Friday, November 14, 2008

நகரும் வானவில்



நீ சிரிக்கும் நேரங்களில்
என் சிலுவைக்கும்
சிறகு முளைக்கிறது.

வானத்தை தேடி மனம்
வண்டாய் பறக்கிறது.

நேற்றுவரை என்
தலைக்குமேல் திரிந்த
வானம் இன்று தரையோடு
கிடந்து தவிக்கிறது.

உன் நினைவுகள் வானத்தை
வசப்படுத்தி இடம்
பெயர்கின்றன.

நான் நடக்கும்
பாதைகளில்
என்னைப் பார்த்து
திரும்பிக் கொள்ளும்
பூக்கள் உன்னோடு
வருகையில்
புன்னகைக்கின்றன.

வானம் பூத்த பூமி
இப்போது உன் வதனம்
பார்க்க பழகிக் கொள்கிறது.

விளையாமல் மழைக்காக
காத்து கிடந்த பயிர்கள்
யாவும் உன் புன்னகையில்
விளையக் கற்றுக்
கொள்கின்றன.

பாலைவனம் கூட
நீ நடக்கையில்
வெம்மையை உண்டு
விட்டு தண்மையை
உமிழ்கின்றன.

நீ அன்பு வழிந்து
நிற்கும் அட்சயப்
பாத்திரம்.

நான் உன்மடியில்
தவழ்ந்து உனக்குள்
அமிழ காத்திருக்கும்
காலத்தின் முடிவிலி.

பலகோடி ஆண்டுகள்
பழகிவரும் வானும்
மண்ணும் நம்மைப்
பார்த்து வியக்கின்றன.

கண் படப்போகிறது.
வைத்துக் கொள்ளடி.
என் உதிரத்தால்
ஒரு திருஷ்டிப்
பொட்டு.

No comments: