Monday, June 09, 2008

உன்னால் முடியும்

உன்னால் எல்லாம் முடியும்.
உன்னால் மட்டுமே நாளைய
உலகம் விடியும்.

உயர்ந்த நம்பிக்கை
பூண்டு,
உன்னை நீயே
தோண்டு.

முதலில் குப்பைகள்
கிடைக்கலாம்.
தளர்ந்து விடாதே!
விடாமல் தோண்டு.

குப்பைகள் கூட
வைரம் ஆகும்.

தோல்வி என்னும்
துவண்ட சுடுகாட்டுக்கு
மரணம் ஏற்படுத்து.
மடிந்து போகட்டும்.

களிப்பில் இருந்து
விடாதே.

இந்த உலகம்

அதை அதிர்ஷ்டம்
என்று சொல்லிவிடும்.

காக்கையின் எச்சத்தில்
இருந்து முளைத்த
விதைகள் கூட,
கடவுள் தங்கும்
கோவில்கள் ஆகின்றன.

வந்த பாதையை
எண்ணி கவலை
படாதே.
போகும் பாதையை
மட்டும் நினை.

ஓடு.
உலகின் விட்டத்திற்கு
ஓடு.
ஓடி
என்றும் ஆக்கத்தை
மட்டுமே தேடு.

உன் பெயரை
எழுதி கொள்ள
தான் சரித்திரங்கள்
சாகாமல் வாழ்ந்து
கொண்டு இருக்கின்றன.

முயற்சி என்னும்
உதிரத்தால் உன்
பெயரை எழுதி
விடு.

கடுகளவு தீப்பொறி தான்
காட்டையே எரிக்கிறது.
கையளவு உளி தான்
பாறைகளை பிளக்கிறது.

உன்னால் முடியாதது எது?
ஒரு முறை யோசி.

ஒரு விதைக்குள் தான்
ஆயிரம் விதைகள் உறங்கி
கொண்டு இருக்கின்றன.
உணர்ந்து கொள்.

வானவில்லில் மறைந்த
வண்ணமாய் இராதே.
அது மாயை.
மறைந்து விடும்

பட்டம் பூச்சியில் பதித்த
நிறமாய் இரு.
அது ஜீவனுள்ள
உயிரின் சலசலப்பு.

வாயால் வித்தை காட்டும்
சிலந்தியாய் இராதே.
உழைப்பால் உயிர் வாழும்
எறும்பாய் இரு.

இரும்பை கவரும்
காந்தம் போல்,
இதயங்களை கவர
பழகி கொள்.

கரைகளை மோதும்
அலைகளை போல்,
கண்கள் தூங்கினாலும்
கனவில் விழித்திரு.

சோக தீ உன்னை
தீண்டும் வேளைகளில்
தங்கமாய் இருந்து
வலிமை கூட்டி கொள்.

நீயாய் இரு.
உயிர் தீயாய் இரு.


பழுதான
கடிகாரங்கள்
கூட ஒரு நாளைக்கு
இருமுறை சரியான
நேரம் காட்டுகின்றன.

குறைகள் நிரந்தரம்
அல்ல.புல்லாய் புழுதியாய் புழுவாய்
இந்த உலகில் புதைந்து
விடுவாயா?
இல்லவே இல்லை!
பூமியாய் வானமாய் ஆழியாய்
பரந்து விரிந்து
நில்.

துடைத்து ஏறிய
நீ ஒன்றும்
தூசி அல்ல.
வெடித்து சிதறும்
எரிமலை பிழம்பு
அல்லவா?

கடலுக்கு தான்
எல்லைகள் உண்டு.

வானத்திற்கு அல்ல.
நீயும் வானம்
தான்.

இறப்பதற்கே ஆயிரம்
வழிகள் இருக்கும்
போது,


வாழ ஒரு
வழி கூடவா
இல்லாமல் போய்
விடும்?

நம்பிக்கையோடு
வாழ பழகு.

வலி தாளாமல்
குருதி வடிந்து
ஓடினாலும்

வழி தெரியாமல்
நின்று விடாதே.

தொடர்ந்து சென்று
பிறருக்கு வழியை
உருவாக்கு.

வையம்
உன்னை கண்டு
கைகொட்டி சிரித்தாலும்
உழைப்பை
மட்டுமே கருவாக்கு.

நீ வெல்லும்
நாள் வெகு
தூரத்தில் இல்லை.

வந்து விடு.

உன் வரவிற்காக
காத்து இருக்கிறேன்

No comments: