Wednesday, September 24, 2008

என் காதல்


கட்டி அணைப்பதற்கும்,
திட்டி தீர்ப்பதற்குமே,
என் காதல் பாதி
தீர்ந்து விடுகிறது.

மிச்சம் இருக்கும்
காதல் ஊடலுக்கும்
தேடலுக்கும் உதிர்ந்து
விடுகிறது.

நத்தை சுமக்கும் கூடுபோல்
எப்போதும் காதலைத் தூக்கிச்
சுமக்கிறேன்.
பாரமென முன்பு
எண்ணியது இப்போது
பழகி விடுகிறது.

முதல்முறை பார்த்து
குரைக்கும் நாய்,
பிறகு வரும் சந்திப்புகளில்
வாலை குழைத்து
கொஞ்சுவதுபோல் தான்
என் காதலும்
என்னை கொஞ்சுகிறது.

எனக்கான காதலை
நீயும்,
உனக்கான காதலை
நானும்,
தத்து எடுத்துக்
கொள்ளும் வேளைகளில்
யாருடையது எனத்
தெரியாமல் குழம்பிப்
போகிறது என் காதல்.


விரிசல்களையும்
விரசங்களையும்
தாண்டி அது வேர்விடுகிறது.
பார்வைகளும்
தவிப்புகளும் நீராய்
அமைந்து அதை வள்ர்த்து
விடுகின்றன.

அறுவெறுப்பான பொருள்களிலும்
அழகைத் தேடி ஆராதிக்கிறது
என் காதல்.

உன்னை புண்படுத்தி
விட்டுத் தனியாக
அமர்ந்து அழும் வேளைகளில்
கேலியாய் என்னைப் பார்த்து
சிரிக்கிறது என் காதல்.

காரணம் இன்றி
சிலநேரம் காத்திருக்கும்
பொழுதுகளில் கோபமாய்
முறைக்கிறது என் காதல்.

ஒவ்வொரு முறை
நான் தொலைவதும்,
என்னைக் கண்டுபிடித்து
தருவதுமாய் எனக்கும்
என் காதலுக்கும்
இடையேயான கண்ணாமூச்சி
களைகட்டுகிறது.

நள்ளிரவுகூடத் தெரியாமல்
உன் ஞாபகத்தில்
காலத்தோடு கரையும்
நாள்களில் நமக்கான
நிகழ்வுகளை எடுத்துத்
தருகிறது என் காதல்.

அயர்ந்து தூங்கும்
அதிகாலைகளில் துயிலாமல்
விழித்து இருந்து என்னை
எழுப்புகிறது என் காதல்.

உனக்காக கவிதை
எழுதும் களிப்பான
தருணங்களில் கதவருகே
அமர்ந்து வார்த்தைகளுக்கு
வழிகாட்டுகிறது என் காதல்.

என் காதலே நான்
உன்னை என்ன செய்ய?
நீ தான் என்னை
ஏதேதோ செய்து
கொண்டிருக்கிறாய்.

என் காதலே உன்னையும்
நான் காதலிக்கிறேன்.

No comments: