள் இருக்கப் போவதில்லை.
நம் திருமணத்தைத் தவிர.

"ஏதாவது வேண்டி கொள்ளுங்கள்"
எனச் சொல்கிறாய்.

நீ அருகில் இருக்கையில்
என் வேண்டுதல் என்னவாக
இருக்கும் என்பது உனக்குத்
தெரியாதா என்ன?

அங்கும் இங்கும் அசையும்
உன் கருவிழிகள் காண்கையில்
அறிவியல் கற்பித்த தனிஊசலின்
தத்துவம் நினைவிற்கு வரும்.

முற்றுப் புள்ளிகள் இல்லாமல்
நீ பேசிக் கொண்டே இருந்தாய்.
தமிழ் மூச்சிரைத்துத் நின்றது.

தசைகளைக் கிழித்து உதிரத்தில்
தோயும் ஊசிமுனைகளாக
"போகலாமா" என்றாய்.

யுகநேரம் உன்னோடு
பேசினால்கூட கிளம்பிவர
விரும்பாத மனம் வார்த்தைகளால்
சொன்னது.

"பத்து நிமிடம்"

நிமிடங்கள் கரைந்தன.
நாம் பிரியும் நேரம்.
கடவுளுக்கும் களிப்பில்லை.

இந்த தற்காலிக பிரிவுகள்
நம்மைத் தகர்த்துவிடாது
என்பது சிவனுக்குத் தெரியும்.
வாடிய அவ்ன் முகம்
மலரத் தொடங்குகிறது.

என் இதழ்களும் பூக்கத்
தொடங்குகின்றன.
என்னையும் அறியாமல்
கரங்கள் கூப்பி.

No comments: