Wednesday, June 11, 2008

சூரிய சிசு

நிசப்தமாய்
நிகழ்கிறது
ஒரு பிரசவம்.

வான கருவறைக்குள்
இருந்து மெல்ல
எட் டி பார்க்கிறான்
சூரிய சிசு.

கொஞ்சம் கொஞ்சமாய்
கண் விழித்து
கடல் நீரில்
தன் முகத்தை
பார்த்து சிரிக்கிறான்.

நெடு நாளைய
நண்பனை கண்டது
போல் புன்னகைக்கின்றன
பூக்கள்.

பூமியில் அழகு
என சொல்லப்படும்
அனைத்தையுமே கதிர்களால்
அனைத்து கொள்கிறான்
ஆதவன்.

வெளிச்சம் புக
முடியாத
மாயிருள் வானத்தில்
கூட தன்னை
நுழைத்து
சிரிக்கிறான் ஞாயிறு.

ஓங்கி வளர்ந்த
மரங்களின் முதுகில்
ஏறி ஒய்யாரமாய்
ஊர்வலம் வருகிறான்.

வெள்ளியாய் இருக்கும்
ஆற்று நீரினை
தொட்டு தங்கமாய்
மாற்றி விளையாடி
போகிறான்.

ஓரிடத்தில் நிற்காமல்
கிழக்கும் மேற்குமாய்
ஓடி கொண்டே
இருக்கிறான்.

அவன் இருத்தலின்
பிரதிபலிப்பு.
உயிருள்ள பொருள்களின்
பிரதிநிதி.

வெளிச்ச மலர்கள்
மொட்டு அவிழ்க்கும்
தோட்டம்.
கனல் குழந்தைகள்
கை கோர்த்து
விளையாடும்
பூங்கா.

வெண்ணிலா அவனை
கண்டு காதலில்
வெட்க படுகிறாள்!
வானமே சிவந்து
கிடக்கிறது.

அவள் முகம்
காண வெட்கப்பட்டு
மெல்ல மேகத்திற்குள்
முகம் புதைக்கிறான்.
முதலவன்.

தன் மரணம்
தான் இதுவென
தெரியாமலேயே!

பிரசவம் மட்டும்
அல்ல! அவன்
மரணம் கூட
நிசப்தமாய் தான்
நிகழ்கிறது.

No comments: