Tuesday, September 30, 2008

தமிழ்த் தோழி




வல்லினங்களில் வளைந்து,
மெல்லினத்தில் மெலிந்து,
இடையினத்தில் இளைத்தேன்.
முத்தமிழில் திளைத்தேன்.
எழுத்தோடு எழுவேன்.
பிழையோடு விழுவேன்.
வெண்பாவில் வேகுவேன்.
கலிப்பாவில் சாகுவேன்.
சீரோடு சிதைவேன்.
அணியோடு வதைவேன்.
எதுகை மோனையாக
ஒத்துப் போனோம்.
மெய் மட்டும்
இங்கு கிடக்கும்.
உயிர் மட்டும்
எழுந்து நடக்கும்.
உயிர் மெய்யைச்
சேர இயலாதோ!
காதல் ஆய்தம்
ஒருகணம் துயிலாதோ!
உன் உருவம்
கண்டால் உருவகம்.
உள்ளம் கொண்டால்
உவமைத் தொகை.
செய்கைகள் யாவும்
வினைத் தொகை.
சேட்டைகள் செய்தால்
பண்புத் தொகை.

தமிழே!

நம் உறவு என்ன வகை?
உன் காதலே எனக்குப் பகை.

No comments: