Thursday, August 21, 2008

விட்டிலின் நேசம்

நானும் ஒரு
விட்டில் பூச்சிதான்.

மரணம் எனத் தெரிந்தும்
உன்னை நேசிக்கிறேன்.

நீயும் நானும்

என் மூச்செல்லாம்
உனக்காக விடுகிறேன்.

உன் பேச்சிலாவது
என்னை சேர்த்துக்கொள்.

காதலும் காற்றும்

காதலும் ஒரு காற்றுதான்.

யார் வேண்டுமானாலும்
சுவாசிக்கலாம்.

இரண்டையுமே இழந்து
விட்டால் பிணம்தான்

மறத்தலும் இறத்தலும்

உன்னை மறத்தல்
இறத்தலிலும் கொடுமை.

இருக்கும்போதே இறக்க
என்னால் முடியாது.
அதனால் உன்
நினைவுகளுடனேயே
வாழ்ந்துவிடுகிறேன்.

ஏன்?

பூக்களுக்கு கூட புன்கைக்க
கற்றுகொடுத்தவளே

எனக்கு மட்டும் ஏன்
அழக் கற்று கொடுத்தாய்?

ஆறெழுத்து கவிதை

இறைவன் எழுதிய
ஆறெழுத்து கவிதையே

நீ அரங்கேறியது என்னவோ
என் இதயத்தில் தான்

நடமாடும் வானவில்

வானவில்லை சுமந்துவந்த
வண்ணத்து பூச்சியே,

உன்னை எனக்குள்
சுமப்பதும் ஒரு சுகம்தான்.

துரத்தி விடாதே

உறங்கும் போது அனுமதி
இன்றி உள்ளே நுழைந்தவளே!

என்னை வெளியில்
துரத்திவிடாதே!

கம்பன் காலத்தவன்

நான் கம்பன் காலத்தவன்.
இல்லையேல் உன்
அழகுக்கு எப்படி என்னால்
எவ்வாறு இலக்கணம்
சொல்ல முடியும்?

என் வானம்

மின்னல் பார்வை கொண்டு
வாழும் மின்மினியே
என்னை நீ வசிக்கும்
வானமாய் மாற்றிவிடு.

இதய சிறை

சிறையில் இருக்கும்
போதுதான் சிலர்
புத்தகம் எழுதினார்கள்.

ஆனால் இன்று நீ
இருக்கும் சிறையே
புத்தகம் எழுதுகிறது.

உன் மலர்கள் போதும்

அன்பே!

என் மரணத்திற்காக
நீ அழாவிட்டாலும்
பராவாயில்லை.

மரணம் அடைந்த உன்
கூந்தல் மலரையாவது
என் கல்லறையில் வீசு.

அழகான பூகம்பம்

உன் புன்னகையும்
பூகம்பம்தான்.

அதில் சிக்கிக்கொள்வது
நான் மட்டுமே.

சிக்கிமுக்கி பார்வை

உன் பார்வை ஒரு
சிக்கிமுக்கி கல்.

அது உரசும்போது
பற்றி எரிவது
நான் மட்டுமே!

காதல் புத்தன்

அன்பே நான்
புத்தனாகத் தயார்.

போதிமரமாய் நீ
இருப்பதானால்.

மெல்லினமே

மெல்லினமே

வல்லின வார்த்தைகளை
தவிர்த்து விடு.

அன்பே! உனது
வாய் வலிக்கும்.

காதல் அன்றில்

நானும் ஒரு அன்றில்
பறவைதான்.

உன் நினைவுகளை
துறக்கும் போது நான்
மடிந்து விடுவேன்.

விழிக்கும் நினைவுகள்

மெல்ல விடிகிறது
வானம்.

உறங்கிய விழிகள்
விழிக்கிறது.
விழித்தே கிடக்கும்
உன் நினைவுகளோ
உறங்க மறுக்கிறது.

வெயில்

மழையை விட
வெயில்தான் பிடிக்கும்.

அதுதான் உன்
நிழல் கூட அழகானது
என எனக்கு புரியவைத்தது.

தேடல்

உனக்குள் தொலைந்த
என்னை தேடிப் பார்க்கிறேன்.

கிடைக்கும் தொலைவில்
நானில்லை.
கொடுக்கும் நிலையில்
நீயுமில்லை.

நீ

நீ தொட்டு தந்தால்
பிச்சை பாத்திரம் கூட
அட்சய பாத்திரம் ஆகும்.

உன் பாதம் குத்திய
கற்கள்கூட பாவம்
செய்து விட்டோமென
நொந்து சாகும்.

காதல் பக்தன்

தூரத்தில் இருந்து கடவுள்
தொழும் பக்தன் போல
தொலைவில் இருந்து
இரசிக்கிறேன்.

உன் புன்னகையை.

கிறுக்கல்

கவிதை கூட கிறுக்கலாய்
தெரிகிறது.

உன் பெயரை
படித்ததில் இருந்து.

நீ

என் உதட்டு காகிதத்தில்
புன்னகை கவிதைகள்
இயற்றி செல்கிறாய்.

நீ எனக்கு
முதல் சேய்.
கடைசி தாய்.

உன்னை நான்
நேசிக்கவில்லை.
சுவாசிக்கிறேன்.

நகரட்டும் நாட்கள்

உனக்காக நான் காத்திருக்கும்
இந்த நிமிடங்கள் இனிக்கிறது.

நாட்கள் வேகமாக கரையட்டும்.
என்னுயிர் கரைவதைப் போல.

நினைவு விதைகள்

விதையாக விழுகிறது
உன் நினைவுகள்

பிறகு
சல்லிவேராகி ஆணிவேராகி
இன்று விருட்சமாய்
என்னை சூழ்ந்து
நிற்கிறது.

நீயும் ரோஜாவும்

பூத்து குலுங்கும்
ரோஜாக் கூட்டம்
நடுவில் உறங்கி
கிடந்தேன்.

உன்வாசம் வீசியது.
விழித்து பார்த்தேன்.
நீ இல்லை.
உனக்கு பதிலாய்
சில ரோஜாக்கள்.

நீயும் ரோஜாவும்

பூத்து குலுங்கும்
ரோஜாக் கூட்டம்
நடுவில் உறங்கி
கிடந்தேன்.

உன்வாசம் வீசியது.
விழித்து பார்த்தேன்.
நீ இல்லை.
உனக்கு பதிலாய்
சில ரோஜாக்கள்.

முடிகிறது

எப்படி முடிப்பதென
தெரியாத கவிதைகள்
கூட அழகாய்
முடிகிறது உன்னால்.

இருட்டும் வானவில்லும்

என்வானில் வானவில் கூட
இருட்டாய் தான் இருந்தது.

நீ வந்தபின்தான் இருட்டு
கூட வானவில் ஆனது.

நீயும் பூவும்

என் வீட்டு தோட்டத்தில்
ஆயிரம் பூக்கள்.

ஆனால் அவை ஒன்றிற்கு
கூட உன்னைபோல்
சிரிக்க தெரியாது.

நீ தரும் மரணம்

நீ தருவதாய்
இருந்தால்

மரணத்தை கூட
மகிழ்ச்சியாய்
ஏற்று கொள்வேன்.

காற்றின் அறியாமை

ஈரக்காற்று என்னை
தீண்டி கவிதை
எழுத தூண்டுகிறது.

வெறுமையாய் கிடக்கும்
இந்த மனதிற்குள்
கவிதை வராது,
கண்ணீர் மட்டும்தான்
வருமென காற்றுக்கு
தெரிவதில்லை.

ஆதாரம்

உன் அருகாமையில்
என் காலம் தொலையட்டும்.
உன் பாதங்கள்
என் கைரேகையாய்
மாறட்டும்.

என்னை சுற்றி நிகழும்
மாற்றங்கள் அனைத்திற்கும்
நீதான் ஆதாரம்.

உன்னை தவிர
எனக்கு யோசிக்க
வேறென்ன இருக்கிறது?

கவிதையை வாழவை

நான் எழுதி முடிக்க
முடியாத கவிதையை
எழுதிமுடித்து விட்டுபோ.

வார்த்தை மறந்து
வழிதேடி நிற்கிறேன்.

என் கவிதையையாவது
வாழவை.

நீ ஆகாயம்

வானத்தை வெறித்தபடி
படுத்து கிடக்கிறேன்.

ஆகாயமாய் விரிகிறது
உன் நினைவுகள்.

சில நினைவுகள்
பறவையாய் பறக்கின்றன.
சில நினைவுகள்
மேகங்களாய் மறைகின்றன.

புள்ளி

ஏதோவொரு தொலைவில்
புள்ளியாய் தெரிகிறாய்.

உன்னை காணும் வேட்கையில்
அருகில் வந்து உற்று
நோக்குகிறேன்.

உனது அசைவுகள் பேச்சு
நளினம் புன்னகை என
உனது என்பது எல்லாமே
எனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது.

மெதுவாக ஆரம்பித்து என்னை
முழுதாய் ஆக்கிரமிக்கிறாய்.

இப்போது நீ பெரிய
பிம்பமாகி விட்டாய்.
ஆனால் நானோ சிறு
புள்ளியாய் தெரிகிறேன்.

புள்ளி

ஏதோவொரு தொலைவில்
புள்ளியாய் தெரிகிறாய்.

உன்னை காணும் வேட்கையில்
அருகில் வந்து உற்று
நோக்குகிறேன்.

உனது அசைவுகள் பேச்சு
நளினம் புன்னகை என
உனது என்பது எல்லாமே
எனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது.

மெதுவாக ஆரம்பித்து என்னை
முழுதாய் ஆக்கிரமிக்கிறாய்.

இப்போது நீ பெரிய
பிம்பமாகி விட்டாய்.
ஆனால் நானோ சிறு
புள்ளியாய் தெரிகிறேன்.

தாடி

காதல் தோல்வி
என்கிறார்கள்.
கன்னத்தில் குழி
என்கிறார்கள்.

யாருக்கு தெரியப் போகிறது?

நானும் அவளும்
கைகோர்த்து நடந்த
புல்வெளியின் அடையாளச்
சின்னம் இதுவென்று.

நீயும் குழந்தை

ஒவ்வொரு குழந்தையை
காணும்போதும் ஆயிரம்
கடவுள்கள் தோன்றும்.

ஆனால்,

உனக்குள் மட்டும்தான்
ஆயிரம் குழந்தைகளை
காணமுடிகிறது.

நாங்கள்

எவ்வுயிர்க்கும் பாதகம் அறியோம்.
சிவமன்றி வேறொன்றும் தெரியோம்.

அன்பின் வழிதனில் நடப்போம்.
அன்பர் விழிதனில் கிடப்போம்.

ஞானத்தில் சிறந்து விளங்கினாலும்
நாணல் போலவே பணிவோம்.

வஞ்சனை புரிவார்தம் உயிர்
குடிக்க என்றும் துணிவோம்.

சிவமது மனதில் உள்ளவரை
பயமது நெஞ்சில் நிற்காது.

நன்மை புரியவே தோன்றினோம்.
தீமை புரிய தெரியோம்.

வலியது பட்டாலும் நேர்மை
விழிதனில் நடந்தே பழகினோம்.

எல்லா புகழும் சிவனுக்கே
எந்தன் வாழ்வும் அவனுக்கே
என்று அர்ப்பணித்த பின்பு
எது என்னை தின்னும்?
வணங்கும் இந்த மண்ணும்!

வேண்டாம் தேவதைகள் சகவாசம்

காரிகை உந்தன்
கருங் கூந்தலில்
பூத்திட,

ஆயிரம் மலர்கள்
கிடந்தாலும்,
ஒற்றை பூவைதான்
நீ பறிப்பாய்.

மற்ற பூக்கள்
எல்லாம் கண்ணீர்
விட தேவதை
நீயோ சிரிப்பாய்.

உன்னை போல
சிரிக்க முடியவில்லை
என ஏங்கியே
அவை சவத்திற்கு
மாலையாகும்.

வேண்டாமடி உனக்கு
தேவதைகள் சகவாசம்.

மானிடப் பெண்ணுக்கு
இத்தனை அழகாவென
மனம் பதறிவிடும்.

தேவதைகளாவது வாழ்ந்து
விட்டு போகட்டும்.

விட்டுவிடு!

உன் பிரிவு

இதயத்தின் வலியை
இமைகள் அறியாது.
அழுதிடும் போதும்
அதற்கு புரியாது.

உதிரும் பூக்கள்
மீண்டும் மலராது.
விழும் மழைத்துளி
விண்ணைப் பிரியாது.

நம்நட்பு மழை
அல்லவா!
மலராய் அது
மறையுமா?

இருப்பிடம் தூரம்
என்றாலும்
இதயம் தூரம்
சென்றிடுமா?

முள்ளில்லாமல் ரோஜா
கண் விழிப்பதில்லை.
பிரிவின்றி நட்பும்
பிறந்து வளர்வதில்லை.

குழந்தை போல்நானும்
குமுறுகின்ற இவ்வேளை,
குளமாய் மாறிய
விழியில் தீச்சுவாலை.

என் பகலில்
ஞாயிறாய் இருந்தாய்.
என் இரவினில்
திங்களாய் திரிந்தாய்.
என்வானைத் தனிமை
ஆக்கி இன்றேனோ
தூரம் சென்றாய்.



மழைமேகமாய் உன்
நினைவுகள்!

மனம் அதில்
நனைகிறது.


கவிதை சுமந்த
காகிதம் என்னை
கவலைகள் சுமக்க
வைத்து கொன்றாய்.

நாளையுனை காணும்வரை
நாளும் அழுவேனோ!
உன்னை எண்ணியே
நோயில் விழுவேனோ!

உலகின் விளிம்பில்
நீ இருந்தாலும்
உயிரின் நிழலென
உன்னுடன் வருவேன்.

கல்லறையில் என்
உடல் புதைந்தாலும்
கவிதைப் பூக்களை
உனக்காக தருவேன்.

எதுவும் இல்லை

என்னிடம்

சொல்வதற்கு எதுவும்
இல்லை!
மெளனத்தை தவிர.

இழப்பதற்கு எதுவும்
இல்லை!
உன்னை தவிர

மெளனம்

கடைசியாய்
நானும் அவளும்
சந்தித்து பிரியும்
வேளையில்

கண்பார்த்து மண்பார்த்து
கடைசியாய் சிலநிமிடம்
அவள் பேசியமொழி.

அன்பென்னும் அமுதம்

அமுதத்தை உண்டவர்கள்
மட்டும்தான் ஆண்டுகள்
கோடி வாழ்வார்களாம்!

உன் அன்பை உண்ட
நானும் ஆயுள்கோடி
வாழ்வேன் என்பதை
எப்போது உலகுக்கு
சொல்லப் போகிறாய்

அமுதம்

வேண்டுமா என்றாய்?
நீ எச்சில் படுத்திய
தின்பண்டத்தை!

யார்தான் வேண்டாம் என்பார்கள்?
தேவதை தரும் அமுதத்தை

Monday, August 18, 2008

வேண்டும்

ஒவ்வொரு விடியலிலும்
என்னை எழுப்பும்
தாய்முகமே!

நான் போர்வைமூடி
படுத்தால் செல்லமாய்
கிள்ளும் சேய்முகமே!

உன் கூந்தல் ஈரம்
கொண்டு என்னை குளிப்பாட்டு.
உன் விரலால் சிகை
கோதி என்னை தாலாட்டு.

பசியால் நான் துடித்தால்
உன் மென்கரங்களில்
ஊண் வேண்டும்.
எரிமலையாய் நான் வெடித்தால்
மனம் உன் குறும்புகளை
தினம் யாண்டும்.

வீட்டை விட்டு கிளம்பினால்
விளையாட்டாய் நீ
அழ வேண்டும்.
கண்ணீர் துடைக்கும்
வேளையில் கரம்பிடித்து
முத்தம் வேண்டும்.

ஒருவரை ஒருவர் கடிந்து
சின்ன ஊடல்கள் வேண்டும்.
காணாமல் போகும் நேரங்களில்
கரைகின்ற தேடல்கள் வெண்டும்.

வாரமொரு நாள் உன்
கூந்தலை பின்னி
பூச்சூட்ட வேண்டும்.
ஊருக்கு நீ சென்றால்
காந்த விழிகளை
எண்ணீ அழவேண்டும்.

மெத்தைகள் எல்லாம்
தொலைந்து உன்மடியில்
தூக்கம் வேண்டும்.
நோயால் நீ படுத்தால்
தாயாக நான் மாறும்
வரம் வேண்டும்.

மண் உன்னை திண்ணும்
முன்னே மரணம் என்னை
தின்ன வேண்டும்.
மரணம் வந்து தீண்டும்
வரை உன்னை மட்டுமே
எண்ண வேண்டும்.

பொய்யொன்று சொல்

கரையாக காலமெல்லாம்
காத்து இருக்கிறேன்.
அலையென நீ வந்து
தொடுவாயென!

அருகில் வந்து
இமைகள் மீட்டி
இதயம் துளைத்து
இயங்காமலே என்னை
இயந்திரம் ஆக்கி
மெளனமாய் செல்பவளே,

பொய்யொன்று சொல்!
"உனக்கு என்னை
பிடிக்குமென"

காதல்

ஏதோவொரு காலத்தில்
ஏதோவொரு கணம்
கண்ணோடு கண்
நோக்கியதற்கா
இத்தனை வலி!

கடைசி கவிஞன்

இதயத்தில் ரோஜாவாக
பூத்து குலுங்கும்
இனியவளே!

உன் முள்களை
சுமப்பதும் கூட
சுகமாய் இருக்கிறது.

காயம்பட்டு கண்ணீர்
நீ கசிந்தால்
நெஞ்சில் பூகம்பம்
மெதுவாய் கொல்கிறது.

அழகே!
உன்னை வருணிக்கும்
முதல் மற்றும்
கடைசி கவிஞன்
நானாய் இருக்கட்டும்.

ஒற்றையடி பாதை

நீ நடந்த
ஒற்றையடி பாதையில்
உன் மெல்லடி சுவடுகள்
அழியாமல் விலகி
நடப்பவன் நான்.

நீ அருகில்
இருக்கும் போது
மலராத அரும்புகள்
எல்லாம் இன்று
என்னை பார்த்து
நகைக்கின்றன.


காலத்தின் ஓட்டத்தில்
நீ இன்று இல்லை.
ஆனால் அந்த
ஒற்றையடி பாதை?

Thursday, August 14, 2008

புதிய பாரதம்

வாசம் வீசும் பூவாய்
நாம் வாழ்ந்து பார்ப்போம்.
நேசம் பேசும் தேசத்தில்
நாம் கைகள் கோர்ப்போம்.

மனிதனை மனிதனாக எண்ணுவோம்.
கிடைத்ததை பகிர்ந்து உண்ணுவோம்.

தன்னலம் மறப்போம்.
மண்நலம் காப்போம்.

நாகரிக சுவடுகளில்
நசுங்கி போன பழையன
எடுப்போம்.

அன்பின் இழைதனை
அதனில் கொடுப்போம்.

பாரத தாயின்
பாத அடிகளுக்கு
செருப்பாக மாறுவோம்.


இரத்தம் குடிக்கும்
யுத்த பேய்களின்
உயிர் குடிப்போம்.

இலஞ்ச ஊழல்
நச்சு பாம்புகளின்
தலைகளை உடைப்போம்.

நாட்டுக்கோர் கேடு
என்றால்
வீட்டுக்கொருவர்
இணைந்து துயர்
களைவோம்.

நம் அன்னையின்
கண்ணீர் துடைக்க
நீசர்களின் கரம்
வெட்டுவோம்.

வன்முறையின்
தலையில் ஓங்கி
கொட்டுவோம்.

பூமிபோல சிலகாலம்
பொறுப்போம்.
காலம் கரமீந்தால்
ஒறுப்போம்.

பழைய தடைகள்
உடைப்போம்.
புதிய பாரதம்
படைப்போம்.

Wednesday, August 13, 2008

சந்தேகம்

மறைத்து வை!
உன் தாவணியை.

உன் அழகை கண்டு
வானவில் தன்னை விட்டு
உன்னை வந்து ஒட்டி
கொண்டு விட்டதாக

வானத்திற்கு
சந்தேகம் வந்து விட போகிறது

Tuesday, August 12, 2008

கண்ணீர் தேசத்தின் அழகி

தொடுவானம் நீ.
தொலைதூரம் நான்.
தொட எண்ணினாலும்
சுட எண்ணுகிறாய்.

அடியே!
பாலை தேசம் நீ.
கள்ளி செடியாய் நான்.
முள்கள் என்மீது
முளைத்தற்காக
அழவில்லை.

உன் முகத்திற்காக
அழுகிறேன்.

கண்ணீர் தேசத்தின்
கடைசி அழகியே
மடியப் போவது
என் காதலல்ல.
உன் கர்வம்தான்.

நட்பு வாழும்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவு
உலகம் முடிவதில்லை.
உறங்கியே கிடக்கும்
விழிக்கு பொழுதுகள்
என்றுமே விடிவதில்லை.

பசுமையாய் நினைவுகள்
ஆயிரம் நெங்சில்
பார்த்தவுடன் மலரும்.
இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்தே
வாழ்க்கை வளரும்.

பிரிவு என்பது
நிரந்தரம் அல்ல!
உறவு பலப்படுமெ.
பிரிவை வென்ற
நட்பு வாழும்.
உண்மை புலப்படுமே.

மனமே!
அழும் மனமே!
நீ தாங்கி விடு.

தினமும் தீயில் எரிந்தாலும்
ஒருமுறை சிரித்து விடு.

தோல்வி என்பதும் கூட
ஒருவகை பாடமே.
வாழ்க்கை கற்கும்
பள்ளி கூடமே.

சோகம் இங்கு
யாருக்கு இல்லை.
அழுவதால் எதுவும்
முடிவதும் இல்லை.

காயங்கள் எல்லாம்
ஒருநாள் ஆறிவிடும்.
காலங்கள் நமக்காய்
இனிதாக மாறிவிடும்.

நம்பிக்கை மட்டும்
இருந்தால் போதும்.
நாளைய உலகம்
கையில் சேரும்.

முடிவு என்பது
இன்னொன்றின் தொடக்கம்.
நம் நட்பும்
இதில் அடக்கம்.

என்றும் நண்பனாய்
உனக்கு இருப்பேன்.
இன்றோடு கவலைகள்
எல்லாம் மறப்பாய்.

கேட்டு பார்

கடைசியாய் உன்னை
கண்டது எப்போது?
அறவே நினைவில்லை.

முதலாய் உன்னை
சுவாசித்த நாள்
மட்டும் இன்னும்
வசந்தமாய் வாழ்வில்.

நீ பேசுவாய்
என எதிர்பார்த்தே
ஊமையாய் போனது
எந்தன் நாட்கள்.

சிரித்த உன்
முகத்தை எண்ணி
அழுத படியே
இன்னும் நான்.

நீ நடந்த பாதைகளில்
பித்தனாய் அமர்ந்து
கிடப்பதில் ஏனோ
எனக்கொரு ஆறுதல்.

உன்னை எவ்வளவு
நேசித்தேன் என்பதை
வெள்ளை தாளை
கண்ணீரில் நனைத்து
கொண்டு இருக்கும்
என் பேனாவை
கேட்டு பார்.

கல்லூரி நட்பு

தனியாய் நடந்தேன்.
துணையாய் வந்தாய்.
கனவில் இருந்தேன்.
நினைவை தந்தாய்.

பூக்கள் உந்தன் சொந்தங்கள்.
புல்வெளி உன் பிம்பங்கள்.
மழையாய் வந்த புன்னகை
மலராய் நானும் நனைகிறேன்.

வழுக்கி விழும் நேரத்தில்
உன் வார்த்தை ஊன்றுகோல்.
தடுக்கி நான் விழுகையில்
தாங்கும் பூமியுன் கரங்கள்.


நெருப்பாய் சூழ்ந்த துன்பங்கள்
நீராய் உன் ஆறுதல்.
வெற்றி என்பது தொலைவானம்.
உன்னால் அதுவும் தொடுவானம்.

நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிறம்தரும் உந்தன் நட்பு.
சபிக்க பட்ட காலத்தில்
வரமாய் வருமுன் நட்பு.

இன்னொரு பிறவி இதுபோல
இறைவனை நாமும் கெட்போமா?
கண்ணை கசக்கி அழுதாலும்
கல்லூரி வழ்க்கை திரும்புமா?

இருவேறு வயிற்றில் பிறந்தாலும்
உருவான நட்பால் ஒன்றானோம்.
நட்பு நோய் தொற்றியதால்
நாம் நண்பர்கள் என்றானோம்.

Wednesday, July 30, 2008

போதைபொருள்

போதைபொருள் வைத்து
இருப்பவர்களை எல்லாம்
கைது செய்கிறார்களாம்!

பெண்ணே!

முடிந்தால் உன்னை
மறைத்து வை!

நான் தப்பித்து
கொள்வேன்.

இல்லையேல்

உன் புன்னகையையாவது
ஒளித்து வை.

நீ தப்பித்து
கொள்வாய்.

Monday, June 23, 2008

தெரியவில்லை

ஒன்றை இழந்துதான்
மற்றொன்றை பெற
வேண்டுமாம்!

உன்னையே இழந்து விட்டு
வேறெதை பெரிதாய்
பெற போகிறேனோ!

சத்தியமாய் எனக்கு
தெரியவில்லை.

Thursday, June 19, 2008

இளைஞனே உனக்காக

சூரியன் வானில்
எரியும் போது,
மெழுகு வர்த்தியின்
உதவியை நாடுபவனே!

உலகமே உனக்காக
இருக்க,
நீயோ வட்டத்திற்குள்
வாழ்கிறாய்.

சோகத்தால் போசுங்கியவனே
சொர்க்கம் நமக்காக.

நம்பிக்கை என்னும்
அணுவில் தான்
வெற்றியின் சக்தி
புதைந்துள்ளது.

துவண்டு அழுதது
போதும்!
தோண்டி எடுக்க
துணி.

இறந்து பிறப்பதை
விட,
பிறந்து இறப்பது
மேல்.
அதனால் நண்பனே!
கனவினை கருவில்
கலைக்காதே!
அவை வளரட்டும்.
ஒன்றாவது உருபெரும்.

தோல்வி மூட்டைகளை
சுமந்து
நம்பிக்கை முதுகு
குனிந்தவனே

வியர்வை அரும்புகள்
வெற்றி பூக்கக்கள்
ஆகும் காலம்
வெகுதொலைவில் இல்லை.

நடக்க நடக்க
தான் புதரில்
பாதை தோன்றும்.
நீ தோற்க
தோற்க்கதான்,
வெற்றியின் வழி
தென்படும்.

தளராதே!
நம்பிக்கையோடு எழு.

உன்னால் எல்லாம்
முடியும்.
உன்னால் மட்டுமே
உலகம் விடியும்.
தீயவை அனைத்தும்
மடியும்.

ஓடு ஓடு உலகின்
விட்டத்தின் இறுதி
புள்ளி வரை ஓடு.

தடைகளை இடி.
வெற்றியை பிடி.

வாழ்வில் நோக்கத்தை
தேடு.
என்றும் ஆக்கதையே
நாடு.

உலகை உயர்த்த
வந்த உத்தமர்ககளுள்
நீயும் ஒருவன்.
உண்மையை மறந்து
விடாதே.

உனக்குள் இருக்கும்
உன்னை உயிர்ப்பித்து
கொண்டு வா.

அற்ப பதர்களோடு
ஒப்பிட்டு உன்னை
நீயே தாழ்த்தி
கொள்ளாதே.

எரிகின்ற ஞாயிறின்
தழல் நீ.
விரிகின்ற வானின்
நிழல் நீ.

உன் திறமைகள்
நீ அறிவாய்.
உலகம் அறிய
உயிர்த்தெழுவாய்.

நீ தொடுவதற்கு
தான் வெற்றி
சிகரங்கள் தவம்
கிடக்கின்றன.
விழுந்தாலும்
வீறு கொண்டு
வா.

நீ வரும் நாள்
வெகுதூரத்தில் இல்லை.

நான்..

ஓரிடத்தில் நில்லாது
யாரிடத்திலும் சொல்லாது
ஓயாது செல்லும்
நானொரு வழிபொக்கன்.

ஆதி அறியாது
அந்தம் தெரியாது
அமைதியாய் மறையும்
நானொரு வழிபோக்கன்.

காத்திருந்து கவலைகளை
பரிசாக பெறுதலும்
எதிர்பார்த்து ஏமாந்து
போதலுமென் பொழுதுபோக்கு.

என் பாதைகள்
கற்களும் முள்களுமாய்.
என் பயணங்கள்
இரத்தமும் சதையுமாய்.
விடை தெரியாத
இந்த பயணத்தில்
விடுகதையாய் மரிக்கின்றேன்.

அடிபட்டே அலுத்துபோன
இதயம் இப்போதும்
வலியை தாங்க
தயாராய்.

நேசத்தை நெஞ்சோடு
விதைத்து துயரை
அறுவடை செய்யும்
அதிர்ஷ்டசாலி நான்.

அழுதே பழகிபோன
விழிகளுக்கு இனிமேல்தான்
சிரிப்பது எப்படி
என நடிக்க கற்று
தரவேண்டும்.

நிழலுக்காக நான்
மரங்களின் ஓரங்களில்
ஒதுங்கிய போதெல்லாம்
பரிசாக கிடைத்ததோ
பறவையின் எச்சங்கள்.

இதோ இன்றும்
தனியாய் நடந்து
கொண்டே.............

நிலா

இரவென்னும் கவிஞன்
வான தாரகையின்
மேனியில் எழுதிய
கவிதைதான் நிலவோ!

வான மங்கையின்
கரிய கூந்தலில்
சூரிய காதலன்
சூடிய மலரோ!

மாதம் ஒருமுறை
மறைந்து போகும்
மழை துளியோ!
மொழிபிழையோ!

குளிரும் பந்தில்
ஒளிரும் மின்மினியை
ஒளித்து வைத்த
விந்தை தானோ!

மழலையென என்
மடியில் தவழும்
காதல் தேவதையின்
கனவு திலகமோ!

மேகப் போர்வைக்குள்
முகம் புதைத்து
நாணம் கொள்ளும்
ஞான விளக்கோ!

நீ ஓவியமோ
நிழல் காவியமோ
உயிர் தோரணமோ
உடல் தேன்மழையோ

சொல்லடி நிலவே
நீ யாரடி.

மழை பொழுதுகள்

மழை பொழியும்
மந்தார பொழுதுகளில்
நனைவது மண் மட்டுமல்ல.
மண்ணோடு மனமும் தான்.

தலைமீது குதித்து
துணிகளை நனைத்து
துள்ளி ஓடும்
மழைதுளிகள் காண்கையில்
பின்னால் இருந்து
கண்ணை மூடும்
பிள்ளைகளின் ஞாபகம்.

வானம் நோக்கிப்
பார்த்து வாய்
திறந்து மழைநீர்
பருகும் வேளைகளில்
அமுதம் உண்ட
அனுபவம்.

ஜன்னல் வழியே வரும்
சாரலில் ஆயிரம்
பூக்கள் தேனைத்
தெளிப்பது போலோர்
பிரமிப்பு.

போர்வைக்குள் முகம்
புதைத்து தூங்கினாலும்
தட்டி எழுப்பும்
இடி ஓலியில்
தாயின் அதட்டல்.

பட்டுபோன ரோஜாசெடி
மழை உண்டு மொட்டு
விடுகையில் நிறைவேறா
கனவுகள் நிகழ்ந்த
உணர்வு.

இரைச்சலோடு பெய்யும்
மழையின் ஓசையில்
தங்கைகள் வீட்டில்
அடிக்கும் அரட்டையின்
சாயல்.

இவை எல்லாம்
இதயத்தில் இன்றும்
இதமாய் இனிக்கிறது.

Monday, June 16, 2008

காதல் சுவடுகள்

“சாமியை கும்பிட்டு போடா” என கூறிய தாயை ஏளனமாக பார்த்து கொண்டே பூஜை அறைக்கு சென்றான் மோகன்.

“நேரம் ஆச்சு. ரெடியா” அவன் அப்பா சங்கரின் குரலை கேட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம் பா”
என்றான்.

”முதல் நாள் காலேஜ் போற! சீக்கிரம் கிளம்புடா” என்றார் சங்கர்.

அவர் கண்களில் பெருமிதம். இருக்காதா பின்னே?

இத்தனை வருடங்களில் வயலில் இரவு பகல் பாராமல் உழைத்து தான் மகனை பொறியியல் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டார். மோகனும் படிப்பில் மிகவும் கேட்டி. நுழைவு தேர்வு பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால், தானே தெருவுக்கு தயார் செய்தான். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்ணும் பெற்றான். அவன் மதிப்பெண்ணுக்கு இலவசமாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது.

இதுவரை வந்தாயிற்று. எப்படியும் கல்லூரியும் நன்றாக முடித்து விட வேண்டும் என்பதில் வெறி அவனுக்கு.

”அம்மா!நான் வரேன்” என்று விடை கொடுத்து விட்டு கிளம்பினான்.

செருப்பு இல்லாமல் நடந்து வரும் தந்தையை கண்டு மௌனமாக
தன்னை நொந்து கொண்டே நடந்து வந்தான். அவனை கல்லூரியில் சேர்த்து ஆயிற்று.

”அப்பா. நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்” என ஆறுதல் கூறிவிட்டு தந்தையை வழி அனுப்பி வைத்தான்.

அவனை சுற்றி அழகாய் பல பெண்கள். ஆண்களின் வாசம் மட்டுமே அறிந்த அவனுக்கு இது புதியதாய் தோன்றியது.

ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனுக்குள் அணிவகுத்தன. ஆசை,எதிர்பார்ப்பு,உற்சாகம் எல்லாம் ஒரு கலவையாகி ஒருவித உணர்வை அவன் அனுபவித்து இருந்தான்.

முதல் வகுப்பு. அனைவரும் அவரவரை அறிமுகம் செய்து கொள்ள தொடங்கினர். இப்போது மோகனின் தருணம்!

”ஐ ஆம் மோகன். மை ஃபாதர் இஸ் அ ஃபார்மர்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஒருசிலர் அவனை கேலியாக பார்த்தனர். அதை பற்றி எல்லாம் அவன் கவலை பட்டதாய் தெரியவில்லை.

மணிகள் நாட்கள் ஆங்கின. நாட்கள் மாதங்கள் ஆங்கின. மோகனுக்கு
பல நண்பர்கள் முளைத்து இருந்தார்கள்.

அதில் காவியாவும் ஒருவள். அவன் படிப்பு,யாரிடமும் பேசாத அவன் தன்மை, அவனுக்கு தெரிந்தததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் பண்பு என எல்லாவற்றிலுமே அவன் அவளை கவர்ந்து இருந்தான்.

முதலில் அவன் அவளிடம் பிடி கொடுத்து பேசவில்லை. பிறகு மெல்ல மெல்ல இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

”மோகன். நாளைக்கு என் பர்த்‌டே பார்ட்டி இருக்கு, மறக்காம வந்துடு” அன்பு கட்டளை இட்டு போனாள் காவ்யா.

”சரி. வரேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஹாஸ்டல் வார்டன் திட்டுவார்” என சொல்லிவிட்டு கிளம்பினான் மோகன்.

அவள் வீட்டுக்கு சின்ன பரிசு பொருள் ஒன்றை எடுத்து கொண்டு கிளம்பினான்.

முதன் முதலாய் அவள் வீட்டுக்கு செல்கிறான். அவளின் வீடு அவனுக்கு கொஞ்சம் பிரமிப்பையும் கொஞ்சம் பயத்தையும் கூட்டியது. அவளிடம் பரிசை கொடுத்து விட்டு வேகமாக திரும்பி விட்டான்

காலம் அவர்களை இறுதி ஆண்டிற்குள் நிறுத்தி இருந்தது. கல்லூரியே இவர்களை காதலர்க்ளாய் இணைத்து பேசி இருந்தது.

”மோகன். நாம் என் எதிர் காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் திருமணம் செஞ்சுக்க கூடாது?”
என இயல்பாக கேட்ட காவ்யாவை ஆவலோடு பார்த்தான் மோகன்.

”என்ன காவ்யா சொல்றே. நீ தொடுவானம். உன்னை என்னால் ரசிக்க முடியும். ஆனால் உரிமை கொண்டாட முடியாது” என சமாதான படுத்த முயன்றான்.

அவளோ தீர்க்கமாக சொன்னாள்.” நல்லா யோசி. நாம ஒண்ணும் இப்போ மெரேஜ் பண்ண போறது இல்லை. இன்னும் 3 டு 4 இயர்ஸ் இருக்கு.

நீயும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடுவே.
உன்னை என்கிட்டே இருந்து எதுவும் வித்தியாச படுத்தாது” நடை முறையை எடுத்து கூறினாள். அவனும் சரியேன ஒத்து கொண்டான்

நாட்கள் உருண்டு ஓடின. கடமையோடு அவன் காதலும் வளர்ந்து வந்தது.
அவன் கல்லூரி முடித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.

”அம்மா. இன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்தியை நம்ம வீட்டுக்கு கூட்டி வரட்டுமா” என கேட்டுவிட்டு தாயின் பதிலுக்கு காத்து இருந்தான்.

”ஏண்டா. இதை என்கிட்ட கேட்கிறே. கூட்டிட்டு வர வேண்டியது தானே” என்றாள் அவன் அம்மா.

அன்று புதியதாய் வர போகும் விருந்தாலிக்காக அவன் அப்பா,அம்மா,தங்கை என குடும்பமே காத்து இருந்தது. அவள் காரில் அவனுடன் வந்து இறங்கினாள்.

அவர்கள் வீட்டை பார்த்த உடனே முகம் சுழித்தாள். இதை அவர்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை, அவனையும் சேர்த்து. கலைந்த கேசம், அழுக்கு வேட்டி என அவன் தந்தை ஒரு விவசாயியை வார்த்து எடுத்து இருந்தார். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் வெறுப்பை ஊமிஜ்ந்டன. மோகன் நிகழ்வது அறியாமல் திகைத்தான்.
அவள் அவனை தனியே அழைத்தாள்
”மோகன். உங்க வீடும், உங்க வீட்டில இருக்கறவங்களும் இப்படி இருப்பாங்கணு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் நான் நேசித்தது உங்களை மட்டும் தான். நம்ம மெரேஜ் முடிஞ்ச்தும் நாம தனியா போயிடலாம். மாசா மாசம் ஒரு தொகையை உங்க வீட்டுக்கு கொடுத்தூடுங்க. இவங்க கூட என்னால வாழ முடியாது” என குமிறினாள் காவிய.

கை கழுவ வந்த சங்கர் நிலமையை ஓரளவுக்கு உக்கு கொண்டார். தன் மகன் என்ன சொல்ல போகிறான் என வியப்போடு நின்று இருந்தார்.


”இங்கே பார் காவியா. உன்னை எனக்கு ஏழு வருஷமா தான் தெரியும். ஆனா என் குடும்பத்தை 24 வருஷமா தெரியும். என்னை எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வாச்சார்னு தெரியுமா. நான் இஞ்சினியரிங் படிக்கறதுக்காக என் தங்கை +2 வோடு படிப்பை நிறுத்திக்கிட்டா. என் அம்மா தான் தாலியை அடக்கு வச்சு தான் என் ஃபைநல் இயர் எக்ஸ்யாம் பீஸ் கட்டுநாங்க. இன்னைக்கு நான் நல்ல நிலமையில் இருக்கேன் என்பதற்காக நான் அவங்களை கை விட முடியாது. உனக்கு என்னை மாதிரி, என் என்னை விட நல்லா நிறைய மாப்பிள்ளை கிடைப்பாங்க. ஆனா என் அப்பா அம்மாவிற்கு என்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க மாட்டாங்க. நீ என்னை மறந்துடு. நானும் மறந்துடறேன்” என கண் கலங்கியவாறே கூறி முடித்தான்.

இப்போது சங்கரின் கண்களும் நனைந்து இருந்தன.

காவியா ஓடி வந்து மோகனை இறுக்கி கட்டி கொண்டாள்.
”என்னை மன்னிச்சுடுங்க. இது நான் உங்களுக்கு வச்ச சிறு பரீட்சை தான் .நீங்க விண் பன்னீட்டீங்க மோகன். உங்களை கணவானாய் அடைய நான் கொடுத்து வச்சு இருக்கணும். எப்போதுமே மாறாமா இருக்கற உங்க பாசம் போலதான் உங்க காதலும் என்னைக்கும் மாறாது” என கூறிக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

ஒரு நொடியில் எல்லாம் முடிந்து விட்டதாய் எண்ணிய மோகன் அவளை நிமிர்த்தி ”அழாதேடி. எல்லா ஜென்மத்த்திலும் நான் தான் உன் புருஷன்”என சொல்லி மெல்லிய முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.

அவன் குடும்பமே ஆனந்த களிப்பில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் நிற்பதை பார்த்த காவ்யா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.

அவர்களின் காதலின் சுவடுகள் மெதுவாய் எல்லோர் இதயத்திலும் பதிய தொடங்கி இருந்தன

Wednesday, June 11, 2008

கவிதை சிறகுகள்

************************************************************************
என்னோடு பேசாமல் நீ
செல்லும்போதும்,
என்னோடு பேசி
கொண்டே இருக்கும்
உன் காலின்
கொலுஸுகளை
விரும்புகிறேன்.
************************************************************************
உன் மீது
நான் கொண்ட
காதலை
ஒரு குழந்தையை
போல வளர்க்கிறேன்.
கொஞ்சம் திட்டி
குட்டி கொஞ்சி
கெஞ்சி அணைத்து.
***********************************************************************
என்னை தொடும்
முன்வரை தென்றளாக
இருந்த நீ,
என்னை தீண்டும்
போது மட்டும்
ஏன் புயலாக
மாறுகிறாய்.
************************************************************************
நீ நடந்து
போகும் போது
என் நிழல் கூட
உன்னை திரும்பி
பார்க்கும்
************************************************************************
என் கடைசி
கனவு நினவில்
இல்லை.
ஆனால் என்
முதல் நினைவு
நீ தான்.
***********************************************************************
உன் பார்வையில்
நனையும் சுகம்
இந்த மழையில்
நானைவதில்
இல்லை.
************************************************************************
என் கவிதைகள்
உன்னை வந்து
சேராவிட்டால்
உன்னை மறந்து
விட்டேன் என
நினைத்து கொள்ளாதே!
இறந்து விட்டேன்
என புரிந்து
கொள்.
************************************************************************
மழை காலத்தில்
கூட உன்
இமை குடையின்
கீழ் வாழ்வது
தான் பிடிக்கும்.
************************************************************************
எனக்கும்
உன் காலின்
கொலுஸுக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை.
இரண்டு பெறுமே
உன் காலை
தான் சுற்றுகிறோம்.
************************************************************************

வந்துவிடு

எச்சில் முத்தம் பிச்சையாய் இட்டு
என் இதய பாத்திரத்தை நிரப்பிவிடு.
இச்சை தீர என்னை நேசித்து
இதழ்கலாள் இதயத்தை ஈரப்படுத்து.

உறக்கம் இன்றி உதிர்ந்த இரவுகளை
சேகரித்து என்னிடம் சேர்க்க வந்துவிடு
கண்ணீரால் குளித்த என் விழிகளை
உன் புன்னகையால் துவட்டி தந்துவிடு.

உன் இமைகளை என் கண்களாய்
இடம் பெயர்த்து இரவுகளை நீள விடு.
திசுக்களை எல்லாம் பொசுக்கி என்
நாடி நரம்புகளில் தாளமிடு.

பார்வையின் பதிப்பில் வார்த்தைகள்
மரணித்துதால் மௌனத்தால் பேசிவிடு.
நாணம் கொண்டு நிலம் நோக்கையில்
உன் கூந்தல் வாசம் வீசிவிடு.

விடுமுறை தினங்களில் உன் சிகைதனை
சீவி விடும் சிற்றின்பம் தந்துவிடு.
சோகத்தில் நான் வேகும் காலத்தில்
உன் மென்கரத்தால் என்னை தாங்கி விடு.

உன் நிழல் எப்போதும் என்மீது
விழுந்து கிடந்து வாழட்டும்.
உன்னை பிரிந்து ஒருநாள் இருந்தாலும்
உயிர் ரணமாகி சாகட்டும்.

உன் ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம்
சொல்லி கொடுத்து அகராதி எழுதவிடு.
ஒரு சிசுவாய் என்னை நெஞ்சொடு வாரி
அணைத்து கேட்காத தாலாட்டை கேட்க விடு.

அறுபது வயது ஆனாலும் உன்
அருகாமையில் என்னை நனைத்து விடு.
அன்பே நான் பிரிய நேர்ந்தாலும்
ஒரேஒரு கணம் என்னை நினைத்துவிடு.

வள்ளுவம் கூறிய இல்லறம் நாம்
வையத்தில் புரியும் வரம் வேண்டும்.
மனிதராய் பிறந்த அன்றில் நாம்
என்று அகிலம் அறிய வேண்டும்.

அன்பு தலைக்கு அர்ப்பணம்

தன்னம்பிக்கை
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.

ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்

அதனால் தான்
நீ தலை.

உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.

நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.

சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.

துடிப்பு ஆனா நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடி ப்பாய்
கொண்டாய்.

நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.

உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.

நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.

நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.

யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.

ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.

நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.

உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.

நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படை யிலும்
சிறந்தாய்.

வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.

நீ துவண்டு
விடாத வீர
களிறு.

வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.

புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.

எத்தனை தளபதிகள்
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!

சூரிய சிசு

நிசப்தமாய்
நிகழ்கிறது
ஒரு பிரசவம்.

வான கருவறைக்குள்
இருந்து மெல்ல
எட் டி பார்க்கிறான்
சூரிய சிசு.

கொஞ்சம் கொஞ்சமாய்
கண் விழித்து
கடல் நீரில்
தன் முகத்தை
பார்த்து சிரிக்கிறான்.

நெடு நாளைய
நண்பனை கண்டது
போல் புன்னகைக்கின்றன
பூக்கள்.

பூமியில் அழகு
என சொல்லப்படும்
அனைத்தையுமே கதிர்களால்
அனைத்து கொள்கிறான்
ஆதவன்.

வெளிச்சம் புக
முடியாத
மாயிருள் வானத்தில்
கூட தன்னை
நுழைத்து
சிரிக்கிறான் ஞாயிறு.

ஓங்கி வளர்ந்த
மரங்களின் முதுகில்
ஏறி ஒய்யாரமாய்
ஊர்வலம் வருகிறான்.

வெள்ளியாய் இருக்கும்
ஆற்று நீரினை
தொட்டு தங்கமாய்
மாற்றி விளையாடி
போகிறான்.

ஓரிடத்தில் நிற்காமல்
கிழக்கும் மேற்குமாய்
ஓடி கொண்டே
இருக்கிறான்.

அவன் இருத்தலின்
பிரதிபலிப்பு.
உயிருள்ள பொருள்களின்
பிரதிநிதி.

வெளிச்ச மலர்கள்
மொட்டு அவிழ்க்கும்
தோட்டம்.
கனல் குழந்தைகள்
கை கோர்த்து
விளையாடும்
பூங்கா.

வெண்ணிலா அவனை
கண்டு காதலில்
வெட்க படுகிறாள்!
வானமே சிவந்து
கிடக்கிறது.

அவள் முகம்
காண வெட்கப்பட்டு
மெல்ல மேகத்திற்குள்
முகம் புதைக்கிறான்.
முதலவன்.

தன் மரணம்
தான் இதுவென
தெரியாமலேயே!

பிரசவம் மட்டும்
அல்ல! அவன்
மரணம் கூட
நிசப்தமாய் தான்
நிகழ்கிறது.

சேமிப்பு

நீ உடன்
இருக்கும் போதே
புன்னகைத்து
கொள்கிறேன்.

நீ என்னை
நீங்கிய பின்பு
புன்னகைக்க
காரணம்
இருக்காது!

இப்போதாவது
புரிகிறதா?
அது என் தாய்மொழி
அல்ல.
உன் அருகாமையின்
சேமிப்பு என்று!

Monday, June 09, 2008

உயிர் தோழி

ஏதோ ஒரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
நானும் என்
உயிர் தோழியும்.

கணவன் அருகே
கையில் ஒன்றும்
கணவனிடம் ஒன்றுமாய்
மழலை பூக்கள்.

கொஞ்ச நேர மென
கணவன் காது
கடித்து கண்முன்
உதிக்கிறாள்
உயிர் தோழி.

”வகுப்பறை வாசல்
மரத்தடி நிழல்
நூலக பாதை
பக்க சுவர்
திரையரங்கு காட்சி
பேருந்து பயணம்
நண்பர் வீடுகள்
கல்லூரி சாலைகள்
தேர்வு கூடம்
பேருந்து நிறுத்தம்”

என பழைய
நினைவுகளில்
பாதி நேரம்
பார்த்து கொண்டே
கழிய,

ஊமையாய் நிற்கிறாள்
உயிரில் வாழும்
உன்னத தோழி.

”எப்படி இருக்கே”
என நான் கேட்டு
முடிப்பதற்குள்

”நேரமாச்சு” என
கணவன் குரல்
வந்த திசை
நோக்கி எதுவும்
சொல்லாமலே
நகர்கிறாள்



என் வினாவின்
விடை அவள்
போகும் பாதையில்
புல படுகிறது.

”நலமாய் இருக்கிறாள்”
அவள் என்று.

கண்கள் நீரை
நிறுத்தி விட்டு
உதடுகள் பூக்க
தொடங்குகின்றன.

ஏதோவொரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
மீண்டும் சந்திப்போம்
என்ற நம்பிக்கையோடு.

அம்மா

"அம்மா"
பிறக்கின்ற உயிர்கள்
யாவும் பிரிவினை
இன்றி கூறும்
பெயரே.

இருளாய் இருந்த
கருவுக்குள்
உயிர் தந்து
உருவாய் மாற்றியது
நீ தான்.

உலவும் இந்த
உடலுக்குள்
உருலுவது
உன் உதிரம்
தான்.



பசியெடுத்து அழும்
மழலை பருவாங்களில்
பசியாற்றும் தெய்வ
திருமுகமாய் அம்மா

சிறுவயதில்
அம்மாவின் கைகளில்
இருந்து மண்ணில்
எம்பி குதிக்க
முயலும் போது
பிரபஞ்சமே
தோற்றுவிட்ட ஓர்
பிரமிப்பு.

நிலா என்னும்
முதல் காதல்
நங்கையை அழைத்து,
அம்மா பாடும்
பாடல்களில் ஆயிரம்
இசையின் அற்புத
சங்கமம்.

மன்னெடுத்து உண்ணும்
மயக்க பொழுதுகளில்
வாயை திறக்க
சொல்லும் தாயின்
கட்டளையில் ஈர்ப்பு.

என்னை உண்ண
வைத்து பசி
ஆருவதில் உனக்கு
என்னதான் ஆனந்தமோ!

இமை மூட
தாய் இசைக்கும்
தாலாட்டுகளில்
இதயமே உறங்குகின்ற
ஈரத்தின் சாயல்.

பள்ளி செல்லும்
முதல் நாளில்
உயிரில்லா தெய்வங்களை
வணங்க சொல்லும்
உயிருள்ள தெய்வத்தின்
எதிர்பார்ப்பு.

நடை பழகும்
நாட்களில்
என் கரம்
பிடித்து நீ
காட்டிய பாதை.
அதில் தான்
இன்னும் நடந்து
கொண்டு இருக்கிறேன்.

நீ கைப்பிடித்து
”அ” எழுத
கற்று கொடுத்த
காலங்கள்.
நினைத்து பார்த்தால்
விழியில் நீர்
கோலங்கள்.




நான் ஊருக்கு
வரும்போது
நீ தரும்
உபசரிப்பு சொல்லும்
ஒரு தாயின்
தவிப்பை.

தனியான இருட்டறையில்
உன்னை நினைத்து
அழுகையில் கனவில்
வந்து கண்ணீர்
துடைக்கும்
அன்பு கைகள்.

நோயால் நான்
விழுந்தால்
நோன்பு இருக்கும்
தெய்வம் நீ.

”அம்மா” இந்த
பெயரை உச்சரிக்கும்
போதே அலைபாயும்
மனம் அமைதி
ஆகிறது.

இன்னொரு பிறவி
இருந்தால்
உன் இன் மடியில்
தவழும்
வரம் வேண்டும்.

உன்னால் முடியும்

உன்னால் எல்லாம் முடியும்.
உன்னால் மட்டுமே நாளைய
உலகம் விடியும்.

உயர்ந்த நம்பிக்கை
பூண்டு,
உன்னை நீயே
தோண்டு.

முதலில் குப்பைகள்
கிடைக்கலாம்.
தளர்ந்து விடாதே!
விடாமல் தோண்டு.

குப்பைகள் கூட
வைரம் ஆகும்.

தோல்வி என்னும்
துவண்ட சுடுகாட்டுக்கு
மரணம் ஏற்படுத்து.
மடிந்து போகட்டும்.

களிப்பில் இருந்து
விடாதே.

இந்த உலகம்

அதை அதிர்ஷ்டம்
என்று சொல்லிவிடும்.

காக்கையின் எச்சத்தில்
இருந்து முளைத்த
விதைகள் கூட,
கடவுள் தங்கும்
கோவில்கள் ஆகின்றன.

வந்த பாதையை
எண்ணி கவலை
படாதே.
போகும் பாதையை
மட்டும் நினை.

ஓடு.
உலகின் விட்டத்திற்கு
ஓடு.
ஓடி
என்றும் ஆக்கத்தை
மட்டுமே தேடு.

உன் பெயரை
எழுதி கொள்ள
தான் சரித்திரங்கள்
சாகாமல் வாழ்ந்து
கொண்டு இருக்கின்றன.

முயற்சி என்னும்
உதிரத்தால் உன்
பெயரை எழுதி
விடு.

கடுகளவு தீப்பொறி தான்
காட்டையே எரிக்கிறது.
கையளவு உளி தான்
பாறைகளை பிளக்கிறது.

உன்னால் முடியாதது எது?
ஒரு முறை யோசி.

ஒரு விதைக்குள் தான்
ஆயிரம் விதைகள் உறங்கி
கொண்டு இருக்கின்றன.
உணர்ந்து கொள்.

வானவில்லில் மறைந்த
வண்ணமாய் இராதே.
அது மாயை.
மறைந்து விடும்

பட்டம் பூச்சியில் பதித்த
நிறமாய் இரு.
அது ஜீவனுள்ள
உயிரின் சலசலப்பு.

வாயால் வித்தை காட்டும்
சிலந்தியாய் இராதே.
உழைப்பால் உயிர் வாழும்
எறும்பாய் இரு.

இரும்பை கவரும்
காந்தம் போல்,
இதயங்களை கவர
பழகி கொள்.

கரைகளை மோதும்
அலைகளை போல்,
கண்கள் தூங்கினாலும்
கனவில் விழித்திரு.

சோக தீ உன்னை
தீண்டும் வேளைகளில்
தங்கமாய் இருந்து
வலிமை கூட்டி கொள்.

நீயாய் இரு.
உயிர் தீயாய் இரு.


பழுதான
கடிகாரங்கள்
கூட ஒரு நாளைக்கு
இருமுறை சரியான
நேரம் காட்டுகின்றன.

குறைகள் நிரந்தரம்
அல்ல.புல்லாய் புழுதியாய் புழுவாய்
இந்த உலகில் புதைந்து
விடுவாயா?
இல்லவே இல்லை!
பூமியாய் வானமாய் ஆழியாய்
பரந்து விரிந்து
நில்.

துடைத்து ஏறிய
நீ ஒன்றும்
தூசி அல்ல.
வெடித்து சிதறும்
எரிமலை பிழம்பு
அல்லவா?

கடலுக்கு தான்
எல்லைகள் உண்டு.

வானத்திற்கு அல்ல.
நீயும் வானம்
தான்.

இறப்பதற்கே ஆயிரம்
வழிகள் இருக்கும்
போது,


வாழ ஒரு
வழி கூடவா
இல்லாமல் போய்
விடும்?

நம்பிக்கையோடு
வாழ பழகு.

வலி தாளாமல்
குருதி வடிந்து
ஓடினாலும்

வழி தெரியாமல்
நின்று விடாதே.

தொடர்ந்து சென்று
பிறருக்கு வழியை
உருவாக்கு.

வையம்
உன்னை கண்டு
கைகொட்டி சிரித்தாலும்
உழைப்பை
மட்டுமே கருவாக்கு.

நீ வெல்லும்
நாள் வெகு
தூரத்தில் இல்லை.

வந்து விடு.

உன் வரவிற்காக
காத்து இருக்கிறேன்

Friday, May 30, 2008

உதிர்ந்த காதல்

இலக்கணம் தேடி
உனக்காக இயற்றிய
கவிதைகள்
அழுகையில் நனைந்து
அழுகி போனது.

நான் உறங்கினால்
உறங்கி விடுமா
உன் நினைவுகளும்
நம் காதலும்.

நீ
பேசி போன
பார்வைகள்,
வீசி போன
புன்னகை
அனைத்தும் சேமித்து
நரகத்திற்கு
அஞ்சல் அனுப்ப
துடிக்கிறது
மனம்.

இப்போதெல்லாம்
சாத்தான்கள் கூட
அழகாய் தான்
இருக்கின்றன!
பெண் வடிவில்.

குழந்தை போலவே
சிணுங்குவாயே!
அந்த சிணுங்கலில்
தான் சிக்கி
சிதைந்தடி
காதல்.

என் தாய் அழைத்து
போகாத கோவிலுக்கு
கூட நீ
குணமாக வேண்டி
சென்றேனே.
நீ பிழைத்து
கொண்டாய்
பாவம்
காதல் தான்
செத்து விட்டது.

உன் நிழலில்
இளைப்பாரிய
குற்றத்திற்கா
இன்று நிஜத்தால்
சுடுகிறாய்?

கோபிக்க கூட
தெரியாதாவன்
நான்?
என்னை போய் பிரிவால்
சபிக்க எப்படி
மனம் வந்தது
உனக்கு?

தாய்மையின்
சேய்மையை
தந்த நீதான்
இன்று சாவின்
தனலையும்
மூட்டுகிறாய்.

மலரென எண்ணி
முகர்ந்து பார்க்கையில்
முட்களை நீட்டுகிறாய்.

ஒரே ஒரு
முறை நானாய்
இருந்து பாரடி.
என் காதலின்
வலி உனக்கு
புரியும்

Tuesday, May 27, 2008

ஏக்கம்

நீ கடித்து
துப்பும்
நகமாகவே
பிறந்து இருக்கலாம்.

உன் எச்சில்
படும்
பாக்கியமாவது
கிடைத்து இருக்கும்

இலக்கணம்

வானவில் துண்டு
துண்டாய் உடைந்ததை
முதன் முதலாய்
பார்த்தேன்.
உன் வளையல்கள்
உடையும் போது.

தங்க கொலுஸுகள்
உன் பாதததோடு
என்ன பேசி
கொண்டு வருகின்றன?

காலை தழுவும்
பாக்கியம்
கழுத்தை தழுவ
கிடைக்கவில்லை
என புலம்புகிறதோ?

காற்றை கூட
ஏனடி தண்ிக்கிறாய்?

புல்லாங்குழல் என
நினைத்து
உன் நாசி
துளையில் நுழைந்து
ஏமாந்து போகின்றது.

நீ இலக்கணம்
மீறிய இலக்கியம்.
உன்னை முழுவதும்
படித்தால் ஏறி டும்
தலை கணம்

வலிக்க விடு

நீ பரிசாக
கொடுத்த பார்வைகள்.
அவை தான் என்
உயிரை மூடும் போர்வைகள்.

உன் நிழலில்
இளைப்பாற,
என் நிழல் ஏங்கும்.

உன் நினைவுகளை
ஏந்தி கொண்டு
தான் விழிகள்
இறுதியாய் தூங்கும்.

உன் காலடி தடத்தில்
ஆயிரம் கவிதைகள்
பிறக்குமடி.

உன் கண்களின் இடத்தில்
மனம் கவலைகள்
துறக்குமடி.

ஏடுகள் உன் பெயரை
ஏந்தி கொள்ள
தவம் கிடக்கும்.

இருந்தாலும் அதை
என் உள்ளங்கையில்
எழுத தான்
எனக்கு பிடிக்கும்.

வலிகள் கூட
இனிக்கிறது.
நீ தரும் போது.

சில காலம்
இப்படியே வலிக்க
விடு.

அப்போது தான்
உன் வருடலின் சுகம்
எனக்கு புரியும்

நீ

என் நிழலை
கூட சிரிக்க
வைத்தவள் நீ.

என் மரங்களை
எல்லாம் பூக்க
செய்தவள் நீ.

பட்ட மரமாய்
இருந்தவனை
பசுமை வனமாய்
மாற்றியவளும்
நீயே தான்.

என் இரவுகளை
எல்லாம்
வானவில்லாக்கி
நட்சத்திரங்களை
பகலில்வாழ
வைத்து போகிறாய்.

நீ என்பது
எல்லாமே அழகாகிறது.

உன் பேச்சு.
உன் புன்னகை.
உன் நடை.
உன் குறும்பு.
உன் அன்பு.

இப்படி எல்லாமே
அழகாக தெரிகிறது.

இப்போது
உன்னை நேசிக்கும்
நானும் அழகு
ஆகிறேன்.

காதலின் காதலி

நீ ஒருநாள்
தீபம் ஏற்ற
கோவிலுக்கு
வந்தாய்.
விளக்குகள் துள்ளி
குதித்தன
வெண்ணிலாவை கண்டு
விட்டோம் என..

வானம் மண்ணை
கண்டு பொறாமை
படுகிறது.
உன்னையும் உன்
நிழலையும்
தாங்கும் வாய்ப்பு
மறுக்க
பட்டதற்காக.

தமிழில் எதை
வேண்டுமானாலும் படி!
கவிதைகளை தவிர.
ஏனெனில் கவிதையே
கவிதையை படிப்பதை
யாரும் அனுமதிப்பது
இல்லை.

என் மார்பில்
ஒருநாள் சாய்ந்து
பேசி கொண்டே
இருந்தாய்.
"கனக்கவில்லையா என்று
அக்கறையோடு கேட்டாய்“
நானோ
"நீ எழுந்து
விடாதே!
கனத்து விடும்
என்றேன்“

நீயோ வாசலில்
கோலம் போடுகிறாய்.
கோலங்களோ உன்
கைப்பட்ட இறுமாப்பில்
வானை பார்த்து
சிரிக்கின்றன.
வானமோ வயிற்றெரிச்சலில்
மழையை விட்டு
கோலத்தை
கலைக்கிறது.

மழை பெய்யும்
போது குடையை
விரித்து விடாதே.
அது பூமிக்கு
வருவதே உன்னை
தொட்டு போகும்
ஆசையில் தான்

விலகி போகிறேன்

விழிகளை பார்த்தால்
பேசி விடுவோமோ என்று
விலகி போகிறேன்.

உன் விழிகள்
காணும் வேளையில்
மௌனமாய் சாகிறேன்.

அருகில் நீ
இருந்தும் நான்
எங்கோ பார்க்கிறேன்.

நீ கடந்து
செல்லும் வேளையில்
கண்ணில் வியர்க்கிறேன்.

நீ பேசாமல்
இருப்பது எனக்கு
நல்லது!

இருந்தும் நீ
பேச வேண்டும்
என்ற ஆவல்
எனக்கு உள்ளது.

தொடு வானமாய்
இருந்தவன்
இன்று தொலை வானம்
ஆகிறேன்.

நிழலாக கிடந்தவன்
இன்று நெடுந்தூரம்
போகிறேன்.

பிரிவுகள் உறவினை
வளர்த்து விடுமோ
தெரியவில்லை.

உன்னை பிரிந்து
என்னால் உயிர்
வாழ இயலுமோ
ஒன்றும் புரியவில்லை.

நீ நடந்து
சென்ற பாதையை
வெறித்த படி
பார்க்கும் என்
கண்கள்.

உன் சின்ன
பாதங்களின்
தடங்களை தேடி
இன்றும் நான்….

நானும் உன் கொலுசும்

எனக்கும்
உன் காலின்
கொலுசுக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை.

இரண்டு பேருமே
உன் காலை
தான் சுற்றுகிறோம்

தடுமாறும் தமிழ்

கல் தோன்றி
மண் தோன்றா
காலம் முதல்
வல்லினம் ஆக இருந்து
வந்த “க ச ட த ப ற”

உன் இதழ்
வழி வருகையில்
மெல்லினம் ஆகி
நிற்கிறது.

தமிழே அவளை
கண்டு உனக்கும்
தடுமாற்றமா?

துணையாக நீ
வர கடவுளை
வேண்டி விரதம்
இருக்கும் நாள்களில்
பசிக்கு கூட
ருசி இருப்பது
புரிந்தது.

நீ வானவில்லில்
சேராத எட்டாம்
நிறம்.

நீ வந்து
சேராவிடில்
நானோ பட்ட
மரம்.

உண்மையில் நானோ
சிறகு ஒடிந்த
ஒரு பட்டாம்
பூசி.

என்னை சிறையில்
அடைத்து
ஏனடி கண்ணா
மூச்சி.?

தேநீரும் தேவதையும்

அலுவலகத்தில்
தேநீர் இடைவேளை.

என் தேவதை
அவள் தோழியோடு
தேநீர் அருந்த
வருகிறாள்.

அவள் கரம்
பிடிக்க காத்து
கிடக்கின்றன.
தேநீர் கோப்பைகள்.

எல்லா கோப்பைகளையும்
ஏமாற்றி விட்டு
ஒரு கோப்பைக்கு
மட்டும் உயிர்
கொடுக்கிறாள்
என் தேவதை.
அவள் பிஞ்சு
விரல் தொட்டு.

அவள் உதடு
பதித்து உரியும்
போது எல்லாம்
தீர்ந்து போவது
தேநீர் மட்டும்
அல்ல.
என் உயிரும் தான்.


அவள் அதரம்
தொட முடியாத
சோகத்தில்,
தேவதையின் தோழி
கரத்தில் இருந்து
தற்கொலை செய்து
கொள்கிறது.
இன்னொரு கோப்பை.

இதை புரிந்து
கொள்ள முடியாமல்
"கை தவறி
விழுந்து விட்டது"
என்கிறார்கள்.

அவளோ கோப்பைக்குள்
இருக்கும் தேனீரை
பருக,
கோப்பையோ அவள்
எச்சிலை அமுதமென
எண்ணி பருகுகின்றது.

என்ன முரண்பாடு?

மலருள் இருக்கும்
தேனை பட்டாம்
பூச்சி பருகுவது
இயல்பு.

ஆனால் இங்கு
பூவே அல்லவா
தேனை பருகுகிறது?

இன்னொரு பிறவி
இருந்தால் எப்படியாவது
கோப்பையாய் பிறந்து
விட வேண்டும்.
என் தேவதையின்
இதழ் ஈரம்
பட.

அதற்குள் முடிந்து
விட்டதா?
தேவதையின் தேநீர்
திருவிழா.

காத்து இருக்கிறேன்.
தேவதையின் இன்னொரு
திரு விழாவிற்காக.

மழை

இங்கு மழை
பொழிகிறது.

உன்னோடு வானவில்
ரசித்த மழை
நாட்கள் மனதில்
நனைந்து கொண்டு
தான் இருக்கின்றன.

மழையில் நனைவது
எனக்கு பிடிக்கும்
என தெரிந்து
குடை தராமல்
சென்று விடுவாய்
நீ.

கோபம் கொண்டு
நான் ஏன் குடை
தரவில்லை என
கேட்கும் போது
விடு கதையாய்
சிரிப்பாய்.

என் கோபம்
கூட உன்
புன்னகையில்
குழந்தை ஆகும்.

கல்லூரியின் இறுதி
நாளன்று வானில்
மட்டுமா மழை
பொழிந்தது?

நம் இருவரின்
கண்களிலும் தான்.

இன்றும் மழை
பொழிகிறது.

நீ இல்லை.
நானும் இல்லை.
ஆனால் நம்
நட்பின் நினைவுகள்
மட்டும் நனைந்து
கொண்டே இருக்கின்றன.

காதல் பைபிள்

கேளுங்கள் தரப்படும்.
கேட்டேன்.
அவள் தந்ததோ
மறக்க முடியாத
சோகத்தை.

தட்டுங்கள் திறக்கப்படும்.
தட்டினேன்.
திறக்கப்பட்டதோ
கல்லறை கதவுகள்.

தேடுங்கள் கண்டடைவீர்கள்.
தேடினேன்.
கண்டதோ
சிதைந்த என்
வாழ்வை

எப்படி புரியும்?

கிடைத்ததை பெற்று
கொள்ள வாழ்க்கை
ஒன்றும் பிச்சை
இல்லை.

அன்பே எனக்கு
கிடைக்காமல்
போய் விடாதே.

அட்சய பாத்திரம்
பிச்சை எடுத்தால்
அகிலம் தாங்காது.

உன் காதலை
நீயே தந்து
விடு.

உன் இமை
விடியளுக்கு
காத்து இருந்து
அஸ்தமனம் ஆனவன்
நானடி.

உனக்காக உயிரையே
தருவேன் என
தெரிந்தும் தயக்கம்
ஏனடி?

உனக்கே புரியாவிட்டால்
உலகுக்கு எப்படி
புரியும்?

நீதான் என்
உலகம் என்று.

என்ன ஆகும்?

பாதையில் பதிந்த
உன் பாத சுவடுகளை
கண்டு நிலவு
தேவதை திகைக்கிறாள்.

“நினைவு இன்றி
நித்திரையில் ஏற்கனவே
இங்கு வந்து
விட்டோமோ”
என்று.

உன் பாதம்
கண்டதற்கே
இப்படி என்றால்,
பாவம்!
உன் முகம்
கண்டால் என்ன
ஆகும்?

எனக்கென எதுவுமே இல்லையடி

எனக்கும் இந்த
உலகத்திற்கும் ஆன
உறவு உன்னை
பார்த்த பின்பு
தான் தொடங்கியது.

முதன் முதலாய்
பூவின் வாசம்
நுகர வைத்தாய்.

முட்களை கூட
ரசிக்க வைத்தாய்.

இதயம் போலதான்
உன் நினைவுகளும்.

நான் கவனிக்கா
விட்டாலும்.
எனக்குள் துடித்து
கொண்டே இருக்கிறது.

உன் நினைவு
என்னும் போதி
மரத்தின் கீழ்
தான் நான்
ஞானம் பெற்றேன்.

எனக்கென தனி
உலகம் கொடுத்தது
நீ தான்.


புழுவும்
புழுதியும்
படிந்து கிடக்கிறது
உன்னை தாலாட்டிய
என் கவிதை
புத்தகம்.

காற்றில் அதன்
காகிதங்கள் திறக்கும்
போதெல்லாம் உன்
வியர்வையின் வாசம்
என்னை குளிப்பாட்டுகிறது.

அஞ்சன வண்ண
கூந்தலும்,
இருவிழி என்னும்
காந்தமும்,

என் மூளைக்குள்
வேள்வி நடத்தி
போகின்றன.

எனக்கென எதுவுமே
இல்லையடி.

நீ விட்டு
போன நினைவுகளையும்.
பட்டு போன
என் பருவத்தையும்
தவிர

எனக்கென எதுவுமே
இல்லையடி.

தேவதை

மழை காலத்தில்
வெளியில் வந்து
விடாதே.
மழை துளி
மண்ணை விட்டு
விட்டு உன்
மடியில் விழும்.

கோவிலுக்கு மறந்தும்
சென்று விடாதே
தெய்வத்தை விட்டு
விட்டு கூட்டம்
உன்னை தொழும்.

மீன் என எண்ணி
கொக்குகள் உன்
கண்களை கொததி
தின்ன நேரலாம்.
கொக்குகளை கண்டால்
கண்ணை மூடி கொள்.

உதிரம் தோய்ந்த
உன் அதரம்
கண்டு செவ்வானம்
வெட்கப்படும்.
மாலை வேளையில்
சிரித்து விடாதே.

இயற்கையை பழித்திட
பிறந்தவள் நீயா?
என் இதயத்தில்
வாழும் நீ
தேவதையின் சேயா?

மணல் மேடூகள்

முதன் முதலாய்
என் தாயின்
கரம் பிடித்து
நானும்,
உன் தந்தையின்
தோளில் சாய்ந்த படி
நீயும் பள்ளி
சேர்க்கையில் அறிமுகம்
ஆனோம்.

ஒற்றை பின்னலும்,
தெற்று பல்லுமாய்,
சிரித்து விட்டு
போகும் உன் கண்கள்
இன்னும் இதயத்தில்.

முதல் முதலில்
அ எழுத
ஆசிரியை சொல்லி
கொடுக்க,
நீயோ அம்மா
என அழுத படி
கிடக்க,

அமைதியாய் உன்
அருகில் வந்து
நீட்டினேன் சில
ஆரஞ்சு மிட்டாய்களை.
நீயோ வாஞ்சையோடு
வாங்கி கொண்டாய்.

முதன் முதலாய்
நமக்குள் துளிர்க்க
ஆரம்பித்து இருந்தது
ஸ்னேகித செடி.


முதல் நாளில்
அழுகை மூஞ்சியாய்
தெரிந்த நீ,
பிறகு வாயாடி
ஆகி போனாய்.


தினமும் நீ
எனக்காக எடுத்து
வந்த நெல்லிக்காய்,
மாம்பிஞ்சுகள்,
கடலை மிட்டாய்.

இன்று நினைத்தாலும்
பசி ஆறிவிடுகிறது.

என் பிறந்த
நாள் அன்று நான்
அணிந்து வந்த
சட்டையை தொட்டு
பார்த்து ”நல்லா இருக்குடா”
என்றாய்.

அதில் இருந்து
எல்லா விடுமுறையிலும்
அதையே அணிய
ஆரம்பித்தேன்.

”என் ப்ரெண்ட்
தான் பா ஃபர்ஸ்ட் ரங்க்”

என நீ வீட்டில்
பெருமை அடித்து
கொள்வாயே.

இப்போது என்
வெற்றியை உணர
கூட யாருமில்லை.

ஊமைக்கு கூட
உன்னோடு பேச
பிடிக்கும்.

நீ வானுலகில்
இருந்து நட்பினை
சுமந்து வந்த
தேவதை.

உன் மனம்
உணருமோ!
நான் இன்று
நட்பில்லாமல்
சாவதை!


நம் ஐந்தாம்
வகுப்பின் முடிவில்
பள்ளிக்கு அருகில்
இருந்த மணல்
மேட்டில் அமர்ந்து
கொண்டு இருந்தாய்!
”நான் நகரத்தில்
வேற பள்ளி
கூடத்தில் சேருகிறேன்”
என நான் சொன்ன
போது நனைந்து
இருந்தன நம்
நான்கு கண்கள்.

இறுதியாய் உன்னை
கண்டது அப்போது
தான்.

காலத்தில் ஓட்டத்தில்
உன்னை தொலைத்து
விட்டேன்.

இப்போதும் ஊருக்கு
செல்லும் போதெல்லாம்
உன் கண்ணீரால்
நனைத்த அந்த
மணல் மேடூகளை
நான் நானைக்க
மறப்பதில்லை

என் கண்ணீரால்.....

Wednesday, August 29, 2007

அழகான அழுகை


நான் கதறி
அழும் போது
எல்லாம் ஆறுதலாக
நினைத்து கொள்வது
உன்னை தான்.

ஆனால் நீயே
நான் அழ காரணம்
என்றால் என்ன
செய்வேன்?

அழுகிறேன்
எனக்குள்
மௌனமாக

Wednesday, August 22, 2007

கவிதை பெண்ணே!



கவிதை பெண்ணே!

ஏட்டினில் எழுதும்

முன்னே

மறைந்து போனது

என்ன?

கானல் மலரே!

பறிக்கும் முன்னே

முட்களால் குத்தி

காயம் தந்த

மாயம் என்ன?

உன்னை எழுத

நானே வார்த்தை

ஆனேன்.

உன்னை எழுதி

ஏனோ தொலைந்து

போனேன்.

தூரிகை நானாக

வண்ணம் நீயாக

ஓவியம் வரையலாம்

நீரில் கரைந்தாலும்

நிம்மதியாக கரையலாம்

நம்பிக்கை


இடியாய் இதயத்தில்

ஆயிரம் வலி.


வாழ்க்கை வேள்வியில்

முயற்சிகள் பலி.


அவைதான் நம்மை

செதுக்கிய உளி.


கருகிய வாழ்வில்,

கனவினை தெளி.


மீண்டும் வருவோம்.

நம்பிக்கையே துளி

Friday, August 17, 2007

பிறந்த நாள் வாழ்த்து


வாசம் வீசும்
பூவிற்கு வாயிருந்தால்
வாசல் வந்து
உன்னை வாழ்த்தும்.

ஊமையாகி போனதால்
புன்னகை புரிந்து
பூமியில் மிதக்கிறது.

கம்பன் எழுதிய
ஏடுகள் காற்றில்
பறந்து உன்னை
காண வரும்.

நீ பிறந்த
இந்த நாளில்
கவிதைகள் கோடி
தரும்.

இலையுதிர் காலங்கள்
பசுமை மழை பொழியும்.

சூரிய நெருப்பில் இருந்து
பனி வழியும்.

வாழ்த்த வார்த்தைகள்
இன்றி தமிழ்
தடுமாறும்.

உன்னை ஏந்திக்கொள்ள
வானம் பூமியாய் இடம் மாறும்.

வேண்டும் நீ


விடியும் வரை

கதைகள் பேச

விழிக்கு அருகில்

வீற்றிரு பெண்ணே,


மொழிகள் எல்லாம்

சுமை தானே

மௌனம் மட்டும்

பூத்திரு கண்ணே,


மடி மீது தலை

சாய்த்து மழலையாக

நான் தூங்க

வரம் கொடு.

பிணமாகி நான்

தொலைந்தாலும்

உன் கூந்தல் பூவை

வீசி வீடு.


முகில் நீரை எடுத்து

முகம் துடைக்கும்

தேவதையே,


என் கண்ணீர் துளி

உன் காலடியில்

சிந்துவது தெரிகிறதா?


பகலில் குளிரும்

நிலவு நீயே,

என்னை தாலாட்டும்

நீயும் தாயே,


உன் மூச்சு காற்றினால்

ஒரு முகவரி

சொல்லி வீடு.


அந்த வெப்பம்

கை பிடித்து

உந்தன் வேதனை

தீர்த்து வைப்பேன்


உனக்கு மட்டுமே

மாலை சூடுவேன்.

இல்லையேல் மண்ணில்

என்னை மூடுவேன்.


புன்னகை பூ வீசி

என்னை கொன்றவளே,

என்னிடம் மலர் தூவி

எங்கோ சென்றவளே,


இன்னும் உயிரோடு

உனக்காக இருக்கிறேன்.


என்னை எப்போதும்

ஏனோ மறக்கிறேன்.


வலிகள் தாங்கி விட

நெஞ்சில் வலிமை

இல்லையடி


ஒரு வார்த்தை

பேசி விட்டால்

மனம் எரிமலை

பிளக்குமடி.


உன் நினைவுகள்

சுமப்பதும் கூட

சுகமாய் தோன்றுதடி


விளக்கில் விழுந்து

சாகும் வீட்டில்

பூச்சி ஆகிவிட்டேன்.


பிஞ்சு விரல்

தொட்டால்

உயிர் பிறவி

பயன் அடையும்

தீராத ஆசைகள்


உயிர்கள் எதுவும்
இல்லாத தேசத்திலே
என்னோடு நீ
வேண்டும்.
வார்த்தைகள் எல்லாம்
வற்றும் வரை
வாய்மொழி
கோடிபேச
வேண்டும்.
நானம் கொண்டு
நீ நகரும் வேளையில்
என் உயிர்
ஊனமாக வேண்டும்.
நானோ உன்
கண் நோக்க
நீயோ மண் நோக்க
முடிவிலா இந்த
விளையாட்டு தொடர
வேண்டும்.
இப்படி தீராத
ஆசைகள் கோடி
அடி நெஞ்சில்
ஒன்றாவது நடக்குமா?
பதில் சொல்லடி
என் நிலவே

நீயும் கவிதை


கவிதை கேட்டு
வெகு நாள்கள்
ஆகி விட்டது.
பெண்ணே
ஒரே ஒரு முறை
உன் பெயரை
சொல்லி விட்டு போ.

நேசிக்கிறேன்


நீ என்னை
நேசிப்பதற்கே
யோசிக்கிறாய்.

ஆனால் நானோ
உன்னை
நேசிப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்

உனது நினைவுகள்



நான் உடைந்து
விடுவேன் என
தெரிந்தும்,
என்னை உடைத்து
செல்பவளே,
நான் உடையும்
போது ஒழுகும்
உதிரத்தை சுவாசித்து
பார்.
உன் நினைவுகளின்
வாசம் மட்டுமே
அதில் வீசும்

அழகான பூக்காரி

என் வாசலுக்கு
வாசத்தை கொண்டு
வரும் பூக்காரி நீ.

வண்ணங்களை எல்லாம்
பூக்களில் ஊற்றி விட்டு,
நிறம் இழந்து நிற்கும்
வானவில் நீ.

புன்னகையை விலைபேசி
பூக்களுக்கு விற்று விட்டு,
மௌனத்தால் சிரிக்கும்
மழலை பூ நீ.

பூக்கள் இருக்கும்
தோட்டத்திற்கு போகாதே
என சொல்லியும்
கேட்காமல் செல்பவளே,

இங்கே பார்!

மலர் எது
என தெரியாமல்,
வண்ணத்துப்பூச்சிகள்
உன் கன்னத்தை
மொய்க்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகளுக்கு
இந்த நிலமை என்றால்,
பாவம் பூக்கள்!

நீ கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்
வண்ணத்துப்பூச்சி தான்
வருகிறதோ என
எதிர்பார்த்து ஏமாந்து
போகின்றன.

பூக்களுக்கு கூட
சிரிக்க கற்று கொடுத்தவளே,

எனக்கு மட்டும்
ஏனோ அழ கற்று
கொடுக்க முயல்கிறாய்?

உன் நினைவு
வாசத்தில்,
நம் காதல்
தேசத்தில்

உனக்காக நான்………………