Friday, October 24, 2008

கடன்காரி



என் இரவுகளுக்கு
மின்மினிப் பூச்சிகளை
இறக்குமதி செய்தவளே!

என் கனவிற்குத்
துணையாய் உன்
நினைவுகளை அனுப்பி
வைத்தவளே!

என் காதலை வாங்கிக்
கொண்டுத் திருப்பித்
தராமல் அடம்பிடிக்கும்
கடன்காரியே!

நான் கொடுத்த கடன்
அட்டவணையைக்
குறித்துக் கொள்.

என் பார்வைகளின்
கொஞ்சல்கள்.
உனக்காக காத்திருந்த
நிமிடங்கள்
தூங்காமல் விழித்திருந்த
இரவுகள்.
உன்னோடு தொடங்கிய
விடியல்கள்.
இடைவெளி இல்லாத
பேச்சுகள்.
தனிமையில் தவித்த
புலம்பல்கள்
நிழலோடு கொடுத்த
முத்தங்கள்.
நிஜத்தில் புரிந்த
நாணங்கள்.
உனக்காய் பூத்த
புன்னகை.

எல்லாவற்றையுமே
வட்டியும் முதலுமாய்
கொடுத்துவிடு,
என் அன்பான
கடன்காரி

மனதின் மனைவி


என் சபலங்களும்
சலனங்களும் சடலாமாக
காதலை சமர்ப்பித்தவள்
நீ தான்.

என் தேகமும்
மோகமும் தொலைந்துவிட
என்னை உன்விழிமடியில்
உறங்க வைத்தவளும்
நீ தான்.


ஒரு தாய்மையை
ஒரு சேய்மையை
எனக்காய் உருவாக்கி,
உன் பெண்மையை
உயிர் மென்மையை
அன்பின் கருவாக்கி
பார்வை ஊசிகளால்
என் ரத்தத்தில்
செலுத்தியவளும்
நீதான்.

முகம் தேய்ந்து
கிடந்த எனக்கொரு
முகவரி கொடுத்து,
என் முகபாவணைகளில்
முழு உயிரையும்
முற்றிலும் படித்து,
எனக்காக புன்னகை
பூத்து காத்திருந்தவளும்
நீதான்

சினம் கொண்டு
நான் சீறியபோதும்,
குணம் கொண்டு
என்னைக் கொஞ்சி
நின்றவளும் நீதான்.

எனக்கே எனக்காய்
ஏழுப் பிறவியும்
துணையாய் வர
இறைவன் அனுப்பிய
தூதுவளும் நீதான்

Wednesday, October 22, 2008

அழகுக்கு சொந்தக்காரி


நிழல் கொடுத்து மலர்
தாங்கி நிற்கும் மரங்கள்
எல்லாம் உன் புன்னகையை
ஏந்தி நிற்கின்றன.

அதன் பாதைகளில் நீ
நடந்து வரும் வேளைகளில்
எல்லாம் "நான் தான் அசைந்து
காற்றைக் கொடுப்பேன்" என
கிளைகள் ஒன்றோடு ஒன்று
மோதி அடித்து கொள்கின்றன.

உன் முகம் காணமுடியாமல்
பூமியில் புதைந்து விட்டதற்காக
அழுது கிடக்கின்றன,
மரத்தின் வேர்கள்.

அவை மண்ணைப் பார்த்து
உன் பாத அழகை பற்றி
நலம் விசாரிக்கின்றன.

மண் பாவம்!
உன் உச்சந்தலை அழகைப்
பற்றி வானத்திடம்
விசாரித்துக் கொண்டிருக்கிறது.

வானம் சூரியனிடம் கெஞ்சிக்
கொண்டிருக்கிறது!
"ஒரேஒரு முறை
அவளைச் சுட்டெரி.
உன்னைக் கோபமாய் அவள்
பார்க்கையில் முகத்தைக்
கொஞ்சம் பார்த்துக்
கொள்கிறேன்" என்று

நிழலுக்காக மரங்களில்
கூடுகட்டி வசித்து வரும்
பறவைகள் எல்லாம் உன்னைக்
கண்டதும் உன் நிழலில்
ஒதுங்குகின்றன.
"எத்தனை பறைவைகளைத்
தான் தாங்கும் ஒரு
பறவையின் நிழல்"

சில பறைவைகளுக்கு
ஏமாற்றம் தான்.

கூவிக் கொண்டிருந்த
குயில்கூட கூவலை நிறுத்தி
நீ பேசுவதை கூர்ந்துக்
கேட்டு ரசிக்கிறது.

காற்றுக்கு கூட
உன்மீது காதலடி.
அடிக்கடி உன்
கூந்தலை கலைத்து
விளையாடி களைப்பாகிறது.

இறைவனின் படைப்புகள்
எல்லாம் என்னைப்
பார்த்து பொறாமைப்
படுகின்றன.

உன்னை நான்
அடைந்ததற்காக

உன்னோடு


உன்னோடு பேசும்
ஒவ்வொரு நொடியும் என்
வாழ்வில் இனிக்கிறதே!

என்னோடு நடக்கும்
என் நிழல்கூட எங்கே
நீயெனக் கேட்கிறதே!

ஆகாயம் தாண்டி
பூலோகம் தோண்டி
என் காதல் செழிக்கிறதே!

நெஞ்சம் நனைக்க
மஞ்சம் கனக்க
உன்னுயிர் என்னில் வழிகிறதே!

உன்னோடு சிரித்து
உன்னோடு முறைத்து
என் மேகம் பொழிகிறதே!

Monday, October 06, 2008

அழகியல்


எதற்கடி புன்னகைக்கிறாய்?

இந்த பூமியை உன்
புன்னகையில் புதைக்கவா?

இல்லை! என்னை
உன் பூவிதழால் வதைக்கவா?

உன்னை அழகு எனக்
கூறினால் பொய் என்கிறாய்.

அழகு என்பது என்னைப்
பொறுத்தவரை.....


நீ சிரிக்கும் போது
என்னைத் தொடும்
இதமான மூச்சு,

மழலைப் போல
மணிக் கணக்கில்
நீ பேசும் பேச்சு.

உன் இடைதாண்டி
நடைபோட துடிக்கும்
கூந்தல்.

நான் உற்றுப் பார்க்கையில்
என்னை ஈர்க்க முயலும்
விழிக் காந்தம்.

நீ சிரிக்கும் போதுத்
தனியாய் தெரியும்
தெற்றுப் பல்.

நான் புலம்புகையில்
ஆறுதல் தரும்
அன்பான வார்த்தை.

தொலைபேசியில் உன்
தோழிகளிடம் உலகம்
மறந்து நீ உரையாடும்
விதம்.

உன் பெற்றோர்
மற்றும் உற்றோர்
மீது நீ கொண்டிருக்கும்
ஆழமான அக்கறை.

நாம் நடக்கும் போது
உனக்குத் தெரியாமல்
என்னைத் தொடும்
உன் துப்பட்டா.

நீ வாய்விட்டு சிரிக்கையில்
என்மீது தெறிக்கும்
ஒன்றண்டு எச்சில்
அமுதம்.

ஒரு நிமிடத்தில் நீ
காட்டும் ஓராயிரம்
முகபாவனை.

நான் கோபம் கொள்ளும்
வேளையில் "என்ன ஆச்சு?
இப்படி இருக்காதீங்க"
என நீ வாஞ்சையோடு
சொல்வது.

என் விரக்தியின் உச்சத்தில்
"free விடுங்க" என மழலையாய்
மனதை வருடும் பாங்கு.

கடுந்தணலாய் நான்
வார்த்தைகளை கொட்டும்போது
அதை புன்னகையாய்
மாற்றும் வித்தை.

எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்டு
என்னை சுகமாய் துன்புறுத்தும்
இன்ப நேரங்கள்.

மெளனம் சிலநேரம் பூத்து
"பேசுடா என" என்னை
மன்றாட வைக்கும் மந்திரம்.

என் இரவுகளில்
என் இதழ் அருகே
அமர்ந்து நீ கொஞ்சும்
கொஞ்சல்கள்.

நேரம் கொஞ்சம் கடந்தாலும்
"நேரமாச்சு போகலாமா"
என நீ கெஞ்சும்
கெஞ்சல்கள்.

இதில் எதில் இல்லையடி
நீ சொல்லும் அழகு.

உன்னைப் படிப்பதற்கு
ஒரு பாடத்திட்டம்
வைத்தால் அதற்கு
பெயர் அழகியலாகத்தான்
இருக்கும்.

என் அழகான தேவதையே

காலம் காலமாய் நாம்


நீ நிகழ்கால ஏடுகள்
நீண்ட காலமாய் செய்த
எனக்கான நிர்பந்தம்.
என் உதிரத்தில் உறவாட
படைத்தவன் கொடுத்த
பிரபஞ்சம்.

உன் நெற்றித் திலகம்
ஒட்டி இருக்கும் இடத்தைக்
கொஞ்சம் உற்றுப் பார்.
என் கைவிரல் ரேகைகள்
தென்படக் கூடும்.


பழுத்து விழும் நிலையில்
தன்னுயிரை இழுத்துக்
கொண்டு இருக்கும் கிழ
மரங்களைக் கேட்டுப் பார்.
அவை நம்மை ஏதோ
ஒரு பிறவியில்
சந்த்தித்திருக்கக் கூடும்.


காக்கையின் கத்தல்கள்,
குயிலின் கூவல்கள்,
ஆந்தையின் அகவல்கள்,
இதில் எதிலாவது நம்
முற்பிறவி மிச்சம்
இருக்கலாம்.

மார்பை அறுத்து
மதுரையை எறித்த அந்தக்
கற்புப் பைங்கிளியின்
ஒற்றை சிலம்பாய் நான்
இருந்திருக்கலாம்.
என்னைப் பிரிந்து வாடிய
இன்னொரு சிலம்பாய் நீ
இருந்திருக்கலாம்.

நான் உன்னை விட்டுப்
பிரியும் போது நீ
விட்ட சாபமே கோவலனைக்
கொன்று இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

அகநானூறு கூறும்
அழகான செய்யுள்களுள்
அடங்கி இருக்கும்
காதலில் உனதும் ஒன்றாய்
இருக்கலாம்.
யாருக்கடி தெரியும்?

ஒன்றை மற்றும்
தெரிந்துக் கொள்ளடி.
நாம் காலம் காலமாய்
காதலித்து இணையாமல்
முற்பிறவி முழுவதுற்குமாய்
ஒருவருக்குள் ஒருவராய்
வாழவே மீண்டும்
பிறந்துள்ளோம் என்பதை.

நீ என் இல்லறவியல்


உன்னோடு நடக்கையில்
உலகம் என்னையே
உற்றுப் பார்ப்பதாய்
தோன்றுதடி.

உனக்கும் எனக்கும்
உள்ள இடைவெளியில்
காற்று உட்கார்ந்து
கவிதை பேசுதடி.

சிலுவைகள் சுமந்த
மனம் இன்று சிறகுகள்
விரிக்கிறது.

உன் கூரிய விழிகள்
கூறும் வார்த்தைகளை
கவனமாய் படிக்கிறது.

வறண்டு போன
உதடுகள் உன்பெயர்
உரைக்கையில் கொஞம்
ஈரம் பெறுகிறது.

உன் விழிகளைப் பார்த்து
பேசுகையில் கள்ளம்
இல்லா மழலைகள்
கொஞ்சும் ஞாபகம்.

நீ நாணும் போது
வானிடை வளையும்
வானவில்லின் நினைவலை.

இந்த இயந்திரவியல்
மாணவனின் இதயத்தில்
பூத்த இன்பவியல்.
நீ என் இல்லறவியல்
ஆனால் இதயத்தில்
என்றுமில்லை
துன்பவியல்.

Wednesday, October 01, 2008

வானம் நீ


எனக்கு விடியல் தந்த
வானம் நீ.

உன்னில் நான் சூரியனாய்
பிரகாசிக்கா விட்டாலும்
பராவாயில்லை.

ஏதோ ஒரு மூலையில்
நட்சத்திரமாய் வாழ்ந்து
விட்டுப் போகிறேன்.

மழலையின் மாற்றுரு நீ




இந்த பூமியில் எங்கு
நீ பிறந்தாய்.
அவ்விடம் எனக்கு
தாய்நாடு.

எந்த மொழியில்
என்னோடு பேசினாய்.
அம்மொழி எனக்கு
தாய்மொழி.

எவ்விடம் உன்னை
முதன் முதலாய்
சந்த்தித்தேன்.
அவ்விடம் எனக்கு
தாஜ்மகால்.

உனது கையெழுத்தில்
எனது பெயர்.
முதல் ஓவியம்.

நீ என்னோடு பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
கவிதை.

உன் மெளனங்கள்
ஊமைக் குயிலின்
உண்மை கீதங்கள்.

உன் கோபங்கள்.
மழலை மொழியின்
மாற்று வடிவம்.

இயல்பாக பேசி,
இயல்பாக சிரித்து,
இயல்பாக பழகி,

ஏனோ இருக்க
முடிவதில்லை.
எப்போதுமே இயல்பாக.

யார் நீ




கடைவிழி காட்டினாய்.
உயிர்குழி வாட்டினாய்.

பருக்களை எல்லாம்
இதயத்தை குத்தும்
ஈட்டியாக மாற்றினாய்.

எச்சிலைக் கூட
எரியும் மனதில்
நெய்யாக ஊற்றினாய்.

தூரதேசம் நின்று
ஈரநேசம் காட்டும்
ஓரக நிலவே!

வண்ண முகத்தில்
வாடிய சாயல்
ஏனடி மலரே!

நான் தொடத்
தெரிந்த பித்தன்.
நீயோ சுடத்
தெரிந்த சூரியன்.

உன் பாதச்
சுவடுகளை அலை
வந்து தழுவும்.
உன் மேனி
மாசினை புதுமழை
வந்து கழுவும்.

இமைகளின் அசைவுகூட
இசையாக மாறும்.
புன்னகை உதடுகளில்
மதுபானம் ஊறும்.

தமிழ் கூறும்
நல்லுலகே உன்
அழகினைப் பாடும்.
கூந்தல் கலைகையில்
மயில் கூட்டம்
மகிழ்ச்சியாய் ஆடும்.

நெருஞ்சி முற்கள்
உன்னைப் பார்த்தால்
குறிஞ்சி பூவாய்
தினமும் மலரும்.

அருகில் நீ அமர்ந்து
இருந்தால் உன்
அழகை இரசித்தே
பொழுதும் புலரும்.

நீ தோழியா?
துணைவியா?

விடை தெரியாத
வினாவில் வாழ்கிறேன்.
தேவதையே யாரடி
நீ?

உனக்கென இருப்பேன்




நீ கண்கள் திறக்க
பல பண்கள் இசைப்பேன்.
ஒரு கவிதை பிறக்க
உன் அழகை ரசிப்பேன்.

உன் முடிமுதல் அடிவரை
பூ முத்தம் கொடுப்பேன்.
உன் இடைதனில் பிடிபட
நான் நித்தம் துடிப்பேன்.

நீ கொஞ்சும் போது
நான் குழந்தை ஆவேன்.
நீ கோபம் கொண்டால்
நான் கொஞ்சம் சாவேன்.

அழகு விழியில் நீர்த்துளி
வழிந்தால் அமிலம் பொழியாதோ!
அன்பின் மிகுதியால் நாம்
அழுதால் ஆனந்தம் வழியாதோ!

என் இதழ்கள் அழைந்தால்
அது உன்பெயர் தானடி.
உன் இதயம் இசைய
இந்த தயக்கம் ஏனடி?

உன் மடிமீது சாய்ந்து
ஒரு மழலையாக தூங்குவேன்.
உன் இதழ்களின் ஈரம்பட
விரல் நகமாக ஏங்குவேன்.

மழைக் கூந்தல் மலர்களை
என் மனதோடு தாங்குவேன்.
மரணம் என்றாலும் உன்
நினைவோடு உயிர் நீங்குவேன்.

Tuesday, September 30, 2008

முத்தத்தமிழ்




அன்றொரு நாள்
அழகைச் சந்த்திதேன்.
அன்று முதல்
தேவதையைத் தினமும்
சிந்தித்தேன்.

காற்றில் ஓர்வாசம் வந்தால்
கண்கள் கம்பன்
கவிமகளைத் தேடும்.

கொடியில் இலை அசைந்தால்
குறள் இடையோ என
ஐயம் மூளும்.

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கவிதை
அவளுக்காக எழுதினேன்.

தந்துவிட தைரியம்
இன்றி எனக்குள்
நானே புழுங்கினேன்.

அவள் புத்தனின் எதிரி.
ஆசையைத் தூண்டுவாள்.
கூந்தல் மலர்களை உதறி
பூமியைத் தோண்டுவாள்.

சதையில் செய்த
சிற்பம் அவள்.
இதழ்கள் பேசும்
சித்திரம் அவள்.

அவள்

பேசினால் இயல்.
நடந்தால் இசை.
பார்த்தால் நாடகம்.
மொத்தத்தில் அவள்
முத்தமிழ்.
எனக்காக பிறந்த
முத்தத்தமிழ்.

மன்னிப்பாயா


உன்னை காயப்படுத்தும்
எந்த செயலும் என்னை
இருமடங்கு வருத்தும்.

நாள்கள் சிலகடந்தாலும்
என் நெஞ்சையது
மெதுவாய் உறுத்தும்.

உன் தோழிகள்
என் சோதரிகள்.
இதயத்திற்குத் தெரியும்.
நரம்பில்லாத நாவிற்குத்
தெரிவதில்லை.
சிலசமயம் எல்லை
மீறுகின்றன.
தனிமையில் புலம்பித்
தொல்லைத் தருகின்றன.

மன்னிப்புக் கேட்டால்
மனம் ஆறிவிடுமா?
நீபடும் துயரைத்தான்
கூறிவிடுமா?


என் உயிராய்
உயிர்த்து இருக்கும்
தேவதையே!

நீ புண்படும் வேளைகளில்
உதிர்கிறேன்.
உன் கூந்தல்
பூக்களைப் போல்.

உன் நினைவுகளே
என்னை படலாமாய்
சூழும்போது உன்
நிழற்படம் எதற்கம்மா
எனக்கு?

உன் புன்னகையை
என்றும் வேண்டுகிறேன்.
அது கடவுள் எனக்காக
அனுப்பி வைத்த
கவின்மிகு ஓவியம்.

எல்லாம் மறந்து
கொஞ்சம் சிரி.
நான் உலகத்தையே
மறந்து சிலநொடி
உயிர் வாழ்கிறேன்.

தமிழ்த் தோழி




வல்லினங்களில் வளைந்து,
மெல்லினத்தில் மெலிந்து,
இடையினத்தில் இளைத்தேன்.
முத்தமிழில் திளைத்தேன்.
எழுத்தோடு எழுவேன்.
பிழையோடு விழுவேன்.
வெண்பாவில் வேகுவேன்.
கலிப்பாவில் சாகுவேன்.
சீரோடு சிதைவேன்.
அணியோடு வதைவேன்.
எதுகை மோனையாக
ஒத்துப் போனோம்.
மெய் மட்டும்
இங்கு கிடக்கும்.
உயிர் மட்டும்
எழுந்து நடக்கும்.
உயிர் மெய்யைச்
சேர இயலாதோ!
காதல் ஆய்தம்
ஒருகணம் துயிலாதோ!
உன் உருவம்
கண்டால் உருவகம்.
உள்ளம் கொண்டால்
உவமைத் தொகை.
செய்கைகள் யாவும்
வினைத் தொகை.
சேட்டைகள் செய்தால்
பண்புத் தொகை.

தமிழே!

நம் உறவு என்ன வகை?
உன் காதலே எனக்குப் பகை.

மின்னல் தேவதை




அழகென்ற சொல்லின் அகராதிப் பொருளே!
மேகங்கள் நகுகின்ற கூந்தல் இருளே!
வெண்முத்து பற்கள்தான் பவளக் கற்களோ!
ஐயம் கணும் கண்ணுக்கு மூளும்.

பார்வையே கூறிடும் பார்வையே போரிடும்.
கண்களின் கூர்மையில் உடையும் வாளும்.
எட்டாத கற்பனை கிட்டாத கவிதை
உந்தன் படைப்பு உயிரின் துடிப்பு.

உன் பாதம் பட்டதும் பாலையும்
பூத்தது அழகாய் சிறு மெழுகாய்.
காற்றில் ஆடும் சுருண்ட கேசம்.
மீன்கள் கூடும் ஆற்றின் தேசம்.

இடைத் தொடும் சடைப் பின்னல்.
என்னை எடை இடும் சாதனம்.
இரத்தப் பருக்கள் சின்ன வடுக்கள்
சிந்தும் அழகின் சீரிய நூதனம்.

வளையல் சுமக்கும் இளைய கரங்கள்
என்முகம் புதைக்கும் இன்ப தலையணை.
உள்ளங் கையில் ஒளிந்த ரேகை,
கள்ளன் நான் நடக்கும் பதை.

நீண்டு சிறுத்த கவின் விரல்.
தீண்டிக் கொஞ்சும் தனித் துவம்.
என்னைக் கிள்ளுகின்ற நனி நகம்.
இன்பம் அள்ளும் கள் குடம்.

தோலில் ஊன்றும் ரோமக் கூட்டம்.
தென்றல் வீசும் கவரித் தோட்டம்.
காலைத் தழுவும் வெள்ளிக் கொலுசு
கதறிப் பேசும் எந்தன் மனசு.

காதில் எட்டிப் பார்க்கும் தோடு.
குட்டி நட்சத்திரம் கட்டிய வீடு.
தேவதை சுவாசிக்கும் நாசித் துளைகள்,
இசை உமிழும் குழல் துளை.

வளைந்து நெளிந்த விழிப் புருவம்
கருப்பு வண்ண வானவில் உருவம்.
மொத்தத்தில் நீயொரு இலக்கணம்.
பித்தத்தில் ஏறிடும் தலைக்கணம்.

உன் கன்னக் காகிதத்தில்
முத்தக் கவிதைகள் இயற்றவா?
உன் உதட்டு சாயத்தை
ஒரு விரலால் துவட்டவா?

மின்னலே உன்னைக் கண்டதும்
ஒழிந்தது வாழ்வின் இன்னலே.
ஆழமாய் நேசிக்கிறேன் உன்னை.
யொசிக்குமா உந்தன் பெண்மை.

கண்ணீர்




துயரத்தில் உயிர் துப்பும்
காலத்தின் கரையாத கரிப்பு.

அன்பின் மிகுதியில் கண்கள்
பேசும் திரவக் கவிதை.

குற்றத்தில் குறுகிப் போகும்
குருதியின் நிறமற்ற நீர்.

இயலாமையில் இதயங்கள் வீசும்
ஆற்றாமையின் அடிமைத் தூது.

துரோகத்தில் துய்த்து போன
விழிகளின் வியர்வைத் துளி.

நெடுநாளைய மெளனம் நிரப்பும்
வார்த்தையின் உப்பு வலி.

களிப்பில் இமைகள் தள்ளி
விடும் இன்பத்தின் ஊற்று.

இதில் நீ எதற்காக
அழுகிறாய்?


என்னுயிரே!

நீ அழும்போதெல்லாம்
என் கரங்களும் கண்களும்
காத்து இருக்கும்.

முடிந்தால் உன்
கண்ணீரைத் துடைக்க,
இல்லையேல் உன்னோடு
சேர்ந்து அழ.

முள் நீத்த ரோஜா




அழகு என்பது ஆணானால்
உன் அடிமையாக இருக்கும்.
பழகிப் பிரியும் வேளையில்
நெஞ்சம் கடுமையாக வலிக்கும்.

எரிமலையின் பனிப் பூவாய்
உன்னை நான் கண்டேன்.
இருள் விடிந்தும் தீராக்
காதல் என்னுள் கொண்டேன்.

சிவனுக்கு அந்த செங்கமலக்
கண்ணாள் பார்வதி துணை.
இவனுக்கு இடர் நீத்த
நங்கை நீயே துணை.

கவிதை விதைகளை
என்னுள் துவினாய்.

காதல் ஊற்றி
வளர்த்த செடி,

காலம்தான் அழிக்குமோ!
தமிழாக செழிக்குமோ!

உணர்ந்திட எனக்கு
உயிர் இல்லை.
உரைத்திடு முள்
நீத்த ரோஜாவே.

எங்கே இருந்தாய்



காதலே என்
காதலே கருங்
கேசத்தால் என்னைக்
கொன்றதேன்?
தனிமையில் என்னை
விட்டு தூரம் நீ
சென்றதேன்?

உறங்கும் வரை
உந்தன் சிந்தனை
உறங்கிய பின்பும்
உளறும் எந்தனை,
கண்ணீரில் தள்ளிவிட்டு
கடுமமில கொல்லியிட்டு
காணாதேசம் சென்று
தந்தனை தண்டனை.

என் மூச்சுக் காற்றில்
உன் முகம் கண்டேன்.
உன்னைக் கண்ட பின்பே
உணவு உண்டேன்.

இத்தனை நாள் எங்கு
இருந்தாய்?
தனிமையில் நானோ
இறந்தேன்.

புன்னகை சுமந்த
உதடுகள் எங்கே?
பூக்கள் சுமந்த
கூந்தல் எங்கே?
என்னைப் பார்த்த
பார்வை எங்கே?
என்னை ஈர்த்த
பாவை எங்கே?

தேடியே நான்
தேய்ந்து போனேன்.
வாடியே நான்
மாய்ந்து போனேன்.

வேண்டுமே உன்மடி
என்றுமே!

நீ நகம் கடிக்கையில்
நனைந்து போனதே என்னுயிர்.
நீ முகம் காண்கையில்
மறந்துப் போனதே என்பெயர்.

என் கவிதைத் தோட்டம்
கண்ணீர் சிந்தி அழுதது.
என் கட்டுடல் அது
செந்நீர் சிந்தி விழுந்தது.

கானல் தேசம் என்தேகம்.
மழையாக நீவிழக் கூடாதா?
காந்தம் உமிழும் பார்வைகள்
என்கண்கள் கண்டு நாணுமா?

மறுபிறவி இருந்தால்
துறவியாவேன்.
என்னைத் துறந்து
போவேன்.
உன்னுள் இறந்து
போவேன்.

பாதங்கள் என் கரங்கள்
தாங்குமா?
மெல்லிடை அதில் என்னுயிர்
நீங்குமா?

நீ பேசிய பேச்சு.
எண்ணி விடுகிறேன்.
வெப்ப மூச்சு.
உன் நினைவுகளோடு
என் காலம் செல்லும்.
உன் நினைவையன்றி
எது என்பெயரைச்
சொல்லும்?

Monday, September 29, 2008

உதிரும் கூந்தல் பூ





நடைபாதை வீதியில்
நடக்கும் போது
நங்கை கூந்தல்
நறுமண மலர்
புல்லின் மடியில்
பூத்துக் கிடந்தால்
நெஞ்சில் ஆனந்தம்.

பூவை எடுத்து
பூவையிடம் நீட்டி
உனதாவென வினவ,
ஆமென்று சொல்லி
அவள் குழலிடை
பதுக்கி புன்னகை
புரிந்தால் ஆனந்தம்.

இல்லையென பொய்யை
இயல்பாய் உரைத்து
என்னிடமே பூவைத்
தந்து விட்டால்
ஞாபகமாய் எனக்குள்
எப்போதும் இருக்கும்
நசுங்கிய பூ நாளெல்லாம்
ஆனந்தம்.

அலையும் கரையும்




நீலக் கடலின்
நித்திய அலைகளின்
சத்தம் கேட்டே
நித்தம் திரும்பும்
விரும்பிய அலைகள்.

வாய்வரை வந்த
வார்த்தை உதட்டோடு
ஒளிந்ததால் ஊமையாகி
நிற்கும் அலைகள்.
சொல்ல முடியாமல்
மெல்லமாய் திரும்பும்.

காதல் மொழி
கேட்பதற்கே காதை
வைத்திருக்கும் கரைகள்
அலைகளின் பிரிவால்
அழுது நிற்கும்.

பரிசாய் அலைகள்
தந்த ஈரத்தை
மட்டும் இதயத்துள்
தாங்கி காத்திருக்கும்
கரைகள்.

காதலை சொல்லி
விடுவோம் என்ற
நம்பிக்கையில் அலையும்,
கேட்டுவிடுவோம் என்ற
நம்பிக்கையில் கரையும்......

காதல் முடிவதில்லை.