Friday, November 14, 2008

காதல்


உன்னை எழுத்தில் வடிப்பது
சிலசமயம் இயலாத காரியம்.

நீ இலக்கணங்களுக்குள்
அடங்காதவள்.
அழகென வரையறுக்கப்
படும் அனைத்திற்கும்
முடங்காதவள்.

நீ அன்பு சல்லடையின்
துவாரத்தின் வழியே
ஆகாயத்திலிருந்து பூமி
புகுந்தவள்.

என் நிசப்தங்கள் கலைத்து
நிழலாய் நுழைந்த
காரிகை நீ அன்பிற்கு
உகந்தவள்.

தொலைதூரம் தெரியும்
தோட்டத்தில் கணநேரம்
ஓய்வெடுக்க எண்ணுகையில்
ஆயுள் முழுக்க நான்
வாழ ஒரு பூக்கூட்டத்தை
எனக்காக உருவாக்கியவள்.

பிறப்பு இறப்பு போலவே
உன் அன்பும் வாழ்வில்
ஒருமுறை தான்.
எனது சிநேகங்கள்
உனக்குள் தொடங்கி
உனக்குள்ளேயே முடிந்து
விடுகிறது.

உன்னைவிட நான்
வாழ்வதற்கு வேறொரு
பெரிய காரணம் எதுவும்
கிட்டுவதில்லை.

உன் அன்பைப்
போல் நினைப்பதற்கு
அருகாமையில் வேறெதுவும்
எட்டுவதில்லை.

உண்ணல் உடுத்தல்
உறைதல் போல
உயிர்த்தலுக்கு
அடிப்படையாய் அமைந்து
விடுகிறது உன் நேசம்.

எனக்கான வசந்த
காலங்கள் உனது
புன்னைகையில் ஒளித்து
வைக்கப் பட்டுள்ளன.

நீ சிந்தும் ஒவ்வொரு
துளி விழிநீரும் என்
இதயத்தில் ஈட்டியாகி
நொடிக்கொரு முறை
மரணம் தருகின்றன.

அதனால்தான் உன்
அழுகையை நான்
என்றும் அனுமதிப்பதில்லை.
நீயோ அதுநான் உன்மீது
கொண்ட அன்பால் என
புரிந்துக் கொள்கிறாய்.

நமக்குள் இருக்கும்
இடைவெளியில்
காற்று அமர்ந்து
கதை பேசுகிறது.

நமது நிழல்களின்
நெருக்கத்தில்
இறுக்கி அணைத்து
கொள்கின்றன.
தேன் குடிக்கும்
வண்டுகள்.

இயற்கையாய் அமைந்த
எதற்கும், உன்னை
பிரதிபலித்தல் என்பது
உதட்டில் வியர்ப்பது
போன்று.

உன்னோடு வாழ்கிறேன்.
ஒவ்வொரு நொடியும்.

No comments: