Thursday, August 21, 2008

உன் பிரிவு

இதயத்தின் வலியை
இமைகள் அறியாது.
அழுதிடும் போதும்
அதற்கு புரியாது.

உதிரும் பூக்கள்
மீண்டும் மலராது.
விழும் மழைத்துளி
விண்ணைப் பிரியாது.

நம்நட்பு மழை
அல்லவா!
மலராய் அது
மறையுமா?

இருப்பிடம் தூரம்
என்றாலும்
இதயம் தூரம்
சென்றிடுமா?

முள்ளில்லாமல் ரோஜா
கண் விழிப்பதில்லை.
பிரிவின்றி நட்பும்
பிறந்து வளர்வதில்லை.

குழந்தை போல்நானும்
குமுறுகின்ற இவ்வேளை,
குளமாய் மாறிய
விழியில் தீச்சுவாலை.

என் பகலில்
ஞாயிறாய் இருந்தாய்.
என் இரவினில்
திங்களாய் திரிந்தாய்.
என்வானைத் தனிமை
ஆக்கி இன்றேனோ
தூரம் சென்றாய்.



மழைமேகமாய் உன்
நினைவுகள்!

மனம் அதில்
நனைகிறது.


கவிதை சுமந்த
காகிதம் என்னை
கவலைகள் சுமக்க
வைத்து கொன்றாய்.

நாளையுனை காணும்வரை
நாளும் அழுவேனோ!
உன்னை எண்ணியே
நோயில் விழுவேனோ!

உலகின் விளிம்பில்
நீ இருந்தாலும்
உயிரின் நிழலென
உன்னுடன் வருவேன்.

கல்லறையில் என்
உடல் புதைந்தாலும்
கவிதைப் பூக்களை
உனக்காக தருவேன்.

No comments: