Monday, September 22, 2008

காத்திருந்தேன்



வாழ்விலேயே முதன்முதலாய்
காத்திருந்தேன்.

என்னையும் ஓருயிர்
காத்திருக்கச் சொன்னதை
கண்கள் நம்பவில்லை.
காலமும் தான்.

உணவு விடுதியின்
முகப்பில் உனக்காக
காத்திருந்தேன்.

சில பார்வைகளும்
பல பாதங்களும் என்னைக்
கடந்துச் செல்ல,
அவை எல்லாம் நீயில்லை
என உள்மனம் சொல்ல,
உன் விழிகளை எதிர்பார்த்து
காத்திருந்தேன்.

கண நேரம் காத்திருந்ததே
காலம்கோடி கடந்ததாய்
தோன்றியது.

ஒவ்வொரு நொடியும்
ஓடாமல் தேங்கி கிடந்தது.

இமைகள் ஆயிரம் முறை
இடித்துக் கொண்டது.

சில நிமிடங்களில்
எத்தனை தேடல்,
எத்தனை தவிப்பு,
எல்லாமே இனித்தது.

இப்போது எல்லாத் திசைகளும்
உன்னையே பிரதிபலித்தன.

புன்னகைத்துக் கொண்டே
என்முன் நின்றாய்.

உயிருக்குத் தெரியும்.
உண்மையாய் அது நீதானென்று.

ஏனெனில் எந்தக்
கற்பனையாலும்
பிரமையாலும் உன்
புன்னகையைப் போன்றதோர்
அழகான பிரதிபலிப்பை
ஏற்படுத்திவிட முடியாது.

உன் நிழல் என்
நிழலை நெருங்கும்
அந்த கணத்தோடு
என் காத்திருத்தலும்
முடிகிறது.

No comments: