Monday, November 24, 2008

என்னோடு வா


இமைகள் பிரியாது
உறக்கம் கலையாது
காட்சிகள் எப்படி நீ
கொடுத்தாய்?

அருகில் இல்லாமல்
அன்பையும் சொல்லாமல்
எனக்குள் எப்படி நீ
கிடைத்தாய்?


உலகோடு வாழும் வாழ்க்கை
அது வேண்டாம் பெண்ணே!
உன்னோடு வாழும் வாழ்க்கை
அது போதும் கண்ணே!
என்னுலகம் நீதானே!
என்னுயிரும் நீதானே!


நிழலாக கிடந்தேன் உயிரே
என்னை நிஜமாக்கி சென்றாயே!
இன்று என்னை நெருங்காமல்
அணுஅணுவாய் கொன்றாயே!

யாரோடும் செல்லா மனம்
இன்று உன் பின்னால்
ஓடி ஒளிந்து கொள்ளுதடி.
அதைத் திருப்பித் தராமல்
நீயே வைத்துக் கொள்ளடி.

என்தமிழ் கூறும் வார்த்தைகள்
எல்லாம் உன்னைப் பாடும்.
என்விழிகள் மட்டும் ஏனோ
உன் வதனம் தேடும்.

இம்மண்ணில் ஏன் பிறந்தேன்.
உன்னில் தொலைந்திடவோ
உன்கண்ணில் ஏன் விழுந்தேன்?
உன்னில் கரைந்திடவா?


என்னோடு இதுவரை
என் நிழல் மட்டுமே
உடன் வந்தது.

முதன்முறை உடன்
வர உன்னை கேட்கிறேன்.
வருவாயா என்
வாழ்வின் துணையே!

மகரந்தம் சேர்க்கும்
பூவாய் என் காதலையும்
சேர்த்து வைக்கிறேன்.

ஒரு வண்டாக வந்து
அதைக் குடிக்க மாட்டாயா?

வண்ணத்துப் பூச்சியும்
வயல்தொடும் தென்றலும்
நம்மைப் பற்றி கதைகள்
பேசிக் கொள்ளுதே!

காதைக் கொடுத்து
அதை நீ கேட்டாயா?

உனக்கான பாதையில் எல்லாம்
பெண்ணே நான்தானே
பாதம் தாங்கும் மண்ணாய்
இடம் பெயர்கிறேன்.

உன் பார்வையை
மெளனத்தை கவிதையாய்
என்றும் மொழி பெயர்க்கிறேன்.

No comments: