Monday, November 24, 2008

அயல்நாட்டு பயணம்


பனிமழையில் விடிகிறது
என் நாள்கள்.
உயிர் வலிக்கும்
சுவாசம் கொள்கிறேன்.

வாழவேண்டும் அதனால்
வலியைக் கொல்கிறேன்.

உறக்கம் முழுதாய்
தொலையும் முன்னே
ஊர்தி ஏறி அலுவலகம்
அடைகிறேன்.

மொழி புரியா
அயல்நாட்டவன் தான்
ஆசானாம்.
எனக்கும் அவனுக்கும்
பொதுவான ஓர்
மொழி மெளனம்தான்.

மெளனம் புரிந்துக்
கொள்ள இது ஒன்றும்
காதல் அல்ல.

எனக்கும் அவனுக்கும்
பொதுவாய் ஒரு
புதுமொழி பிறக்கிறது.

அவன் விளக்கங்கள்
எனக்கும், என்
சந்தேகங்கள் அவனுக்கும்
புரிவதேயில்லை.

நங்கை நினைவுகள்
நெஞ்சில் நகர்வதால்,
அடிக்கடி என்னுலகம்
சென்று இவ்வுலகம்
வருகிறேன்.
காதல் இதயத்தை
கடிக்க கடிக்க
கவிதைகள் தருகிறேன்.

பணம் அறிவு
பதவி எல்லாம்
தாண்டி காதல்
வென்று விடுகிறது.

என் அகந்தை
ஆணவம் அனைத்தையும்
அவள் பெண்மை
கொன்று விடுகிறது.

வாழமட்டுமே ஆசை.
அதனால் வஞ்சியின்
வதனம் வாழ்நாள்
முழுதும் உடன்வரும்
என உள்மனம்
உரைக்க உருள்கிறது
ஒவ்வொரு நாளும்
நொடியாக.

No comments: