Monday, November 10, 2008

விடியாத இமைக் காலம்


செவ்வானம் சிந்துகின்ற முதலொளி நீயடி.
வானவில்லில் சேராத வண்ணமும் நீயடி.
உணர்விருந்தும் உயிரில்லா புதுவித நோயடி.
மீண்டும் உயிர்பெற மடிமீது மலராக சாயடி.

கருவறையில் சுமக்காத நீயும் என் தாயடி.
கொதிக்காமல் குளிர்கின்ற மிக மெல்லிய தீயடி.
உன் வானம் என்னோடு அனுதினமும் தேயடி.
பார்வையில் கொல்கின்ற நீ அழகுப் பேயடி.

பூக்கள் உடைக்கும் கூந்தல் எந்தன் பாயடி.
உன் விரல் பிடிக்கிறேன் அன்பான சேயடி.
உதிரம் உதிர்கின்ற அந்தி வான வாயடி.
இதழ் கரைய இதழால் ஈரமாக்கி மேயடி.

உன் மெல்லடி துளை இல்லா வேயடி.
உயிருள் உருண்டது போதும் சென்று ஓயடி.
மடியோடு மறைத்து மணிநேரம் தூங்கடி.
சிலநொடி நான் மறைந்தால் சிணுங்கியே ஏங்கடி.

மஞ்சளோடு என்னைப் பூசி புதுநிறம் கொள்ளடி.
ஒற்றை விரலை உடலில் ஓடவிட்டு கொல்லடி.
நான் விரட்டும் நேரம் பனியென விழடி.
உனை மிரட்டும்காலம் மார்போடு அணையடி.

சதை தாண்டி மனதோடு புனித காதலடி.
கண்ணோடு கண் கண்டு கரும்பன மோதலடி.
இக்காதல் முடியும் கணம் வரும் சாதலடி.
சாதலும் சுகம்தான் மண்ணாய் என்னை மூடடி.

No comments: