Monday, September 22, 2008

புன்னகை




உன் புன்னகை

கடவுளின் கடைசி
ஆசை.

எனக்கோ முதல்
கவிதை.

நினைவுகள்




நீ வந்து விழுந்த
இந்த நெஞ்சம்
உன்னைத் தூக்கிக்
கொண்டு எங்கும் ஓடும்.

நீ இல்லை எனத்
தெரிந்தும் கண்கள்
உன்னை எங்கும் தேடும்.


நிலவொளியில் ததும்பும்
இரவுகளில் உன் நினைவுகள்
இதமாய் தாலாட்டும்.
வெப்ப நிலங்களில்
வேகும் கணங்களில்
ஞாபங்கள் நீராட்டும்.

இரவுப் பொழுது,
நிலவு வெளிச்சம்.
ஒற்றையடிப் பாதை,
வயல்வெளி காற்று.
மண்வாசனை

இவற்றோடு அசைபோட்டுக்
கொண்டிருக்கிறேன்.
உன் நினைவுகளை.

ஒளிதேவதை




இருட்டாய் கிடக்கிறது
நான் வசிக்கும் அறை.

முதன்முதலாய் சாளரம்
திறந்து வைக்கிறாய்.

வெளிச்சக் கீற்றுகள்
இருட்டை விழுங்கி
தன்முகத்தை அறைக்குத்
தந்துவிடுகின்றன.

எனக்குள் கிடந்த
இருளை உன் புன்னகை
மென்று தின்றதைப் போல்.

காலைத் தென்றல் இதமாய்
இதயத்தை வருடி விடுகிறது.
நாசித் துளைகள் இந்த
நாளில் நன்றியைப் பெறுகின்றன.

"இத்தனை நாளாய் இதை
எல்லாம் இழந்து வாழ்ந்து
இருந்திருக்கிறேனே!
நீ முன்பே வந்து
இருக்கலாம்." என்றேன்.

சிரித்துக் கொண்டே
சலனமின்றிச் சொன்னாய்.

"ஒளியின் இனிமை
இருள் கொடுத்ததுதான்"

மெதுவாக உணர்கிறேன்.
உன் துணையின் பெருமையும்
என் தனிமைகள் தந்தவைதான்.

எனக்கான அடையாளம்




நிற்காமல் போகும்
காலத்தின் சுழற்சியில்
நான் காணாமல்
போனாலும் என்னை
அடையாளம் காட்டும்
உன் ஞாபங்கள்.

நீ கவிதை எனக்கு



"உனக்காக சமீபத்தில்
எழுதிய கவிதை ஒன்றை
சொல்லட்டுமா" என்றேன்.

"ம் ம்" என்றாய்.

"மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.

எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க, பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன"

என்றேன்.

"எல்லாம் பொய்" என்றாய்.

"எல்லா கவிதையும் பொய்யைதான்
தாங்கி நிற்கும்.
மெய்யை தாங்கி இருக்கும்
ஒரே கவிதை நீதான்"

என எனக்குள் நினைத்துக்
கொண்டேன்.

"உன் நேசமும் பொய்தானா?"
என வினவுவது போல்
ஓர் பார்வையை ஏவிவிட்டு
நின்றாய்.

உன் விழிகள்
வினவிக் கொண்டே
இருந்தன.
விடை சொல்ல முடியாத
சில வினாக்களுள் உன்
விழிகளும் ஒன்று.

பதிலாக பார்வையையே
நானும் தருகிறேன்.

இதயத்தில் நான் தேக்கி
வைத்த நேசம் இன்று
இமைகளின் அடியில்
உனக்காக உறைந்து
கிடக்கிறது.

புரிந்து கொள்வாயா?
இந்த ஈரம் உன்
நேசத்தின் களிப்பில்
முளைத்தது என்று!

காத்திருந்தேன்



வாழ்விலேயே முதன்முதலாய்
காத்திருந்தேன்.

என்னையும் ஓருயிர்
காத்திருக்கச் சொன்னதை
கண்கள் நம்பவில்லை.
காலமும் தான்.

உணவு விடுதியின்
முகப்பில் உனக்காக
காத்திருந்தேன்.

சில பார்வைகளும்
பல பாதங்களும் என்னைக்
கடந்துச் செல்ல,
அவை எல்லாம் நீயில்லை
என உள்மனம் சொல்ல,
உன் விழிகளை எதிர்பார்த்து
காத்திருந்தேன்.

கண நேரம் காத்திருந்ததே
காலம்கோடி கடந்ததாய்
தோன்றியது.

ஒவ்வொரு நொடியும்
ஓடாமல் தேங்கி கிடந்தது.

இமைகள் ஆயிரம் முறை
இடித்துக் கொண்டது.

சில நிமிடங்களில்
எத்தனை தேடல்,
எத்தனை தவிப்பு,
எல்லாமே இனித்தது.

இப்போது எல்லாத் திசைகளும்
உன்னையே பிரதிபலித்தன.

புன்னகைத்துக் கொண்டே
என்முன் நின்றாய்.

உயிருக்குத் தெரியும்.
உண்மையாய் அது நீதானென்று.

ஏனெனில் எந்தக்
கற்பனையாலும்
பிரமையாலும் உன்
புன்னகையைப் போன்றதோர்
அழகான பிரதிபலிப்பை
ஏற்படுத்திவிட முடியாது.

உன் நிழல் என்
நிழலை நெருங்கும்
அந்த கணத்தோடு
என் காத்திருத்தலும்
முடிகிறது.

Friday, September 19, 2008

நீ வேண்டும்


அன்பே மடியோடு
தாங்கி கொள்ளவும்,
மார்போடு ஏந்திக்
கொள்ளவும்
நீ இருக்கும்போது
மரணம் கூட
என்னிடமிருந்து
மரணித்துவிடும்

சந்தோஷம்


அமிலம் பொழிந்த விழிகள்
ஆனந்தக் கண்ணீரைச் சொரிகிறதே!

அளவு இல்லாதொரு சிறகு
அகிலம் எங்கும் விரிகிறதே!

மலையாய் கனத்த இதயம்
இலையாய் இன்று பறக்கிறதே!

உன்முகம் தரும் ஆறுதலில்
வலிகள் எல்லாம் மறக்கிறதே!

சந்தோஷம் வானை முட்டுதே!
முள்ளும்கூட தேனைச் சொட்டுதே!

இதயம் இருப்பது இடமா
வலமா குழப்பம் முட்டுதே!

ஐந்து நிமிட பேச்சிலே
ஆயுள் கோடி கூடுதே!

கண்கள் இரண்டும் நதியாகி
கடலை நோக்கி ஓடுதே!

கனவில் வாழ்ந்த தேவதை
நினைவில் வந்து நின்றதே!

கபடம் இல்லாத பேச்சில்
கடத்தி என்னைக் கொன்றதே!

ஐநூறு ரிக்டர் பூகம்பம்
அமைதியாய் எனக்குள் நடக்கிறது.

பேராழி தாண்டியோர் பிரளயம்
மெதுவாய் என்னைக் கடக்கிறது.

இனியொரு முறை பிறப்பேனோ?
உன்னை மறந்தும் மறப்பேனோ?

விழிகளை உனக்காய் திறப்பேனோ?
உயிரையும் உன்னிடமே துறப்பேனோ?

குப்பை காகிதம் என்னுள்
குட்டிக் கவிதைகள் எழுதினாய்.

பார்வை என்னும் ஏரால்
பாலை நிலத்தை உழுதாய்.

உரிமையாய் கேள்விகள் கேட்டாய்.
உறக்கத்திற்கு தடை போட்டாய்.

செடியாய் தனியாய் கிடந்தேன்.
தோட்டம் எனக்குள் விதைத்தாய்.

பட்ட கஷ்டங்கள் அனைத்தையும்
பட்டென குழியில் புதைத்தாய்.

இனிமேல் இதுபோல் நடக்குமோ?
இதயம் அதில்தான் கிடக்குமோ?

உதடுகல் ஹைக்கூ பேசியது.
உயிரில் தென்றல் வீசியது.

எழுதும் கைகள் இனிக்கிறது.
தாங்கும் தாள்கள் கனக்கிறது.

பகலெனக் கூடத் தெரியாமல்
விண்மீன் வானில் உதிக்குதே!

இதயம் என்னும் பந்து
தலைக்கும் காலுக்கும் குதிக்குதே!

பாதங்கள் பதிந்த இடத்தில்
வானவில் கூட்டம் முளைக்குதே!

விரல்கள் எல்லாம் நீண்டு
விண்ணை தாண்டி துளைக்குதே!

Thursday, September 18, 2008

நீயும் நானும்




உன் அருகில் இருக்கையில்
இதயம் தூரம் ஆனதடி.
நான் தொலைவில் துடிக்கையில்
அது அருகே வந்ததடி.

உன்முகம் கண்ட நாள்களில்
அகம் மட்டும் தனியாய் மகிழும்.
உன்னகம் கண்ட இந்நாளில்
என்நகம் சுகமாய் தவழும்.

தூரத்தில் நீ இருந்தாலோ
தொலைபேசி உன்னை அழைக்கும்.
அருகில் நீ வந்தாலோ
வார்த்தைகளும் வர மறுக்கும்.

மங்கை மொழி மழலையடி.
காலமெல்லாம் கேட்கும்
வரம் கிடைக்காதா?

நங்கை விழி நாகமடி.
நாளெல்லாம் உயிரை குடிக்காதா?

மண்ணில் என்னைப் புதைத்தால்
மாறிவருவேன் உன் உருவில்.
உன் மனதில் என்னை
புதைத்தால் மீண்டும் வரக்கூடுமோ.

நான் சிறகுதிர்ந்த பறவை.
நீயொ சிரிக்கின்ற வானம்.

உன்னில் பறக்க முடியாதோ.
உன்மனமும் ஒருநாள் விடியாதோ.

Wednesday, September 17, 2008

போகாதே


நீ போகிறேன் என்றாய்.
உயிர் "போகாதே" என்றது.
உதடுகள் "போ" என்றது.

உயிரும் உதடும் முரண்பட்டு
நின்றது அதுதான் முதல்முறை.

என் இருவிழிகளும்
உன் கருவிழிகளை நோக்க,
கனத்த இதயமோ
கண்ணீரை உனக்காக வார்க்க,
நீ விலகி சென்றாய்.

நீ நடந்த பாதைகளை
பார்வைகள் பின்தொடர,
புள்ளியாக மறைகிறாய்.

நானோ பூமியிலிருந்தே
மறைகிறேன்.

Monday, September 15, 2008

உலகம்


உன்

கற்றை கூந்தலின்
ஒற்றை குழல்
சுற்றி திரிந்தது,
மேகங்கள் பிறந்தன.

நெற்றி வியர்வை
பூமியை முத்தமிட்டது.
பனித்துளி படர்ந்தது.

இமைகளை திறந்தாய்.
கதிரவன் உதித்தான்.
இமைகளை மூடினாய்.
இரவுகள் முளைத்தன.

கொலுசுகள் அசைந்தன.
இடிகள் கொட்டின.
பார்வைகள் தொட்டன.
மின்னல் வெட்டியது.

வாயை திறந்தாய்.
பூக்கள் மலர்ந்தன.
இதழ்கள் அசைந்தன.
பறவைகள் பறந்தன.
கண்ணீர் விட்டாய்.
பரவைகள் விரிந்தன.

கடிந்து பேசினாய்.
புயல் வீசியது.
என்னுடன் நடந்தாய்.
தென்றல் பேசியது.

நீ சிரித்தாய்
அலைகள் மோதின.
உன் வளையல் கண்டதும்
வானவில் மிதந்தது.

உன் கழுத்து
என்புறம் திரும்பியது.
சங்குகள் தோன்றின.
உன் பாதம்
மண்ணை தொட்டது.
சோலைகள் குவிந்தன.

நீ என்னை விட்டுப்
பிரிந்து சென்றாய்.
பாலைகள் ஊன்றின.
உன் கூந்தல் பூக்கள்
வாடி நின்றன.
பஞ்சம் உண்டானது.


உலகம் தோன்றியதை
பலவிதிகள் கூறினாலும்,
என் உலகம் தோன்றியது
என்னவோ உன்னால் மட்டுமே.

போய் தூங்கு


போய் தூங்கு.

"ஏற்கனவே ஒரு நிலா
இங்கு விழித்து இருக்கும் போது
இங்கு நமக்கென்ன வேலை"
என நினைத்து கொண்டு
வான்நிலா சென்றுவிடப் போகிறது.

நீ

தனிமையில் வெறுமையாய் கழிந்த
தருணங்களை நீதான் நிரப்பி தந்தாய்.
இரும்பாய் கனத்த இதயத்துள்
ஈரத்தை கசிய வைத்ததும் நீதான்.

மனதிற்குள் தேங்கி நிற்கும்
வலிகளுக்கு வடிகாலாய் வந்து
இன்று நீயும் ஒரு
வலியாய் சேர்கிறாய்.

அன்பை பொழிந்து நின்ற எனக்குள்
அம்பை எய்துவிட்டு அகலுகிறாய்.
சிலகாலம் உன்னால் சிரித்து கிடந்த
நான் மீண்டும் என் பழைய
உலகத்திற்கே செல்கின்றேன்.

மரணம் என்பது
உடலை உயிர்
பிரிவது தான்
இதுநாள் வரை
நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று
அது நீ என்னை விட்டு
பிரிவது என
புரிந்து கொண்டேன்.

மரணித்து மீண்டும்
பிணமாய் வாழ்கிறேன்.

இரவுகளில் தலையணை
நனைக்கும் கண்ணீர்.
போலியாய் புன்னகை
சுமக்கும் உதடு.
எனக்குள் நானே கூறிக்
கொள்ளும் ஆறுதல்.
மனிதர்களிடமிருந்து விலகி
மெளனமாய் செல்வது.

எனவென் நரகவாழ்க்கை
நீள்கிறது.

கண்ணீருக்கு காவலாய் என்
கவிதைகளை வைத்துவிட்டு
கண்மூடி கதறி அழுகிறேன்.
நீ துளிகளாய் சிதறி விழுகிறாய்.

என் கவலைகள் எல்லாம்
கண்ணீரின் வழியே மெதுவாய் கரைகிறது.
நெஞ்சுக்குள் நெருப்பை விட்டு
யாரோ நெருடுவது போலொரு உணர்வு.

வலிக்கிறது. வலிதாங்க இயலாமல்
வாய் எதையோ முணுமுணுக்கிறது.
உற்று கேட்கும் போதுதான் புரிகிறது.
அது உன் பெயரென.

வலிகளை எல்லாம் வார்த்தைகளாய்
மாற்ற முடியுமெனில் தாங்கி
கொள்ள பக்கங்கள் போதாது.

நேற்றுவரை தொடுவானமாய் இருந்த
நீயின்று தொலைதூரம் ஆகிறாய்.
நானோ தொலைந்து பொகிறேன்

எல்லாமென தோன்றிய நீ
யாரோவாகி போகிறாய்.


திருவிழவில் தாயைப்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தை தனியாக நின்று
அழுது கொண்டிருப்பதை
போல அழுதுகொண்டு
இருக்கிறேன்.


தனிமையும் வலிகளும்
தொடரும்.
நீ மீண்டும் வந்து
என்னை மீட்கும்வரை.

மெளனம்



கடைசியாய் நீயும் நானும்
சந்தித்து பிரியும் வேளையில்
பேசிய மொழி.

கலங்கரை விளக்கு



வழிகாட்டும் கலங்கரை விளக்குகூட
நீ விழிகாட்டியதால் கலங்கி
களங்கமறை விளக்காக மாறிவிடுகிறது

மலர் கண்காட்சி


மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.

எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க,
பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன.

நகம்


மரணம் அடையும் நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருக்கும் ஒரே
பொருள் உன் நகமாகதான்
இருக்கும்!

அழுகை


நான் அழுவதற்கான காரணங்களை
முதல் முதலாய் சொல்லி
கொடுத்தது நீ தான்.

உன்னைபோல் எதுவும் ஆழமாய்
என்னை பாதிப்பதில்லை.
ஆழமாய் எனக்குள் கிடக்கும்
எதற்கும் உன் பெயர்தான்.

தனிமையில் கிடந்து வாடும்
நேரங்களில் எல்லாம் துணையாகிப்
போகின்றன உனக்காக நான்
சிந்தும் கண்ணீர் துளிகள்.

உனக்கு தெரியாமல்
அறையை தாளிட்டு கொண்டு
அலறி கதறும் என்
அழுகையை நீ அறிவதற்கான
வாய்ப்புகள் அறவே இல்லை.

கண்ணீரின் சாரைகளில்
உன் கனவுகளின் சாரல்கள்
லேசாய் என்னை நனைக்க
மறுப்பதில்லை.

நள்ளிரவில் கூட நடை
போடுகிறது என் பேனாமுனை
காகிதங்களை கவிதைகளாய்
மாற்றிவிட.

ஆனால் விழிகள் மட்டும்
என்னை விட்டு நீ பிரிந்த
அந்த வினாடிகளை அழுகையாய்
மொழி பெயர்க்கின்றன.

உனக்காக அழுவதால் அழுகையும்
கூட அழகாய் தெரிகிறது.

தேவதை

ஒவ்வொரு முறை நீ
இமைக்கும் போதும் எனது
இரவு பகல் முளைக்கிறது.

மயிலிறகு சேகரிக்கும் சிறுவனாய்
உன் புன்னகையை சேமிக்கிறேன்.
"குட்டி போடுமா?" உன் புன்னகை.

பாடதிட்டம் மாறி வந்த
வினாத்தாளை பார்க்கும்
மாணவனாய் எப்போதுமே
உன்னை வியந்து பார்க்கிறேன்
எல்லா முறையும்.

ஆயுள் கைதியைப் போல்
சிக்கிக் கொள்கிறேன்.
நீ சிரிக்கும்போது தெரியும்
தெற்றுப் பல்லில்.

ஆனால் விடுதலை
மட்டும் செய்துவிடாதே.

நீ என்னோடு நடக்கையில்
நாள்கள்கூட திருநாளாகும்.
உன் கரத்தில் தரும்போது
பழையசாதம்கூட விருந்தாகும்.

தேவதையையும் சரி
தெய்வத்தையும் சரி
நேரில் கண்டதில்லை.
உன்னை காணும்
முன்புவரை.

Saturday, September 06, 2008

போய் தூங்கு

போய் தூங்கு.

"ஏற்கனவே ஒரு நிலா
இங்கு விழித்து இருக்கும் போது
நமக்கென்ன வேலை"
என நினைத்து கொண்டு
வான்நிலா சென்றுவிடப் போகிறது.