Wednesday, November 26, 2008

அன்பே


விழியசைவில் ஒரு
விளம்பரமா?
அதை வாங்கிட
என்னுயிர் வருமா?

உன் விரல்நுனியில்
புது சுயம்வரமா?
என்னை மணந்திட
தேவதை வரம்தருமா?

தூரத்தில் நின்றுப் பார்த்து
தூரல்கள் தெறிக்கிறாய்.
அருகில் வந்து நின்று
அடைமழை பொழிகிறாய்.

உன் நிழல் தீண்டும்
வேளையில் என்
விரதங்கள் தீருதடி.

என் தனிமையில்
உன் நினைவுகள்
கவிதைகள் கூறுதடி.

யாரும் நடக்காத
ஒற்றையடிப் பாதை
எனக்குள் ஓர் ஊர்வலம்
நடத்திப் போகிறாய்.

நிழலும் பிரிகின்ற
வேளையில் நீயே
உயிராகிப் போகிறாய்.

அடுத்தப் பிறவியில்
நம்பிக்கை இல்லை.

பெண்ணே,

இருந்து விடு
என்னுடன்.
இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை.

கவிதை வரவில்லையடி


கவிதை வரவில்லையடி.

உன்னை காணும் போதும், நீ
நாணும் போதும் உயிரோடு
ஒட்டிக் கொண்டநேசம்
இருந்தும் கவிதை வரவில்லையடி.

வானத்தை வெறித்துப் பார்க்கையில்
நீரலைகளின் வெற்றிடத்தை நிரப்புகையில்
தோன்றிய தேவதையுன் முகம்
உடனிருந்தும் கவிதை வரவில்லையடி.

முழுநிலா என்னை முறைக்க,
காகிதங்கள் காற்றில் துடிக்க,
பேனாமுனை கரம் பிடித்தும்
பேரழகே கவிதை வரவில்லையடி.

ஆயிரம் பாவணைகள் உன்
அழகு முகம் தோற்றுவிக்க,
நான் தோற்று நிற்கும்
தருணமும் கவிதை வரவில்லையடி.

கவிதையே கவிதையை
என்ன செய்தாய்?
கவிதை வரவில்லையடி.

Monday, November 24, 2008

யாருக்கு ஐந்தறிவு


யாருக்கு ஐந்தறிவு?

வரிசையாக செல்லும்
எறும்பு கூட்டத்தை
எரிச்சலோடு கலைக்கும்
மனிதக் கால்கள்.

கூட்டமாக உண்ணும்
காக்கைகளை கடுப்போடு
கலைக்கும் மனிதக்
கரங்கள்.

நன்றியோடு வரும்
நாயை நாகரிகம்
இன்றி அதட்டும்
மனிதக் குரல்கள்.

எல்லோரும் சொல்கிறார்கள்.
விலங்கிற்கு ஐந்தறிவாம்.
மனிதனுக்கு ஆறறிவாம்.

அயல்நாட்டு பயணம்


பனிமழையில் விடிகிறது
என் நாள்கள்.
உயிர் வலிக்கும்
சுவாசம் கொள்கிறேன்.

வாழவேண்டும் அதனால்
வலியைக் கொல்கிறேன்.

உறக்கம் முழுதாய்
தொலையும் முன்னே
ஊர்தி ஏறி அலுவலகம்
அடைகிறேன்.

மொழி புரியா
அயல்நாட்டவன் தான்
ஆசானாம்.
எனக்கும் அவனுக்கும்
பொதுவான ஓர்
மொழி மெளனம்தான்.

மெளனம் புரிந்துக்
கொள்ள இது ஒன்றும்
காதல் அல்ல.

எனக்கும் அவனுக்கும்
பொதுவாய் ஒரு
புதுமொழி பிறக்கிறது.

அவன் விளக்கங்கள்
எனக்கும், என்
சந்தேகங்கள் அவனுக்கும்
புரிவதேயில்லை.

நங்கை நினைவுகள்
நெஞ்சில் நகர்வதால்,
அடிக்கடி என்னுலகம்
சென்று இவ்வுலகம்
வருகிறேன்.
காதல் இதயத்தை
கடிக்க கடிக்க
கவிதைகள் தருகிறேன்.

பணம் அறிவு
பதவி எல்லாம்
தாண்டி காதல்
வென்று விடுகிறது.

என் அகந்தை
ஆணவம் அனைத்தையும்
அவள் பெண்மை
கொன்று விடுகிறது.

வாழமட்டுமே ஆசை.
அதனால் வஞ்சியின்
வதனம் வாழ்நாள்
முழுதும் உடன்வரும்
என உள்மனம்
உரைக்க உருள்கிறது
ஒவ்வொரு நாளும்
நொடியாக.

என்னோடு வா


இமைகள் பிரியாது
உறக்கம் கலையாது
காட்சிகள் எப்படி நீ
கொடுத்தாய்?

அருகில் இல்லாமல்
அன்பையும் சொல்லாமல்
எனக்குள் எப்படி நீ
கிடைத்தாய்?


உலகோடு வாழும் வாழ்க்கை
அது வேண்டாம் பெண்ணே!
உன்னோடு வாழும் வாழ்க்கை
அது போதும் கண்ணே!
என்னுலகம் நீதானே!
என்னுயிரும் நீதானே!


நிழலாக கிடந்தேன் உயிரே
என்னை நிஜமாக்கி சென்றாயே!
இன்று என்னை நெருங்காமல்
அணுஅணுவாய் கொன்றாயே!

யாரோடும் செல்லா மனம்
இன்று உன் பின்னால்
ஓடி ஒளிந்து கொள்ளுதடி.
அதைத் திருப்பித் தராமல்
நீயே வைத்துக் கொள்ளடி.

என்தமிழ் கூறும் வார்த்தைகள்
எல்லாம் உன்னைப் பாடும்.
என்விழிகள் மட்டும் ஏனோ
உன் வதனம் தேடும்.

இம்மண்ணில் ஏன் பிறந்தேன்.
உன்னில் தொலைந்திடவோ
உன்கண்ணில் ஏன் விழுந்தேன்?
உன்னில் கரைந்திடவா?


என்னோடு இதுவரை
என் நிழல் மட்டுமே
உடன் வந்தது.

முதன்முறை உடன்
வர உன்னை கேட்கிறேன்.
வருவாயா என்
வாழ்வின் துணையே!

மகரந்தம் சேர்க்கும்
பூவாய் என் காதலையும்
சேர்த்து வைக்கிறேன்.

ஒரு வண்டாக வந்து
அதைக் குடிக்க மாட்டாயா?

வண்ணத்துப் பூச்சியும்
வயல்தொடும் தென்றலும்
நம்மைப் பற்றி கதைகள்
பேசிக் கொள்ளுதே!

காதைக் கொடுத்து
அதை நீ கேட்டாயா?

உனக்கான பாதையில் எல்லாம்
பெண்ணே நான்தானே
பாதம் தாங்கும் மண்ணாய்
இடம் பெயர்கிறேன்.

உன் பார்வையை
மெளனத்தை கவிதையாய்
என்றும் மொழி பெயர்க்கிறேன்.

Tuesday, November 18, 2008

உயிரே நலமா



பேராழி தாண்டி வந்தாலும்
உயிராவி உன்னில் கிடக்கிறது.
நலம்தானா உயிரே!

காண அழகாய் கோடியிடங்கள்
இருந்தாலும் உன் கண்கள்
காணத் துடிக்குதடி விழியே!

உன் அருகாமையில்அமர்ந்து
உன் சுவாசம் ருசித்த நாசிகள்
இன்று ஈரக்காற்றில் உன்
முகவ்ரி தேடுதடி.

உனக்கு மட்டுமே குறுஞ்செய்தி
அனுப்பிய அலைபேசி இன்று
உயிரற்று பெட்டியில் உறங்கித்
தவிக்கிறது சகியே!

உன் பெயரைத் தாங்கிய
உள்ளங்கை காயம் இன்று
தழும்பாய் மாறி மறைந்த
கதை அறிவாயா தோழி.

உன் நினைவில் உறைந்து
உறக்கம் தழுவிய பல
இரவுகளில் சில இங்கேயும்
செலவழிந்தது புரியுமா

நீ சாய்ந்த தோள்கள்
நீயின்றி கனக்குதடி.
நீ இல்லாத நாள்கள்
நகர மறுக்குதடி.

உனக்காகவே உயிர்
தாங்கி உனக்காகவே
உயிர் நீங்கி மறைய
எனக்கு ஆசையடி.

Friday, November 14, 2008

நகரும் வானவில்



நீ சிரிக்கும் நேரங்களில்
என் சிலுவைக்கும்
சிறகு முளைக்கிறது.

வானத்தை தேடி மனம்
வண்டாய் பறக்கிறது.

நேற்றுவரை என்
தலைக்குமேல் திரிந்த
வானம் இன்று தரையோடு
கிடந்து தவிக்கிறது.

உன் நினைவுகள் வானத்தை
வசப்படுத்தி இடம்
பெயர்கின்றன.

நான் நடக்கும்
பாதைகளில்
என்னைப் பார்த்து
திரும்பிக் கொள்ளும்
பூக்கள் உன்னோடு
வருகையில்
புன்னகைக்கின்றன.

வானம் பூத்த பூமி
இப்போது உன் வதனம்
பார்க்க பழகிக் கொள்கிறது.

விளையாமல் மழைக்காக
காத்து கிடந்த பயிர்கள்
யாவும் உன் புன்னகையில்
விளையக் கற்றுக்
கொள்கின்றன.

பாலைவனம் கூட
நீ நடக்கையில்
வெம்மையை உண்டு
விட்டு தண்மையை
உமிழ்கின்றன.

நீ அன்பு வழிந்து
நிற்கும் அட்சயப்
பாத்திரம்.

நான் உன்மடியில்
தவழ்ந்து உனக்குள்
அமிழ காத்திருக்கும்
காலத்தின் முடிவிலி.

பலகோடி ஆண்டுகள்
பழகிவரும் வானும்
மண்ணும் நம்மைப்
பார்த்து வியக்கின்றன.

கண் படப்போகிறது.
வைத்துக் கொள்ளடி.
என் உதிரத்தால்
ஒரு திருஷ்டிப்
பொட்டு.

வானில் சில நட்சத்திரங்கள்


வானில் சில நட்சத்திரங்கள்.
நீ உற்று நோக்குகிறாய்.
வானம் இன்னும் வெளிச்சமாகிறது.

எங்கோ ஒரு மூலையில்
நீ பார்ப்பதை சொல்லி
அனுப்புகின்றன.
காற்றுக் கற்றைகள்.

உன் விழியலைகள் என்
விரல்களைப் பிடித்துகூட்டி
செல்கின்றன.

நீ ரசிப்பதை நானும்
ரசிக்க.

மலையின் உச்சியில்
அமர்ந்து வானத்தைப்
பார்க்கிறேன்.

மேகங்கள் ஒன்றுகூடி
உன் முகத்தை தோற்றுவித்து
என்னை தோற்கடிக்கின்றன.

என் காதுகளை
செவிடாக்கி,
உன் நினைவும்
என் நினைவும் தனியாக
பிரிந்துச் சென்று
உரையாடிக் கொள்கின்றன.

நீ சூடி எறிந்த
ஒற்றை ரோஜா
பேருருவம் எடுத்து
கண்முன் உதிக்கிறது.

மலர்மணம் வீசும்
மல்லிகை கூந்தலும்,
விரலோடு சிக்கி
உடையும் குழலும்,
நினைவில் வருகின்றன.

தேவதையே என்
பிரிவின் வேதனை
உனக்கும் இருக்குமோ?

எங்கு போவேன்?


உன் விழிகள் தான்டி
பெண்ணே நான் எங்கு
போவேன்?
உன் விரல்கள் தீண்டாமல்
கண்ணே நான் என்ன
ஆவேன்?
என் நினைவுலகில்
நீராடும் தேவதை,
தாங்குமோ உன்
நினைவில் சாவதை.

தாமரைப் பூத்திருக்கும்
தடாகம் இந்த தண்ணீரைக்
கொஞ்சம் ஏந்துமா?
விழிகளாய் வாழும் கயல்கள்
இரண்டு என் இதயக்
குளத்தில் நீந்துமா?


வார்த்தைகள் எதுவுமின்றி
அருகில் வருவேன்.
உன் விழிகள் பேசுவதால்
ஊமையாகி விடுகிறேன்
உதிர்ந்து போன
உரையாடலால்.

தூக்கமில்லாத இரவுகளும்
தேதி தெரியாத நாள்களும்
உன் நினைவுகள் துப்பி
விட்டுச் சென்றவை தான்.

எனக்கானவை என நான்
நினைத்திருந்த எல்லாமும்
சிதைந்து போகின்றன
நீயென் முன் சிரிக்கையில்.

துண்டு துண்டாய்
உடைந்தவற்றை சேகரித்து
முடிக்கும் போது மறுபடியும்
சின்னா பின்னமாக்கிப்
போகிறது உன் புன்னகை.

இப்போது

நினைப்பதற்கும்
இணைப்பதற்கும்

எதுவும் இல்லை
உன்னைத் தவிர.

வாழவைத்துப் போ


இது பிழையா
இல்லை சரியா
உன் விழிதனில்
வந்து மாட்டிக்
கொண்டேன்.

இது நிரந்தரமா
இல்லை நின்றிடுமா
உன்னில் என்
வாழ்வை நான்
கண்டேன்.

போர்க் களம் காணும்
வீரனைப் போல் நாணும்
உன்விழி காண்கையில்
நாளும் பெருமிதமே!

தீக்குளத்தில் என்னை
எறிந்தாலும் திங்கள்
உன் தாய்மையின் சேய்மை
எனக்கு தருமிதமே!

கல்லறையில் பிணத்தின்
மேல் இருந்த பூவென்னை,
கருவறையில் கடவுளின்
மேல் மிதக்க விட்டாய்.

முள்களின் ரத்த வாசம்
மட்டுமே நுகர்ந்த என்னை,
முதல் முறை பெண்மையின்
வாசம் அறிய வைத்தாய்.

யாரோ என்றே
நானிருந்தேன்.
நீதான் அதுவென
உணர்த்தி விட்டாய்.

காற்றில் வெடித்து
சித்றும் பஞ்சாக
நெஞ்சு வெடித்து
பறக்கிறது.

பெண்ணே ஒரு
தும்பியை பிடிப்பது
போல் அதை நீயும்
கொஞ்சம் துரத்திப்
பிடித்துக் கொள்.

ஆள்காட்டி விரலும்
உன்னை அன்றி
வேறொருவரை
காட்டுவதில்லை.

உயிர் மீட்டி உடல்
வாட்டி விழி பாராமல்
செல்பவளே!

ஒரு தடவை என்
ஆவி தடவி போ.
உயிர் மேவிப்
பயனடையும்

காதல்


உன்னை எழுத்தில் வடிப்பது
சிலசமயம் இயலாத காரியம்.

நீ இலக்கணங்களுக்குள்
அடங்காதவள்.
அழகென வரையறுக்கப்
படும் அனைத்திற்கும்
முடங்காதவள்.

நீ அன்பு சல்லடையின்
துவாரத்தின் வழியே
ஆகாயத்திலிருந்து பூமி
புகுந்தவள்.

என் நிசப்தங்கள் கலைத்து
நிழலாய் நுழைந்த
காரிகை நீ அன்பிற்கு
உகந்தவள்.

தொலைதூரம் தெரியும்
தோட்டத்தில் கணநேரம்
ஓய்வெடுக்க எண்ணுகையில்
ஆயுள் முழுக்க நான்
வாழ ஒரு பூக்கூட்டத்தை
எனக்காக உருவாக்கியவள்.

பிறப்பு இறப்பு போலவே
உன் அன்பும் வாழ்வில்
ஒருமுறை தான்.
எனது சிநேகங்கள்
உனக்குள் தொடங்கி
உனக்குள்ளேயே முடிந்து
விடுகிறது.

உன்னைவிட நான்
வாழ்வதற்கு வேறொரு
பெரிய காரணம் எதுவும்
கிட்டுவதில்லை.

உன் அன்பைப்
போல் நினைப்பதற்கு
அருகாமையில் வேறெதுவும்
எட்டுவதில்லை.

உண்ணல் உடுத்தல்
உறைதல் போல
உயிர்த்தலுக்கு
அடிப்படையாய் அமைந்து
விடுகிறது உன் நேசம்.

எனக்கான வசந்த
காலங்கள் உனது
புன்னைகையில் ஒளித்து
வைக்கப் பட்டுள்ளன.

நீ சிந்தும் ஒவ்வொரு
துளி விழிநீரும் என்
இதயத்தில் ஈட்டியாகி
நொடிக்கொரு முறை
மரணம் தருகின்றன.

அதனால்தான் உன்
அழுகையை நான்
என்றும் அனுமதிப்பதில்லை.
நீயோ அதுநான் உன்மீது
கொண்ட அன்பால் என
புரிந்துக் கொள்கிறாய்.

நமக்குள் இருக்கும்
இடைவெளியில்
காற்று அமர்ந்து
கதை பேசுகிறது.

நமது நிழல்களின்
நெருக்கத்தில்
இறுக்கி அணைத்து
கொள்கின்றன.
தேன் குடிக்கும்
வண்டுகள்.

இயற்கையாய் அமைந்த
எதற்கும், உன்னை
பிரதிபலித்தல் என்பது
உதட்டில் வியர்ப்பது
போன்று.

உன்னோடு வாழ்கிறேன்.
ஒவ்வொரு நொடியும்.

காதலித்துப் பார்


எப்போதுமே சலிப்பு தராத ஒரே விஷயம் காதல் தான்.அதை பற்றி எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பேசலாம். மனிதனை மிருகமாக்குவதும், மிருகத்தை மனிதனாக்குவதும் காதல் மட்டும் தான்.எத்தனையோ யுகங்கள் கடந்தாலும் இன்றும் இளமையாய் இருக்கும் விஷயங்களில் காதலும் ஒன்று. மறத்துப் போன இதயங்களைக் கூட பூக்கச் செய்யும் .

நடுநிசியிலும் எழுந்து கவிதை எழுதச் சொல்லும்.சுடும் வெயிலையும் நின்று ரசிக்கச் செய்யும்.நம்மை எதிரியாக நினைப்பவனை கூட நட்பாக பேசச் செய்யும்.அது செய்யாத மாற்றங்களே இல்லை.காதல் ஒரு அழகான கவிதை.அந்த கவிதையை அனுபவிக்காவிட்டால் வாழ்க்கை வீண். அது ஒரு இதமான தென்றல். உள்ளேச் சென்று நுரையீரலைத் தொட்டு வெளியேப் போகும்போது வெப்ப மூச்சாகச் சென்றுவிடும்.ஒரு கூட்டமே பெருமழையைப் பார்த்து ஒதுங்கி போகும் போது நமக்கும் மட்டும் முழுதும் நனையத் தோன்றும். யாருமே நம்மை கவனிக்காவிட்டாலும் எல்லோரும் நம்மைப் பார்ப்பதாகத் தோன்றும்.தனக்குத் தானே பேசிக் கொள்வது, சின்னக் குழந்தைங்கள் அருகில் போய், அதன் தலையைக் கோதுவது, பட்டாம் பூச்சியைக் கையில் பிடித்து கொஞ்சுவது எனக் காதலின் சேட்டைகள் நீள்கிறது. காதல் ஒரு இன்பமான நோய். வலியா சுகமா எனத் தெரியாமல் குழம்பித் தவிக்கும் ஒரு உணர்வு.

நமக்காக ஓருயிர் தவிக்கும் போது நாம் படும் வலிக்கு அளவே இல்லை. நம்மோடு பேச,அழ,சிரிக்க, ரசிக்க,அதட்ட, மிரட்ட,கொஞ்ச,கெஞ்ச,திட்ட ஒருத்தர் எப்போதுமே இருக்கும் சந்தோஷம் பணம் பணம் எனத் திரிந்து வெளிநாடுகளை நோக்கி ஓடுபர்களுக்கு கிடைக்குமா தெரியாது.காதல் ஒரு அழகான ஆரம்பம்.ஏதோ நேற்று தான் இந்த உலகத்தில் பிறந்த மாதிரி இருக்கும். பார்த்து பழகிய பலவற்றிலும் புதியது தெரியும்.அது ஒரு சொல்ல முடியாத ரகசியம். ஒலி மறந்து போன இசை.வார்த்தைகள் இல்லாத கவிதை. வண்ணம் இல்லாத ஓவியம். காட்சிகள் இல்லாத நாடகம்.காத்திருப்பதில் கூட ஒரு சுகத்தை சொல்லிக் கொடுத்தது காதல் தான்.மீண்டும் மழலைக் காலத்திற்கே கொண்டுபோய் எல்லாவற்றையும் கொண்டாட வைக்கும்.காதல் இனிக்கின்ற கடல்.இறவாத ஈசல்.வாசலில் நிற்கும் சூரியன்.உள்ளங்கையில் அடங்கும் நிலா.

யாருக்காகவாவது நீங்கள் கதறி அழுது இருக்கீங்களா?யார் தோள் மேலாவது சாய்ந்து உங்கள் ஆசைகளை சொல்லி இருக்கீங்களா?யாராவது நலமாக இருக்க வேண்டுமென கோவிலில் வேண்டி இருக்கீங்களா? அப்படி என்றால் நீங்கள் யாரையோ காதலிக்கிறீங்க என அர்த்தம்.உங்களுக்காக யாரோ எங்கேயோ காத்துகிட்டு இருப்பாங்க.நீங்களும் காத்திருங்கள் என்னைப் போலவே.காதலில் நனைய.காதலோடு இணைய.காதல் ஒரு புனிதமான விஷயம்.காதலிங்க. உங்க மனம் கோவிலாவதை நீங்க உணர்வீங்க.

Monday, November 10, 2008

விடியாத இமைக் காலம்


செவ்வானம் சிந்துகின்ற முதலொளி நீயடி.
வானவில்லில் சேராத வண்ணமும் நீயடி.
உணர்விருந்தும் உயிரில்லா புதுவித நோயடி.
மீண்டும் உயிர்பெற மடிமீது மலராக சாயடி.

கருவறையில் சுமக்காத நீயும் என் தாயடி.
கொதிக்காமல் குளிர்கின்ற மிக மெல்லிய தீயடி.
உன் வானம் என்னோடு அனுதினமும் தேயடி.
பார்வையில் கொல்கின்ற நீ அழகுப் பேயடி.

பூக்கள் உடைக்கும் கூந்தல் எந்தன் பாயடி.
உன் விரல் பிடிக்கிறேன் அன்பான சேயடி.
உதிரம் உதிர்கின்ற அந்தி வான வாயடி.
இதழ் கரைய இதழால் ஈரமாக்கி மேயடி.

உன் மெல்லடி துளை இல்லா வேயடி.
உயிருள் உருண்டது போதும் சென்று ஓயடி.
மடியோடு மறைத்து மணிநேரம் தூங்கடி.
சிலநொடி நான் மறைந்தால் சிணுங்கியே ஏங்கடி.

மஞ்சளோடு என்னைப் பூசி புதுநிறம் கொள்ளடி.
ஒற்றை விரலை உடலில் ஓடவிட்டு கொல்லடி.
நான் விரட்டும் நேரம் பனியென விழடி.
உனை மிரட்டும்காலம் மார்போடு அணையடி.

சதை தாண்டி மனதோடு புனித காதலடி.
கண்ணோடு கண் கண்டு கரும்பன மோதலடி.
இக்காதல் முடியும் கணம் வரும் சாதலடி.
சாதலும் சுகம்தான் மண்ணாய் என்னை மூடடி.