Monday, September 01, 2008

நீயும் நானும்


உனக்கும் எனக்குமான
இந்த நீண்ட பயணத்தில்
நெருங்கியே நடக்கின்றன,
நமக்கான பிரிவுகள்.

நான் வசிக்கும்
பருவத்தில் என்னை பார்த்து
பசுமையாய் சிரிக்கின்றன
இலையுதிர் காலங்கள்.

ஆண்டுகள் தோறும்
அடைகாத்து வரும்
நீர்நிலையின் நிசப்தத்தை
கலைத்து போகும்
கல்லை போலதான்
உன் புன்னகையும்
என்னை குலைத்து
போகின்றன.

வடுக்களில் வழியும் இரத்தத்தில்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

புதியதாய் ஏற்படும் எந்த
காயமும் உன்னை தேடுகையில்
நீ தந்ததைபோல்
பெரிதாய் வலிப்பதில்லை.

இறைவனிடம் இதுவரை
எதையும் கேட்டதில்லை.
முதல் முறையாக
கேட்க போகிறேன்.

உன்னை என்னிடம் தரச்சொல்லி.
உன்னை எனக்காக வரச்சொல்லி.

இது நிறைவேறினால்,
நான் ஆத்திகன்.
நீ எனக்கு கடவுளாவாய்.
நிறைவேறாவிடில்,
நான் நாத்திகன்.
எனக்கு நானே கடவுளாவேன்.

நீ கேட்பதை மறுப்பதும்
நீ மறுத்ததை கேட்பதும்
என்னால் இயலாத ஒன்று.

எனக்கான
இறந்தகாலம் உன் கனவுகளோடு.
நிகழ்காலம் உன் நினைவுகளோடு.

எதிர்காலத்தை மட்டும்
மிச்சம் வைத்திருக்கிறேன்.
உன் நிஜத்தோடு வாழ.
வருவாயா?

நாம் ஒன்றாக பயணித்த
அந்த பேருந்து பயணத்தை
நினைவு படுத்துகின்றன.
எனது எல்லா பயணங்களும்.


இறுதிவரை புரிவதேயில்லை.

நீ இருப்பதற்கான
காரணமும்.
உன்னை இழப்பதற்கான
காரணமும்.

No comments: